தாய ரோடு தந்தையார் பேசக் கேட்ட சங்கிலியார் "ஏயு மாற்ற மன்றிது; வெம் பெருமா னீசன் றிருவருளே மேய வொருவர்க் குரியதியான்; வேறென் விளையு?" மெனவெருவுற் றாய வுணர்வு மயங்கிமிக வயர்ந்தே யவனி மிசைவிழுந்தார். | 211 | (இ-ள்.) தாயரோடு....சங்கிலியார் - தமது தாயாரும் தந்தையாரும் இவ்வாறு பேசுதலைக் கேட்ட சங்கிலியார்; ஏயும்....வினையும்? என - இது என்பாற் பொருந்தும் பேச்சன்று; எம்பெருமானது திருவருளே முற்றும் பொருந்திய ஒருவருக்கு நான் உரியது; இதனின் வேறாக இவர்கள் நினைப்பது என்னாய் வினையுமோ என்று; வெருவுற்று....விழுந்தார் - வெருக்கொண்டு ஆகிய உணர்வு மயங்கி மிகவும் மூர்ச்சித்து நிலத்தின்மேல் விழுந்தார். (வி-ரை.) தாயாரோடு தந்தையார் பேச - தாயரும் தந்தையரும் பேசுதலை. ஏயும் மாற்றம் - தம்பாற் பொருந்தும் சொல். எம்பெருமான்....உரியதியான் - இது முன்னையநிலை யறிவு பெற்ற தன்மையினால் சங்கிலியார்தாமே யறிந்த (3364) நிலையிற் பெற்ற அறிவு. மேல் 3367 பார்க்க. இச்சொல் ஏற்றதன்று என்று துணிந்தமைக்குக் காரணம் கூறியபடி. திருவருளே மேய - முழுதும் திருவருளே அடைந்த. உரியது யான் - உரியனியான் என்னாது, உரியது என்று அஃறிணையிற் கூறியது நாயகி, தன்மை நாயகனது உடைப் பொருளாகவே வைத்துக் கொண்டொழுகும் தமிழ் வழக்குப் பற்றி என்க; "அந்தமுறை யாலவர்க்கே யுரியது நான்" (1297) என்று திலகவதியம்மையார் கூறிய நிலையும், ஆண்டுரைத்தவையும் பார்க்க. வேறென் விளையும் என - இவர் கூறிய மாற்றத்தினாலே வேறே எவ்வாறு என்ன தீமை விளையுமோ என்றஞ்சி; வேறென் விளையும் என்ற அதனின் வேறாக எது விளையும் ஒன்றும் விளையாது என்று எதிர்மறை வினாக்குறிப்புப்பட உரைத்தலும் குறிப்பு. |
|
|