பாங்கு நின்ற தந்தையார் தாயார் பதைத்துப் பரிந்தெடுத்தே ஏங்கு முள்ளத் தினராகி, "யிவளுக் கென்னோ வுற்ற?" தெனத் தாங்கிச் சீத விரைப்பனிநீர் தெளித்துத் தைவந் ததுநீங்க வாங்கு சிலைநன் னுதலாரை "வந்த துனக்கிங் கென்?"னென்றார். | 212 | (இ-ள்.) பாங்கு....பரிந்தெடுத்தே பக்கத்தில் நின்ற தந்தையாரும் தாயாரும் (அது கண்டு) பதைத்துப் பரிவுடன் அவரை எடுத்தே; ஏங்கும்...தாங்கி - வருந்தும் உள்ளத்தை உடையராய் இவளுக்கு என்னோ வந்ததுழு என்று கலங்கி அவரை அணைத்துத் தாங்கி; சீத...நீங்க - குளிர்ந்த மணமுடைய பனிநீரைத் தெளித்துத் தடவியிடவே அவரது மயக்கமும் அயர்ச்சியும் நீங்க; வாங்கு...என்றார் - வளைந்த வில் போன்ற நல்ல நுதலினையுடைய அவரை "இங்கு உனக்கு வந்தது யாது?" என்று கேட்டார்கள். (வி-ரை.) பாங்கு நின்ற - தந்தையாரும் தாயாரும் முன் கூறியவாறு பேசும் போது சங்கிலியார் அடுத்து நின்று கேட்டிருந்தார் என்பது. இதனை முன்பாட்டிற் "பேசக் கேட்ட சங்கிலியார்" என்ற இடத்து வெளிப்படக் கூறாது விட்டனர், இவர் பக்கத்து நின்றதனை அப்பெற்றோர்கள் உட்கொண்டாரிலர் என்பதுணர்த்துதற்கு. பதைத்தல் - பரிதல் - ஏங்குதல் - தம்மால் அன்பு செய்யப்பட்ட பொருளின் கண் சடுதியில் நேரும் சோர்வு கண்டபோது அன்புடையார்பால் நிகழும் நிகழ்ச்சிகள்; பதைத்தல் - அச்சத்தால் உடம்பு முழுதும் குலுங்கும் மெய்ப்பாடு - நடுக்கம்; பரிதல் - இரங்குதல்; ஏங்குதல் - மனம் வருந்துதல்; புறநிகழ்ச்சியாகிய பதைத்தல் கண்டவுடன் முதலில் நிகழ்வது; அதன் பின்னரே அதனை எண்ணுதலும் பரிவு கூர்தலும் உளவாகும்; ஆதலின் அம்முறையில் வைத்தார். எடுத்தே தாங்கி - கீழே விழுந்தாரை முதலில் எடுத்துத் தாங்குதல் முதற்கண் செய்யத்தக்க உதவி; First Aid என்பர். நீர் தெளித்துத் தைவந்து - முகத்தில் குளிர்ந்த நீர் தெளித்தலும் கண்களையும் முகத்தையும் தடவுதலும் மூர்ச்சை யடைந்தாரை மீள உணர்ச்சி வரும்படி செய்யமுதலிற்செய்யும் தீர்வு முறைகள்; குளிர்ந்த நீர் தெளித்தலால் இரத்த ஓட்டத்தை உண்முகப்படுத்தி அதிகரிக்கச் செய்து அதன் மூலம் உணர்ச்சிக்குரிய நரம்புக்கருவிகளை ஊக்கப்படுத்துதல் மருத்துவ நூலோர் மரபு: தைவருதல் - நீர் தெளித்தலால் உளதாகும் பயனைப் பரவச் செய்தலும் உணர்ச்சி குன்றிய பகுதிகளை ஊக்குதலும் குறித்தது. தந்தையார் தாயார் பதைத்துப் பரிந்தெடுத்தே ஏங்கு முள்ளத்தினராகி - அப்பூதி நாயனாரின் மகனார் மூத்த திருநாவுக்கரசு, அரசுகளது திருவமுதுக்காகக் கொணர்ந்த இலையினைத் தாயார்பால் வைத்துத் தளர்ந்து படிமேல்வீழ்ந்தபோது அதுகண்டு இவ்வாறே அவரது தாயாருந் தந்தையாரும் உளம் - பதைத்தனர்; உற்று நோக்கி விளங்கிய குறிகளால் விடத்தினால் வீந்தானென்று துணிந்தனர்; ஆனால் துளங்குத லின்றித் தொண்டர் அமுது செய்வதற்குச் சூழ்வாராயினர் (1810); அங்கு அன்பரை அமுதூட்டும் ஆர்வமாகிய சிவன் பணியே அவர்களை விழுங்கி முன்னின்றது, அதனில் உலகியல் உணர்வாகிய பற்றுக்கள் தாழ்ந்து மறைந்தன; ஆதலின் அவர்கள் துளங்குத லிலராய் மேலே தொழில் செய்தனர். ஆண்டுரைத்தவை பார்க்க. இங்கு அவ்வாறு சிவன்பணி ஒன்றும் முன்னிற்காமையின் உலகப் பற்றாகிய மகண்மை ஆசையொன்றே நின்றது; ஆதலின் இத்தந்தையார் தாயார் வருந்தினர்; மேல்வரும் இவர்களது செயலும் அவ்வளவிலே நின்றமைந்தன; "மற்ற மாற்றம் மறைத்தொழுக" (3368); "மனமருண்டார்" (3369); "அஞ்சி நங்கை செயலேயுடன் படுவார்" (3370) (3371) "ஈசர்க்கேற்ற பணிவிரும்பிக் கன்னிமாடத்தில் உறைகின்றீர்" என்று கண்கணீர்த் தாரை ஒழுக, உரைக்கின்றார், "போனார் தம்பதியில்" (3375) என்று வருவன வெல்லாம் காண்க. இவ்வேறுபாடுகள் உய்த்துணரத் தக்கன. தந்தையார் தாயார் - ஆர் - விகுதிகள் சங்கிலியாரை மகளாராகப் பெற்ற பெருந்தவச் சிறப்புணர்த்தின. என்னோ உற்றது - என்னோ - யாது தீமையோ?; என் - நேர - என்று பிரித்து என்ன நோய் என்றலுமாம். வந்தது - இடநோக்கி, உணர்வு மயங்கி அயர்ந்து விழுதற்குக் காரணமாக நேர்ந்தது என்ற பொருள் தந்தது. அது நீங்க - அது - உணர்வு மயக்கம் - அயர்ச்சி - இவற்றால் படிமேல் வீழ்ந்த நிலை; நீங்குதல் - முன்னை உணர்வுடன் எழுதல் வாங்கு சிலை நன்னுதலாரை - வாங்குதல் - வளைதல்; வளைந்த வில் போன்ற நெற்றியுடைமை பெண்களிற் சிறந்த அழகும் அமைப்பும் குறிப்பது; இங்கு முகத்தில் நீர் தெளித்துக் கண்களைத் தைவந்தமையால் அதன் விளைவாக நுதல் கோட்டி (வளைத்து) எழுந்தனர் என்ற குறிப்பும் தந்து நின்றது; நுதல் வளைத்தல் கருத்து மாறுபாடு குறிப்பதுமாம் என்பர். வாங்கு நுசுப்பு நுதலாரை - வாங்கு நுசுப்பின் மகளாரை - என்பனவும் பாடங்கள். |
|
|