என்று தம்மை ஈன்றெடுத்தார் வினவ மறைவிட் டியம்புவார் "இன்றென் றிறத்து நீர்மொழிந்த திதுவென் பரிசுக் கிசையாது வென்றி விடையா ரருள்செய்தா ரொருவர்க் குரியே னியானினிமேற் சென்று திருவொற்றி யூரணைந்து சிவனா ரருளிற் செல்வ"னென. | 213 | (இ-ள்.) என்று....இயம்புவார் - தம்மைப் பெற்றெடுத்த தந்தையாரும் தாயாரும் முன்கூறியபடி கேட்கத், தங்கருத்தை மறையாமற் சொல்வாராய்; இன்றென்....இசையாது - இன்று என்னைப் பற்றி நீர் சொல்லியவை எனது தன்மைக்குப் பொருந்தாது; வென்றி....உரியேன் யான் - வெற்றி பொருந்திய இடபத்தினை உடைய சிவபெருமானார் திருவருள் செய்யப் பெற்றாரொருவர்க்கு நான் உரியவள்; இனிமேல்....செல்வன் என - "இனிமேற் போய்த் திருவொற்றியூரிற் சேர்ந்து சிவபெருமானாரது திருவருள் வழியிலே செல்வேன்" என்று சொல்ல. (வி-ரை.) மறை விட்டு - இங்குத் தந்தை தாயர் கேட்ட வினாவுக்குத் தமது நாயகனைப் பற்றி விடைகூறவேண்டி வருவதால் நாணத்தால் அதனை மறைத்தலை விட்டு; இஃது இந்நாட்டில் தமிழ் மக்களின் நாகரிக இயல்பு என்பது தமிழிலக்கணம் அகப்பொருணூல்களாலுமறிக; தலைவியின் கருத்தினை உயிர்த்தோழி தானும் நாண நாட்டம், நடுங்க நாட்டம் முதலிய வகைகளால் உய்த்துணர்தலன்றி, நேரே மொழிய வாராத நிலைகளும், தலைவி கூற்றுக்களாக வருவனவற்றின் நுட்பங்களையும், குறிப்பறிதல் முதலிய துறைகளின் நயங்களையும் உணர்தல் ஈண்டுப் பயன் தரும். மறைவிட்டு இயம்புவார் - ஆனால் இங்குச் சங்கிலி அம்மையார் அவ்வாறுள்ள பெண்ணியல்பின் நீங்கியவரோ? எனின், அற்றன்று; தமது வாழ்க்கையின் உள்ளுறையினையே மாறுபடுத்தத்தக்க கேடு வரும்போது உண்மையை வெளிப்படக் கூறும் நிலை யிஃது ஆதலானும், கேட்பவர் தாயும் தந்தையுமே யாதலானும் இஃதொக்கு மென்பது; இவரது பெண்தன்மையின் சிறந்த பண்புகளை மேல்வரும் வரலாற்றின் பல பகுதிகளிலும் கண்டு கொள்க; "அவர்தாம் திருவாரூரின்கண் மகிழ்ந்துறைவது" (புரா. 242), "பாங்கியர்க்கு மொழிய" (புரா. 254), "எதிர்விளம்பார் ஒன்றியநா ணொடும்மடவா ருடனொதுங்கி உட்புகுந்தார்" (புரா. 256); "பரவியே னிது கண்டேன்" (புரா. 261) என்பன முதலியவை காண்க. இன்றென்...இசையாது - வேறெவனுக்கும் ஏற்கும்படி மணமுடித்துக் கொடுத்தல் என் தன்மைக்குப் பொருந்தாது என்பதாம்; இதனை மணமுடித்தல் என்னாது "நீர் மொழிந்தது" என்று கூறிய நிலை, பெண்ணியல்பாகிய நாணின் பகுதியாதலன்றியும் வேறொருவனின் மணம் என்றதனை வாயாலுஞ் சொல்லாகாது என்ற கற்பின் பகுதியுமாம். ஒருவர்க் குரியேன் - இது இசையாது என்றதற்குக் காரணம் கூறியவாறு; முன்னமே உரியேனாய் விட்டமையால் இசையாது என்றபடி; ஒருவர் - ஒப்பற்றவர் என்ற குறிப்புமாம். அருள் செய்தார் ஒருவர்க்கு உரியேன் - எனது உரிமை நாயகர் முன்னமே சிவபெருமானால் அருளிச் செய்யப் பட்டுள்ளார் என்றது செய்தார் என்ற இறந்த காலக் கூற்றின் குறிப்பு. இனிமேல்...செல்வன் - இனிமேல், அத்திருமணம் கூடும் வரையில் திருவொற்றியூரில் அணைந்து அருள்வழியே இருந்து அருள்வழியே அதனைப் பெறுவேன் என்பதாம். யான் - உரியேன் என்றும், (ஆதலின்), யான் செல்வேன் என்றும் இருவழியும் காரணப் பொருள்படக் கூட்டுக. என - என்று சொல்ல. |
|
|