அந்த மாற்றங் கேட்டவர்தா மயர்வும் பயமு மதிசயமும் வந்த வுள்ளத் தினராகி மற்ற மாற்ற மறைத்தொழுகப் பந்த நீடு மிவர்குலத்து நிகரா மொருவன் பரிசறியான் சிந்தை விரும்பி மகட்பேச விடுத்தான்; சிலருஞ் சென்றிசைத்தார். | 214 | (இ-ள்.) அந்த மாற்றம்...உள்ளத்தினராகி - அந்த மாற்றத்தினைக் கேட்டு அத் தந்தையாரும் தாயாரும் அயர்ச்சியும் பயமும் அதிசயமும் பொருந்திய மனத்தை யுடையவர்களாகி; மற்ற...ஒழுக - மற்ற அம்மாற்றத்தைப் பிறர் அறியாமல் மறைத்து ஒழுக; பந்த நீடும்...பரிசறியான் - பலவழிகளிலும் இவர்களுடன் குலப்பந்தமிகுந்து இவர்களது குலத்தால் ஒப்புடைய ஒருவன் இத்தன்மையறியாதவனாய்; சிந்தை விரும்பி மகட்பேச விடுத்தான் - மனவிருப்பத்தோடும் மகளை மணம் பேசச் சிலரை அனுப்பினான்; சிலரும் சென்றிசைத்தார் - (அவ்வாறு விடுக்கப்பட்ட) அந்தச் சில மக்களும் அவ்வாறே சென்று சொன்னார்கள். (வி-ரை.) மாற்றம் - சொல்; விடை; தாம் எண்ணிய நிலையினின்று மாறிய தன்மை என்ற குறிப்பும் காண்க; தமது சுற்றப்பாசத் தொடர்பாகிய தன்மையினின்று மாறும் பண்பு என்றதும் குறிப்பு. மேலும் மற்ற மாற்றம் என்பது காண்க. அயர்வும் பயமும் அதிசயமும் - "இது என் பரிசுக்கு இசையாது" என்று தொடர்பறக் கூறியமையால் அயர்வும்; "ஒருவர்க்குரியேன்" என்றமையால் அதனை யறியாது நாம் சொன்னவை சிவாபராத மாதலின் பயமும்; "இனித் திருவொற்றியூர் சேர்ந்து சிவனருளிற் செல்லேன்" என்றது கேட்க அதிசயமும் முறையே விளைந்தன. மற்ற மாற்றம் மறைத்தொழுக - உலகினர்க்கு இவை விளங்கலாகாமையின் உலகரறியாதபடி மறைத்து ஒழுகினர்; அம்மையார் விரும்பியவாறு திருவொற்றியூரில் அவரை வைத்துப் பிரிய மனம் ஒருப்படாமையானும் மறைத் தொழுகினர் என்க. பந்தம் நீடும்...ஒருவன் பந்தம் - சுற்றத் தொடர்பு மட்டும்; பந்தம் - பாசத் தொடர்பு என்ற குறிப்புமாம். நீடுதல் - பலவாற்றானும் நீண்டு செல்லுதல்; குலத்து நிகராம் - குலப்பெருமையளவில் ஒப்புடையவன்; முன்னர் "அருள் செய்தார் ஒருவர்" (3367) என்றதுடன் இதனை ஒப்புநோக்கி வேற்றுமை கண்டு கொள்க. பரிசறியான் - பரிசு - அம்மையாரின் பண்புகள். அவையாவன: "மரபில் வருஞ் செயலே யன்றித் தெய்வ நிகழ்தன்மை, பாரி - லெவரு மதிசயிக்கும் பண்பும்" (3363); குணமும் - மண்ணுளோர்க்கிசையும் படிவமன்றி மேற்பட்ட பரிசாம் பான்மையும் (3364); முன் (3364 - 3367) உரைத்த நிகழ்ச்சியும் முதலியவை. இவற்றுள், முன்கூறிய நிகழ்ச்சியினை உலகரறியாது மறைத்து ஒழுகினர் பெற்றோராதலின் அதனைப் பிறர் அறியாமை இயல்பேயெனினும், அதன் முன்னர்க்கூறிய பண்புகளும் பரிசும் உலகரறியக் கிடந்தமையால்இவனும் அறிந்து தன்தகைமையேலாமை தெரிந்து அதனிற் கருத்துச் செலுத்தாது ஒதுங்க வேண்டியவன் எண்ணாது கருமந் துணிந்தமையின் அறியான் என்ற இக்குறிப்புப்படக் கூறினார்; அம்மையார் பரிசேயன்றித் தன்பரிசுமறியான் என்பதும் குறிக்கப் பரிசு என்று பொதுமையிற் கூறினார்; அறியாது துணிந்த இச்செயல் தன் உயிருக்கே யன்றித், தன்னேவல் வழிச்சென்றோர் உயிர்க்கும் கேடாய் விளையத்தக்க பரிசும் அறியான் என்ற குறிப்புமாம். சிந்தை விரும்பி மகட் பேச விடுத்தான் - மகட்பேச - மகனை மணம் பேச; சிந்தை விரும்பி - மகட்பெற்றோரிசைவு பெறும் வரை சிந்தையில் வைத்து விருப்பம் செலுத்துதல் மரபன்றென்பது குறிப்பு. விடுத்தான் - அம்மையாரின் பெற்றோரிடத்துச் சிலரைவிடுத்தான் என்று விரித்துக் கொள்க; விடுத்தார் என்பது பாடமாயின் விடுக்கப்பட்டாராகிய என்க. அவனது ஊரும் பேரும் முதலியவை கூற வேண்டாமையின் ஆசிரியர் கூறாது விடுத்தனர்; ஒருவன் பரிசறியான் என்ற இலேசானும் அவை ஈண்டு வேண்டத் தகாதனவென்பதும் அறியவைத்தார். சிலரும் - அவ்வொருவனால் விடுக்கப்பட்ட அந்தச் சிலரும் என்க; ஒருவன் என்றமையால் அவன் உற்றார் பிறரெவரையும் உசாவினவனன்று என்பதும்; சிலர் என்றமையால் மூதறிவோர் பலரது சார்பின்று என்பதும் குறிப்பு. சென்று இசைத்தார் - தந்தையார்பாற்சென்று தாம் வந்த செய்தியை இசைத்தார் என்று விரிக்க. சிந்தை மகிழ்ந்து - என்பதும் பாடம். |
|
|