பாடல் எண் :3369

தாதை யாரு மதுகேட்டுத் தன்மை விளம்பத் தகாமையினால்
ஏத மெய்தா வகைமொழிந்து போக்க, வவராங் கெய்தாமுன்
தீதங் கிழைத்தே யிறந்தான்போற் செல்ல விடுத்தாருடன்சென்றான்;
மாத ராரைப் பெற்றார்மற் றதனைக் கேட்டு மனமருண்டார்.
215

(இ-ள்.) தாதையாரும்...போக்க - சங்கிலியம்மையாரது தந்தையாரும் அதனைக் கேட்டு இதுபற்றிய இங்கு நிகழ்ந்த முன்கூறிய தன்மைகளினால் இசையாமை வெளிப்படச் சொல்லக்கூடாமையினாலே, வந்த அவருக்கு மன வருத்த முதலிய சங்கடங்கள் வாராத வகையினாலே வேறு மொழிந்து அவர்களைச் செல்லவிடுக்க; அவர் ஆங்கு எய்தாமுன் - அவர்கள் தம்மைவிடுத்த அவனிடத்தே சென்று சேர்வதற்கு முன்னே; தீது அங்கு இழைத்தே யிறந்தான் போல் - அங்குத்தான் ஒரு பெருந்தீங்கு புரிந்ததனால் இறந்து பட்டவன் போல; செல்லவிடுத்தாருடன் சென்றான் - (அவன்) தான் செல்லும்படி விடுத்த அவர்களுடனே இறந்தொழிந்தான்; மாதராரை...மனமருண்டார் - அம்மையாரைப் பெற்றோர்களும் மற்ற அதனைக் கேட்டு மனம் மருட்சியடைந்தனர்.
(வி-ரை.) தன்மை - இங்குச் சங்கிலியார்பால் உற்ற தன்மைகள்; முன் கூறிய பண்பும் குணமும் நிகழ்ச்சிகளும் ஆகியவற்றின் தொகுதி.
விளம்பத் தகாமை - மாற்றம் மறைத்தொழுகிய (3368) காரணத்தாற்சொல்லக்கூடாமை.
ஏதம் எய்தாவகை மொழிந்து போக்க - இஃது உலகியல் வழக்கு நெறி; தீமைபயக்காதவாறு உண்மையை ஒருவாறு மறைத்துப் பிறிது மொழியால் மறுத்தல்; ஏதம் - உறவினருள் நேரும் பிணக்கும் அதனால் வரக்கூடிய கேடுகளும்; இது பொய்ம்மை நெறியாகாதோ எனின் தீமைபயவாது குற்றமற்ற நன்மைபயத்தல் கருத்தாகலின் ஆகாதென்பது; "பொய்மையும் வாய்மை யிடத்த, புரைதீர்ந்த, நன்மை பயக்கு மெனின்" (குறள்); அப்பூதி நாயனார் "இப்போ திங்கவனுதவான்" (1814) என்றதுபோல வருவன இறைஅன்புபற்றி நிகழ்வன இக்குறிப்புடையன; உலகியல் நல்வாழ்க்கை நெறியில் ஒப்புரவுபற்றி இவ்வழக்கு மிகவும் கையாளத்தக்கது; "ஈகை யரிதெனினு மின்சொலினு நல்கூர்தல், ஓகோ கொடிது கொடிதம்மா!" என்று இதனையே விரித்தல் காண்க.
அவர்....சென்றாள் - விடுத்தார் தம்மை விடுத்தானிடம் சென்று சேர்ந்து சொல்வதன்முன் அவன் அவருடனே இறந்து பட்டான். அவர்கள் அங்குச் சேர்வதில்லையாதலின் எய்துமுன் என்னாது எய்தாமுன் என்றார்.
ஆங்கு - விடுத்தானிடம்; இவ்வாறன்றி எய்த உடனே இறந்தான் என விரைவுப் பொருளில் வந்தது; மருந்து தின்னாமுன் நோய் தீர்ந்தது என்புழிப்போல - என்பர் ஆறுமுகத்தம்பிரானார்.
தீது அங்கு இழைத்தான் போல் - அங்கு - சங்கிலியார் திறத்து; மிக்க தீதுபட ஒரு செயல் இழைத்தாரே மரண தண்டனைக்குள்ளாகுவர்; இங்கு அவன் மரணத்திற் குள்ளாயினமையால் தீதிழைத்ததன் பயனாக இறந்தான் என்னும்படி தோன்றிற்று என்பார் போல் என்றார்; இழைத்தான் போல் - அவன் செயல் அங்குச் சாராமையானும், தீமை என்று அறியாமையானும் போல் என்றார்; அறியாது உண்ணினும் நஞ்சு கொன்றே விடுமாதலின் தீமை இழைத்ததே போலப் பலன் தந்தது என்க.
செல்ல விடுத்தாருடன் சென்றான் - விடுத்தார் - விடுக்கப்பட்டார்; தன்னால் விடுக்கப்பட்ட அச்சிலருடன் தானும், இறந்தான்; சென்றான் - இங்கு இயமனூருக்குச் சென்றான் - இறந்தான் - என்ற பொருளில் வந்தது; மங்கல வழக்கு; எண்ணத்தகாததை எண்ணியதும், அதனை ஏவல் வழி உடன்பட்டுச் சொல்லியதும் ஒன்று போலவே குற்றங்களாம்; ஈண்டுச் சிவாபராதமும் கற்புநிலை பற்றிய அபராதமும் கூடி உயிர் நீக்கும் தண்டத்திற் குள்ளாக்கின; பேசத்தகா வார்த்தை, உய்ய வேண்டு நினைவுடையா ருரையார்" என மேற்கூறுதல் குறிக்க.
மாதரார் - சங்கிலியம்மையார்.
உடன் சென்றார் - என்பதும் பாடம்.