"தைய லார்சங் கிலியார்தந் திறத்துப் பேசத் தகாவார்த்தை உய்ய வேண்டு நினைவுடையா ருரையா" ரென்றங் குலகறியச் செய்த விதிபோ லிதுநிகழச், சிறந்தார்க் குள்ள படிசெப்பி, நையு முள்ளத் துடனஞ்சி, நங்கை செயலே யுடன்படுவார். | 216 | (இ-ள்.) தையலார்....என்று - தையனல்லாராகிய சங்கிலியாரைப் பற்றிப் பேசத்தகாத வார்த்தையைச் சாவாமல் உய்ந்திருக்க வேண்டுமென்னும் எண்ணமுடையவர்கள் பேசமாட்டார்கள் என்று; அங்கு உலகறிய - அங்கு உலகர் அறியும்படி; செய்த....நிகழ - இறைவர் அமைத்த விதிபோல இது நிகழ்ந்ததாக; சிறந்தார்க்கு....செப்பி - தங்குலத்திற் பெரியோர்களுக்கு நிகழ்ந்தனவற்றை உள்ள படியே சொல்லி; நையும்...உடன்படுவார் - வருந்திய உள்ளத்துடனே அச்சமடைந்து நங்கை சங்கிலியார் உரைத்த செயலினையே உடன்பட்டுச் செய்வாராகி, (வி-ரை.) "தையலார்...உரையார்" என்று - இது உலகர் அறிந்துய்ந்து செல்லத்தக்கதொரு விளக்கமாகிய உண்மை என்றபடி; உய்ய வேண்டும் நினைவு உடையார் - உலகில் உயிருடன் இருக்கவேண்டும் என்ற எண்ணமுடையவர்கள்; உய்தல் - இங்குப் பிழைத்து உயிருடனிருத்தல் என்ற பொருளில் வந்தது; இதனை உடன் பேசினால் அதன் பயனாக இறப்போம் என்பதுறுதியாதலின், அவ்வார்த்தை பேசாமலிருந்து இன்னும் சிலகாலம் உயிர்வாழ்வோம் என்று முடிவு கண்டு; நினைவுடையார் - தகாத வார்த்தை - உரையார் - என்க. அங்கு உலகு அறியச் செய்த விதிபோல் - உலகு - உலகர்; அறிவுறுத்திய விதிவாக்கியமாகிய உண்மை. இது நிகழ - இது - இந்நிகழ்ச்சி; மகட் பேசச் சிலரை விடுத்தவன் தானும் அச்சிலரும் ஒருங்கிறத்தல். அறியச் செய்த விதிபோல் இது நிகழ - இது நிகழ்ந்தது அவ்வவர் கன்மானுபவமேயன்றி உலகை அறிவுறுத்தற் பொருட்டன்று; ஆனால் அதனால் உலகறிவுறுத்தப்பட்டது; ஆதலின் அறியச் செய்த விதி போல நிகழ என்றார். சிறந்தார் - குல மரபிற் சிறந்த பெருமக்களும் அறிவின் முதியோர்களும்; அந்நாளில் இவ்வாறு சிறந்தோர்களின் வழி உலகம் நடந்ததாதலின் அவர்க்குச் சொல்லின் அவரால் உலகம் வழிப்படும் என்பது கருதி அவர்க்குச் செப்பினார் என்க; அன்றியும் குலமரபிற் சிறந்தோர்க்கு அந்நாளில் இத்தகைய மணப்பேச்சு முதலிய மரபுச் செயல்களை முறைப்படுத்தத் தக்க சில உரிமைகளுமிருந்தன. உள்ளபடி - இதுகாறும் நிகழ்ந்தவற்றை எல்லாம் உள்ளவாறு; முன்னர் "மறைத்தொழுக" (3368) என்றும், "விளம்பத் தகாமையினால் ஏதமெய்தா வகை மொழிந்து" (3369) என்றும் கூறியபடிக்கன்றி உள்ளதனை உள்ளபடியே செப்பினார் என்க. நங்கை செயலே - முன்னர் நிகழ்ச்சிகளில் தம் எண்ணப்படி செய்தனர்; இங்கு அவ்வாறன்றி நங்கை செயலே உடன்பட்டனர்; ஏகாரம் பிரிநிலை; தேற்றமுமாம். நங்கை - பெண்ணிற் சிறந்தாரைக் கூறும் வழக்கு. உடன் படுவார் - முற்றெச்சம்; உடன்படுவார் - (3370) பகர்வார் (3371) என்று (3372) சென்றணைந்தார் (3373) என மேல்வரும் பாட்டுக்களுடன் முடிக்க. செய்த விதுபோலது - உள்ளத்தினராகி - என்பனவும் பாடங்கள். |
|
|