பாடல் எண் :3371

"அணங்கே யாகு மிவள்செய்கை யறிந்தோர் பேச வஞ்சுவரால்;
வணங்கு மீசர் திறமன்றி வார்த்தை யறியாள் மற்றொன்றுங்;
குணங்க ளிவையா; மினியிவடான் குறித்தபடியே யொற்றிநகர்ப்
பணங்கொ ளரவச் சடையார்தம் பாற்கொண் டணைவோ" மெனப்பகர்வார்,
217

(இ-ள்.) அணங்கே....அஞ்சுவராய் - தெய்வத் தன்மையே யாகும் இவளது செய்கையினை உணர்வுடைய மக்கள் பேசவும் பயப்படுவர்; வணங்கும்...மற்றொன்றும் - தம்மால் வணங்கப்படும் சிவபெருமானது திறங்களைப் பற்றிய பேச்சுக்களையன்றி வேறு வார்த்தைகளைப் பேசுதலை இவர் அறியார்; குணங்கள் இவையாம் -இவரது குணங்கள் இத்தன்மையன; இனி, இவள்தான்...அணைவோம் எனப் பகர்வார் - இனி, இவர் தாமே குறிக்கொண்டு சொல்லியபடியே திருவொற்றியூரில் பணத்தையுடைய பாம்பினை முடித்த முடியாராகிய இறைவர்பாலே கொண்டு செல்வோம் என்று உட்கொண்டு சொல்வராய்,
(வி-ரை.) அணங்கே - தெய்வமே; ஏகாரம் தேற்றம். மானுடமன்றி அணங்கே என்றலுமாம்; இப்பொருளில் ஏகாரம் பிரிநிலை.
அறிந்தோர் இவள் செய்கை பேச அஞ்சுவர் - அறிந்தோர் - அவ்வாறுள்ள இவரது தெய்வத் தன்மையினை அறிந்தவர்கள்; பேச - பேசவும்; உம்மை தொக்கது; பேச அஞ்சுதலாவது - பேச ஒண்ணாப் பெருமை யாதலின் பேசினால் தவறு நேர்ந்து தீமைபயக்குமென்று கருதி அச்சங் கொள்ளுதல்.
ஈசர் திறமன்றி மற்றொன்றும் வார்த்தை அறியாள் - என்க; "வண்டல் பயில்வனவெல்லாம், - அண்டர்பிரான் றிருவார்த்தை யணையவரு வனபயின்று" (1721).
குணங்கள் இவை - அறிந்தோர் இவளைப்பற்றி பேச அஞ்சுவர்; இவள் பேசுவது ஈசர்திறம்; இவையே இவளது குணங்களாம்; ஆதலின் இவள் குறித்த படியே கொண்டணைவோம் என்று தம் துணிபுக்குக் காரணங் கண்டவாறு.
குறித்தபடி - குறி வைத்துக் கூறியபடி; குறித்த திறம் (3367) முன் உரைத்தவாறு.
என - என்று துணிந்து; இப்பாட்டிற் கூறியவை தாதையரும் கிளைஞரும் துணிபு கொள்வதற் காதரவாய் எழுந்த குறிப்புக்கள்.
வணங்க - வணங்கி - என்பனவும் பாடங்கள்.