பண்ணார்மொழிச்சங் கிலியாரை நோக்கிப்பயந்தாரொடுங்கிளைஞர் "தெண்ணீர் முடியார் திருவொற்றி யூரிற் சேர்ந்து செல்கதியுங் கண்ணார் நுதலார் திருவருளா லாகக் கன்னி மாடத்துத் தண்ணார் தடஞ்சூ ழந்நகரிற் றங்கிப் புரிவீர் தவ" மென்று. | 218 | (இ-ள்.) பயந்தாரொடும் கிளைஞர் - பெற்றவர்களோடும் சுற்றத்தார்களும் கூடி; பண்ணார் மொழிச் சங்கிலியாரை நோக்கி - பண்ணீர்மை நிறைந்த மொழியினையுடைய சங்கிலியாரைப் பார்த்து; தெண்ணீர்....சேர்ந்து - தெளிந்த நீரினை முடித்த இறைவரது திருவொற்றியூரினை அணைந்து; செல்கதியும்...ஆக - இனிமேற் செல்கதியும் கண்பொருந்திய திருநுதலினையுடைய பெருமானது திருவருளே யாக; கன்னிமாடத்து....தவமென்று - குளிர்ந்த தடங்கள் சூழ்ந்த அந்நகரிலே கன்னிமாடத்திலே தங்கியிருந்து தவம் புரிவீர் என்று கூறி, (வி-ரை.) பயந்தார் பெற்றோர். பயத்தல் - ஈனுதல்; மகவுபெறுதல்; பயந்தார் - அஞ்சினார் என்ற பொருளும் படநின்றது; "நையுமுள்ளத்துடனஞ்சி" (3370). செல்கதியும் திருவருளால் (அதுவே) ஆக - என்க. செல்கதியும் - பெறவேண்டிய உறுதிப்பொருளும்; வீடு பேறு; மக்கள் கருதியடையச் செல்லும் முடிந்த நிலையதுவே யாதலின் வீடுபேறே கதி எனப்பட்டது. "செல்கதி முன்னளிப்பவர்" (1608). கதியும் - மணமகனை யடையச் சாரும் நிலையே யன்றி, உயிர்க்கு உறுதியாகச் சாரும் நிலையும் என உம்மை இறந்தது தழுவிற்று. செல்கதியும் திருருளாலாகஎன்றது "அருள் செய்தா ரொருவர்க் குரியேன்" (3367) என்றமையால் நாயகனைப் பெறுதல் பெறப்பட்டது; அவ்வருளே மேல் தொடர்ந்து அதுவாறாகவே "செல்கதி"க்கு வழியாக உதவ என்றதாம்; இது பெற்றாரும் சுற்றமும் கொண்ட விருப்பம்; "பந்தமு மாய்வீடு மாயினார்க்கு" (திருவா - பொற். 20) "பந்தமும் வீடும் பரப்புகின்றீர்" (தேவா). செல்கதியும் அதுவாறாகவே தங்கித் தவம் புரிவீர் என்க. அங்கு இறைவர் இகபர மிரண்டும் உறுதி பயப்பர் ஆதலின் தவம் செய்து இகத்தின் நன்மையும் இறுதியில் வீடும் பெறுவீராக என்றபடி. என்று - என்று கூறி; இது சங்கிலியாரை நோக்கிப் பயந்தாருடன் கிளைஞர் கூறியது. திருவருளாகி - என்பதும் பாடம். |
|
|