பாடல் எண் :3373

பெற்ற தாதை சுற்றத்தார் பிறைசேர் முடியார் விதியாலே
மற்றுச் செயலொன் றறியாது மங்கை யார்சங் கிலியார்தாஞ்
சொற்ற வண்ணஞ் செயத்துணிந்து,
துதைந்த செல்வத் தொடும், புரங்கள்
செற்ற சிலையார் திருவொற்றி யூரிற் கொண்டு சென்றணைந்தார்.
219

(இ-ள்.) பெற்ற தாதை....விதியாலே - ஈன்ற தந்தையாரும் சுற்றத்தார்களும் பிறையைத் தரித்த முடியினையுடைய சிவபெருமான் விதித்த திருவருளினாலே; மற்றுச் செயலொன்றறியாது - வேறு செயலொன்றினையும் அறியாதவர்களாய்; மங்கை....துணிந்து - மங்கையார் சங்கிலியார்தாம் சொன்ன வண்ணமே செய்யத் துணிவு கொண்டு; துதைந்த....சென்றணைந்தார் - திரண்ட செல்வமுடனே கொண்டு, திரிபுரங்களை அழித்த வில்லாளியாராகிய சிவபெருமானது திருவொற்றியூரிலே அவரையும் உடன் அழைத்துக் கொண்டு சென்று அணைந்தார்கள்.
(வி-ரை.) விதியாலே....அறியாது - சங்கிலியார் குறிப்பின்படிக்குச் செயல் செய்வதன்றி வேறொன்றினையும் இவர்கள் அறியமுடியாமற் செய்தது திருவருளின் நியதி - விதி - என்பதாம்; அவ்விதியாவது மற்றுச் செயல் ஒன்றினையும் அறியாது மறைத்தது இறைவரது திரோதான சத்தியாதலின் முடியார் விதியாலே அறியாது என்றார்.
அறியாது....துணிந்து - அறியாமையால் துணிந்து என்று காரணப்பொருளில் நின்றது.
சொற்ற வண்ணம் - முன் (3367) உரைக்கப்பட்டது.
துதைந்த செல்வத்தொடும் - அவர் திருவொற்றியூரில் தங்கியிருக்கத் தக்க அமைப்புக்களும், வசதிகளும் அளித்தற்பொருட்டுத் திரண்ட செல்வம் கொண்டு சென்றனர். செல்வத்தொடும் - (அவரைக்) கொண்டு என்க.
கொண்டு - சொற்ற அந்தச் சங்கிலியாரையும் அழைத்துக்கொண்டு.