பாடல் எண் :3374

சென்னி வளர்வெண் பிறையணிந்த சிவனார் கோயி லுட்புகுந்து
துன்னுஞ் சுற்றத் தொடும்பணிந்து தொல்லைப் பதியோ ரிசைவினாற
கன்னி மாட மருங்கமைத்துக்,
கடிசேர் முறைமைக் காப்பியற்றி,
மன்னுஞ் செல்வந் தகவகுத்துத் தந்தை யார்வந் தடிவணங்கி,
220

(இ-ள்.) சென்னி....பணிந்து - தலையிலே வளர்கின்ற வெள்ளைப் பிறையினைச் சூடிய சிவபெருமானாரது திருக்கோயிலினுள்ளே புகுந்து நெருங்கிய சுற்றத்தாரொடும் கூடி வணங்கி; தொல்லை....அமைத்து - பழமையாகிய அந்தப் பதியவர்களுக்கு அறிவித்து அவர்களுடைய இசைவினாலே கோயிலின் பக்கத்திலே கன்னிமாடம் அமைத்து; கடிசேர்....வகுத்து - காவல் பொருந்தும் முறைப்படி காப்புக்களையும் செய்து அதற்குமேல் ஆதரவுக்கு உரித்தாக நிலைபெற்ற செல்வங்களையும் தக்கபடி வகுத்து வைத்து; தந்தையார்....வணங்கி - தாதையார் வந்து (சங்கிலியாரை) அடிவணங்கி,
(வி-ரை.) தொல்லைப் பதியோர் இசைவினால் பதியோர் - ஊரவர்; தொண்டைநாட்டில், கோட்டம், நாடு, நத்தம், ஊர் முதலிய பிரிவுகள் உண்டு; அவ்வவற்றிலும், முற்றும் ஆணை செலுத்தும் பேரரசின் கீழே தம்மாட்சி முறையாக அவ்வவற்றையும் தனியாட்சிபுரியும் ஆட்சி முறைகளும் உண்டு; ஒவ்வோர் ஊரிலும் ஊர்த்தலைவர் - ஊர்ச்சபையோரும் இதன் பொருட்டுத் தமக்குள்ளே நியமிக்கப்பெற்று ஊராட்சிபுரிந்து வந்தார்கள்; அவ்வவ்வூரவரும் இனிதுண்டு தீங்கின்றி உலகியல் நல்வாழ்வு வாழும் நிலையில் ஊர்க்காவல் அமைத்து நடத்த வேண்டுவது அவர்களது பொறுப்பு. அவர்கள் நாட்டாண்மை ஊரார் முதலிய பெயர்களாலறியப்படுவர்; பதியோரின் தேர்தல் முறை உரிமை முதலியவற்றை உத்தரமேரூர்ச் சாசனத்தாலும், பழங் கல்வெட்டுக்களாலும், பழஞ்சரிதங்களாலும், அத்தாபனங்களை நினைவூட்டி நின்று இந்நாளிலும் அரைகுறையாய் உயிரற்று அங்கங்கு வழங்கக்காணும் தொண்டைநாட்டு வழக்குக்களானும் அறிக; பதியோர் என்பது ஊர்க்காவல் மேற்கொண்ட கிராமச்சமுதாயம் என்னும் ஊர்ச்சபையோர் என்ற பொருள் தந்து நின்றது; வேற்றூரிலிருந்து நிலைக்குடியாக இவர்கள் இங்கு வந்து தங்குதலினாலும், கோயில் மருங்கில் (பொது இடத்தில்) கன்னிமாடம் அமைப்பதனாலும், உலகியலில் ஊரவரின் பாதுகாவல் பெறவேண்டிய நிலைமையில் உள்ளதனாலும் பதியோர் இசைவினால் கன்னிமாடம் அமைத்தல் வேண்டப்பட்டதென்க. ஊரவரின் நல்லொழுக்க வாழ்க்கைக்குரிய இத்திட்டங்கள் இந்நாளில் சுதந்தரம் என்ற பெயரால் மறைந்து கேடுபட்டு வருதல் வருந்தத்தக்கது.
கடிசேர் முறைமைக் காப்பு - கடி - காவல்; இது மாடத்தின் மதில் முதலியனவாகிப், பிறர்பார்வை செல்லாத அமைப்புக்கள்; முறைமைக் காப்பு - சேடியர், ஏவற்பெண்டிர் முதலிய உயிருள்ள காவல்முறை; முறைமை - இக்காவலாளர் பெண்டிர்களேயாக நியமிக்கும் நகரப் பொதுக்காவல்அமைதி; பதியோர் இசைவு என்றது பொதுவாக நாட்டின் அரசாங்கக் காவலாம்; இங்குக் கூறியது சிறப்பாக அவ்வவர் தத்தமக்கேற்பத் தாம் தாம் வகுத்துக்கொள்ள வேண்டிய சிறப்புக் காவலமைதி; வாழும் மாடம் மட்டுமன்றித், திருப்பணியும் திரைசூழ் ஒருபாலாவது எனவரும் மேற்பாட்டுப் பார்க்க.
மன்னும் செல்வம் தகவகுத்து - அம்மையாரது வாழ்வும், ஏவலாளர் முதலியோரின் வாழ்வும் ஒழுங்குபட நடத்தற்கு வேண்டப்படும் செல்வம்; இவை உணவுப்பண்டங்களும் உடை முதலியனவும் தவத்திற்குரிய பொருள்களும், பண்டங்களாகவும் பண்டமாற்றாற் பெறுவனவாகவும் விலைக்குப் பெறுவனவாகவும் வருவன; மன்னும் - இவற்றை இடையீடின்றிப் பெறுதற்குரிய; தகவகுத்தலாவது ளவினாலும், பெறவரும் நியமம் எளிமை முதலியவாற்றாலும் கன்னிமாடத்தின் செயல் முறைக்குத் தக்கவாறு அமைத்தல்.
தந்தையார் வந்து அடிவணங்கி - வந்து - கன்னி மாடத்துக்கு வந்து; அடி - அம்மையாரது திருவடிகளை; ஈண்டுப் பெற்ற தாதையார் ஐங்குரவருள் ஒருவராதலின் தமது மகளாரை அடி வணங்கல் தகுதியாமோ? எனின் தகுதியே என்க; ஈண்டு, அம்மையார் "விடையார் அருள் செய்தார் ஒருவர்க்குரியேன்; இனிச் சென்று சிவனாரருளிற் செல்வன்" (3367) என்று துணிந்து, பிறந்த இல்லின் தொடர்புகளைநீத்து வந்தாராதலின் தாதை மகளார் என்ற முறைமை யற்றுவிட்டது; மேல் சிவனருள் பெற்ற அடியார்க்குரியவராயும், உலக வாழ்வுவிட்டுச் சிவன் பணியே செய்யும் தவம் பூண்டவராயும் நின்றமையால் பணியத்தக்கவராயினர் என்பதாம்; இது பற்றியே, முன்னர் "இவளுக் கென்னோ வுற்றது? வந்த துனக்கிங்கென்?" (3366) என்று ஒருமையிற் கூறிய நிலையும், ஈண்டு, மேல், "உமக்கு" - "உறைகின்றீர்" (3375) என்று கூறும் சிறப்புப்பன்மையும் இக்கருத்தினை உணர்த்தும் கவிநலமும் கண்டுகொள்க.
கன்னிமாடம் - கன்னிப் பருவத்துள்ள பெண்கள் தவநிலை ஒழுக்கத்துடன் தனித்து வாழும் இடங்கள்.