பாடல் எண் :3375

"யாங்க ளுமக்குப் பணிசெய்ய வீசர்க் கேற்ற பணிவிரும்பி
ஓங்கு கன்னி மாடத்தி லுறைகின் றீ"
ரென் றுரைக்கின்றார்
தாங்கற் கரிய கண்கணீர்த் தாரை யொழுகத் தரியாதே
ஏங்கு சுற்றத் தொடுமிறைஞ்சிப் போனா ரெயில்சூழ் தம்பதியில்.
221

(இ-ள்.) யாங்கள்...உரைக்கின்றார் - நாங்கள் உமக்கு வேண்டிய பணிகளைச் செய்து கொண்டிருக்க, நீர் இறைவருக்கேற்ற பணி செய்தலையே விரும்பி ஓங்கும் கன்னிமாடத்தில் தங்குகின்றீர்" என்று சொல்கின்றாராகி; தாங்கற்கரிய....தரியாதே - உள் அடக்குதற்கரியதாகிய கண்ணீர்த்தாரை கண்ணினின்றும் பெருகி ஒழுகியிடத் தரிக்கலாற்றா தவராகி; ஏங்கு...பதியில் - ஏங்குகின்ற சுற்றத்தாரோடும் கூடிச் சங்கிலியாரை வணங்கி மதில் சூழ்ந்த தமது பதியாகிய ஞாயிற்றினிடத்துப் போயினார்.
(வி-ரை.) யாங்கள்...உறைகின்றீர் - இது தாதையார் அம்மையாரிடம் விடைபெற்றுப் பிரியும்போது பிரிவாற்றா துரைத்த மொழிகள். இனி எமக்குள் தாதையார் மகளார் என்ற உறவு நிலை நீங்கியது; நாங்கள் உமது பணியாளராக நீர் இறைவர் பணியாளராக உள்ள தொடர்பு ஒன்றே உளதாக உலகப் பற்று விட்டது என்பதாம். கையறுநிலைத் துன்ப மொழிகள் போன்ற தன்மையும் மன வருத்தமும் காண உரைத்த கவிநலம் கண்டுகொள்க.
உரைக்கின்றார் - போனார் - துன்பமிகுதியினால் உரை முடிவு பெறாது பிரிந்து சென்றனர் என்பது குறிக்க உரைக்கின்றார். "தாங்கற்கரிய கண்கணீர்த் தாரை ஒழுகத் தரியாதே போனார் தம்பதியில்" என்று முடித்தருளினர்.
தாங்கற்கரிய.....தரியாதே போனார் - பிரிவு தாங்க மாட்டா நிலைபற்றிக் கண்ணீர் பெருகியது; தரியாதே - பிரியவும் மாட்டாராய் நிற்கவும் மாட்டாராய்ப் போனார் என்றதாம்.
ஏங்கு சுற்றம் - தாதையாரின் நிலைஅதுவாகச், சுற்றத்தார் பிரிவுநிலை ஏக்கம் என்றதாம்.
இறைஞ்சி - திருவருளை வணங்கி விடைபெற்று.