காதல் புரிந்து தவம்புரியுங் கன்னி யாரங் கமர்கின்றார் பூத நாதர் கோயிலினிற் காலந் தோறும் புக்கிறைஞ்சி நீதி முறைமை வழுவாது தமக்கு நேர்ந்த பணிசெய்யச் சீத மலர்ப்பூ மண்டபத்துத் திரைசூ ழொருபாற் சென்றிருந்து, | 222 | (இ-ள்.) காதல்...அமர்கின்றார் - பேரன்புடன் இடைவிடாது நினைந்து தவம் செய்யும் கன்னியாராகிய சங்கிலியிம்மையார் அங்குக் கன்னிமாடத்தில் விரும்பித் தங்குவாராய்; பூதநாதர்....இறைஞ்சி - பூதநாதராகிய இறைவரது திருக்கேயிலில் வழிபாட்டுக்குரிய காலங்களிலெல்லாம் புக்கு வணங்கி; நீதி.....பணிசெய்ய - அமைத்த நீதி மரபு முறைமை வழுவாமல் தமக்கு நேர்ந்த திருப்பணியினைச் செய்யும் பொருட்டு; சீத...சென்றிருந்து - குளிர்ச்சியுடைய மலர்கள் நிறைந்த திருப்பூ மண்டபத்துள் சுற்றிலும் திரையாற் சூப்பட்ட ஒருபக்கத்தில் சென்று சேர்ந்து (வி-ரை.) காதல் புரிந்து - காதலால் இடைவிடாது நினைந்து; புரிதல் - இடைவிடாது நினைத்தல்; விரும்புதல்; எப்போதும் சொல்லுதல் என்றலுமாம்; காதல் - பெருவிருப்பம்; அங்கு - கன்னிமாடத்தில்; சங்கிலியார் அங்கு அமருநாளில் செய்யும் செயல்கள் இரண்டுவகையின; அவை கன்னிமாடத்திலும் திருக்கோயிலிலும் செய்யப்படுவன; கன்னிமாடத்தில் செய்வது காதல் புரிந்து செய்யும் தவம்; இது சிவபூசை, தியானம், தோத்திரம் முதலாயின; கோயிலிற் செய்வது திருமாலைத்திருப்பணி; இவை இங்கு வேறுவேறாக வகுத்துக் காட்டப்படுதல் கண்டுகொள்க. காலம் - வழிபாட்டுக்குரியனவாய்த் திருப்பள்ளியெழுச்சி முதல் திருப்பள்ளியறைக்காலம் வரையில் உள்ள காலங்கள்; காலந்தோறும் - புக்கு என்க; இக்காலங்களிலன்றி ஏனைக்காலங்களில் கன்னிமாடத்தில் அமர்ந்திருந்தனர் என்க. நீதிமுறைமை - செய்ய - தமது மரபுக்கும் பருவத்துக்கும் தன்மை நிலைக்கு நியமித்த முறை தவறாதபடி தமக்குக் கூடிய பணியினைச் செய்யும் பொருட்டு; சிவபெருமான் பணிகளும் அவ்வவர் நீதிமுறைப்படி இயற்றல் வேண்டுமென்க; "மறந்துமய னினைவின்றி வருபிறப்பின் வழிவந்த, அறம்புரிகொள் கையராயே யடித்தொண்டி னெறிநின்றார்" (1052) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க; அவ்வாறே திருநாளைப்போவார்சென்ற அவ்வழியேநின்ற திருநீலகண்டர், கலியர், அதிபத்தர்முதலாகிய நாயன்மார்களும் செய்த திருப்பணி முறைகளின்தகுதிகளைஉய்த்துணர்ந்து கொள்க. செய்ய - செய்யும் பொருட்டு; காரணப்பொருளில் வந்த வினையெச்சம். செய்யச் - சென்றிருந்து - என்று கூட்டுக. சேர்ந்திருந்து - என்பதும் பாடம். |
|
|