பண்டு கயிலைத் திருமலையிற் செய்யும் பணியின் பான்மைமனங் கொண்ட உணர்வு தலைநிற்பக் குலவு மலர்மென் கொடியனையார் வண்டு மருவுந் திருமலர்மென் மாலை காலங் களுக்கேற்ப அண்டர் பெருமான் முடிச்சாத்த வமைத்து வணங்கி யமருநாள், | 223 | (இ-ள்) பண்டு...தலைநிற்ப - முன்னாளில் கயிலைத் திருமலையிற் செய்யும் திருப்பணியின் தன்மையே தொடர்ந்து மனத்துட் கொண்ட முன்னையுணர்ச்சி தம்முள் ஓங்கி நிற்க; குலவுமலர் மென் கொடியனையார் - விளக்கமுடைய மலர்கள் பூத்த கொடி போன்ற சங்கிலியார்; வண்டு...அமரும்நாள் - வண்டுகள் மொய்த்துப் பொருந்தும் திருமலர்களாலாகிய மெல்லிய மலர்களைக் காலங்களுக்கு ஏற்றபடி தேவதேவரது திருமுடியிலே சாத்துதற்கு அமைத்துக் கொடுத்து விரும்பி வீற்றிருக்கும் நாளிலே; (வி-ரை.) பண்டு...பான்மை - திருமலைச் சருக்கத்துட்கூறிய வரலாறுகள் பார்க்க. "யாளுடை நாயகி, கொங்கு சேர்குழற் காமலர் கொய்திட" (33) என்றது காண்க. பான்மை...உணர்வு - சங்கிலியார், திரு அருளாலே முன்னையுணர்வுடன் வந்துதித்து வளர்ந்தனர் என்பது முன் (3362) உரைக்கப்பட்டது; அவ்வுணர்வின் றொடர்ச்சியினாலே மனம் அதனை உட்கொண்டு விருப்பமீதூர்ந்தது; தலை நிற்றல் - சிறத்தல்; முன்னிற்றல். மலர்மென் கொடியனையார் - மலர்களே அவயவங்களாகப் பூத்த கொடி போன்றவர்; "திருவளர்தாமரை...தெய்வ, மருவளர் மாலையோர் வல்லியினொல்கி" (திருக்கோவை - 1) என்றது காண்க. வண்டு மருவும் - புதிதின் மலரும் பூக்களாதலின் வண்டுகள் சூழ்ந்திருந்தன என்பது; "வம்பலர் நறுந்தொடையல் வண்டொடு தொடுப்பார்" (1936); இவ்வாறு வண்டுகள் மொய்க்கப் பூமாலை தொடுத்தல் இன்றும் திருவாலவாயில் மீனாட்சியம்மையார் சந்நிதியில் திருப்பூமண்டபத்தில் நேரே காணத் தக்கது. மலர் மென்மாலை காலங்களுக்கேற்பச் சாத்த - வைகறை முதலிய பூசைக் காலங்களில் அவ்வக்காலத்துக் கேற்றபடி மலர்கள் சாத்தும் விதிபற்றிப் புட்பவிதி முதலியவற்றுட் காண்க. சிவாகமங்கள் படிக்க. "அமைத்துச் சாத்தும்காலை" (560); "ஆங்கப் பணிக ளானவற்றுக் கமைத்த காலங் களிலமைத்து" (1026) என்றவையும், ஆங்காங்கு உரைத்தவையுங் காண்க. அமைத்துச் - சாத்தி - வணங்கி - என்க. தலைசிறப்ப - என்பதும் பாடம். |
|
|