அந்தி வண்ணத் தொருவர்திரு வருளால் வந்த வாரூரர் கந்த மாலைச் சங்கிலியார் தம்மைக் காதன் மணம்புணர வந்த பருவ மாதலால் வகுத்த தன்மை வழுவாத முந்தை விதியால் வந்தொருநாள் முதல்வர் கோயி லுட்புகுந்தார். | 224 | (இ-ள்) அந்தி...ஆரூரர் - அந்திபோலும் வண்ணமுடைய ஒருவராகிய இறைவரது திருவருளினாலே வந்த நம்பியாரூரர்; கந்தமாலை...ஆதலால் - மணமுடைய மாலையணிந்த சங்கிலியாரைக் காதல் மணத்தினாற்பொருந்த வந்த பருவம் இதுவாதலினால்; வகுத்த...விதியால் - இறைவர் வகுத்த தன்மையினின்று வழுவாத நியதியின்படி முந்தை விதியினாலே; வந்து...புகுந்தார் - ஒருநாள் தமது திருமாளிகையினின்றும் வந்து இறைவரது திருக்கோயிலினுள்ளே புகுந்தருளினர். (வி-ரை.) அந்தி வண்ணத் தொருவர் - சிவபெருமான்; அருளால் வந்த - அருளினாலே இவ் உலகில் திருநாவலூரில் வந்த - அவதரித்த - என்பது; திருவொற்றியூருக்கு வந்த என்ற குறிப்புமாம். காதல் மணம் - இயற்கை மணம்; தமிழ் அகப்பொருள் நூல்களுட் பேசப்படும் களவு - கற்பு என்பவற்றுள் களவியலிலுட் கொண்ட இயற்கைப் புணர்ச்சியின் பகுதி; இது மனிதர் முயற்சியின்றி விதிகூட்ட வருவது; முந்தை விதியால் என்பது காண்க. விதிமணம் தந்தை தாயர் சடங்குகளுடன் கொடுப்பக்கொள்வது. பருவம் - நிகழ வேண்டும் காலம். வகுத்த - இறைவனாணையால் வகுத்த; தை விதியால் - திருமலைச் சிறப்பிற் கூறிய விதி. வகுத்த தன்மை வழுவாத - நியதி பிறழாத. |
|
|