பாடல் எண் :3382

"இன்ன பரிசென் றறிவரிதா; லீங்கோர் மருங்கு திரைக்குள்ளாற்
பொன்னு மணியு மலர்ந்தவொளி யமுதி லளாவிப் புதியமதி
தன்னு ணீர்மை யாற்குழைத்துச் சமைத்தமின்னுக்கொடிபோல்வாள்

என்னை யுள்ளந் திரிவித்தாள்; யார்கொ" லென்றங் கியம்புதலும்,
228

(இ-ள்.)இன்ன பரிசு என்று அறிவரிதால் - இதுதான் இன்னதன்மையது என்று அறிதல் அரிதாயிருக்கின்றது; ஈங்கு....கொடிபோல்வாள் - இவ்விடத்தில் தனியாக ஒரு பக்கத்தில் திரையினுள்ளே, பொன்னும் மணிகளும் கூடி மலர்ந்த ஒளி அமுதத்துடன் கலந்து புதிய சந்திரனுடைய உண்ணீர்மையாலே குழைத்து ஆக்கிய மின்னற் கொடிபோலும் பெண்; என்னை....யார்கொல் - என்னை உள்ளந்திரியும்படி செய்தனள்; அவள் யார்?"; என்று அங்கு இயம்புதலும் - என்று அங்குக் கூறுதலும்.
(வி-ரை.) "இன்ன...யார் கொல்?" என்றது நம்பிகள் யாரையும் நோக்கி வினவாது தமக்குள் உரக்க எண்ணியது; தமக்குத் தாமே சொல்லியதுமாம்; சொல்லாய்க் கேட்கப்படவே அருகு நின்றனர் விடைகூறினர் என்க; முன்னர்ப் பரவையாரைக் கண்டபோதும் இவ்வாறே "என்மனங்கொண்ட....இளங்கொடிதான் யார்? என்ன" (293) என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க.
இன்ன பரிசு என்று அறிவரிதாம் - முன்பாட்டிற் கூறியகாட்சியின் விளைவைத் தமக்குள் நினைந்து ஆராய்ந்துரைக்கும் கூற்று; இது ஐயம் என்ற அகப்பொருட்டுறையின்பாற் படும்; யார்கொல்? என்று முடித்தலும் காண்க.
ஈங்கோர்....மின்னுக்கொடி போல்வாள் - காட்சிப்பொருளை விரித்தவாறு; பொன் - மணி - மலர்ந்த ஒளி யாவது செயற்கையானன்றி இயல்பிற் பொருந்திய ஒளி; மலர்ந்த - தம் இயல்பால் உண்ணின்று வெளிப்பட என்பது குறிப்பு.
அமுதில் அளாவி - அமுதத்தினுட் பெய்து; அமுதத்தின் வழியே விரவி வரச் செய்து; அளாவுதல் - ஈண்டுத் தன்மை விரவச் செய்தல் என்ற பொருளில் வந்தது.
புதியமதி தன்னுள் நீர்மையாற் குழைத்து - புதியமதி - புதிதின் முற்றித் தோன்றும் முழுமதி; உள்நீர்மை - மதியினுள் ளீடாக நிற்கும் தட்பம்; குளிர்ச்சி.
நீர்மை - தன்மையென்றும், நீரின்குணம் என்றும் இருபொருளும்பட நின்றது; குழைத்தல் - வெப்பந்தணித்தல்.
சமைத்த மின்னுக் கொடிபோல்வாள் - இவ்வாறு பண்படுத்தப்பட்டமின்னற் கொடிபோன்று தோன்றிய அம்மை; "மின்போல் மறையும்" (3380) என்று இதற்குத் தோற்றுவாய் செய்தமை காண்க; மின்னுக்கொடி - கண்டாரையும் தொட்டாரையும் உடன் கொல்லலும், கொடிய பேரொளியும், வெப்பமும், வேகமும் உடையது; ஆனால் இதுவும் அதுவே போன்ற ஒளியாயிருப்பினும் அதற்கு மாறாகத் தட்பமும் அமுதநிலையும் கொண்டுள்ளது; இவ்வாறு அதன் தன்மைகள் மாறுதற்குள்ள காரணங்களைக் கற்பிக்கின்றார்; மின்னின், இறத்தலைச் செய்யுந் தன்மை மாற்ற அமுதில் அளாவி என்றும், வெப்பத்தினைக் குறைக்க மதிதன்னுள் நீர்மையாற் குழைத்து என்றும் கூறினார்; இந்நாளில் 40 ஆயிரம் 20 ஆயிரம் என்ற அளவுபடும் மின்சார சத்தியின் நாசகாரியம் மிக்க வேகத்தைக் குறைத்து 200 அளவுபடச் சுருக்கி இல்லங்களில் ஒளியும் வெப்பமும் தந்து உதவி உலவச செய்வதற்கு அதனை அமுதம் போன்றஆமணக்கு விளக்கெண்ணெயின் வழிச்செலுத்தி வாங்கும் நிலைகள் ஈண்டுக் கருதத்தக்கன. சமைத்த - ஆக்கிய - அமைத்த.
என்னை - இறைவனுக் "காளாம் விதியால் வாழும் எனை" (3384) என்று இதன் கருத்தை மேல் விரித்தல் காண்க; வலிமிக்க என்னையும் என்று ஆணவச் செயற் குறிப்புப்பட உரைகூறுதல் தவறு.
உள்ளம் திரிவித்தாள் - முன் கூறியவாறுள்ள அன்பு நிலையிற்றிரியாத என் உள்ளத்தினை மாறுபடச் செய்தனள். "வானந் துளங்கிலென்....ஒருவனுக்காட்பட்ட உத்தமர்க்கே" என்றபடி சிவனன்பி னுறைப்பினால், வேறெதனாலும் திரியாத உள்ளத்தையும் என்று சிறப்பும்மை விரிக்க; "என் மனங்கொண்ட" (293) என்று இவ்வாறே முன் கூறியதும் காண்க. தவநெறி வேண்டிப் பெற்று அந்நெறியே பிறழாது நின்றவராதலின் இவ்வாறு கூறினார் என்க.
இயல்புதலும் - தமக்குத் தாமே கூறுதம்.