பாடல் எண் :3383

அருகு நின்றார் விளம்புவா "ரவர்தா நங்கை சங்கிலியார்;
பெருகுந் தவத்தா லீசர்பணி பேணுங் கன்னியா"ரென்ன,
"இருவ ராலிப் பிறவியையெம் பெருமா னருளா லெய்து வித்தார்;
மருவும் பரவையொருத்தி; யிவள்மற்றை யவளா"மெனமருண்டார்.
229

(இ-ள்.) அருகு நின்றார் விளம்புவார் - அங்கு அருகே நின்றவர்கள் சொல்வார்களாய்; "அவர்தாம்...கன்னியார்" என்ன - அவர்தாம் நங்கை சங்கிலியார் என்பவர்; பெருகும் தவத்தினாலே இறைவரது திருப்பணிகளை விடாது பற்றிச் செய்யும் கன்னியாராகும் என்று கூற; "இருவரால்...அவளாம்" எனமருண்டார் - "இருவர் பொருட்டால் எமது பெருமான் திருவருளாலே இப்பிறவியை எனக்குக் கூட்டுவித்தருளினர்; முன் பொருந்தும் பரவை அவர்களுள்ஒருத்தியாம்; இவள் அவ்விருவருள்ளே மற்றையவள் போலும்" என்று மனமருட்சி யடைந்தனர்.
(வி-ரை.) அருகு நின்றார் - நம்பிகள் அவர்களை நோக்கி வினவாவிடினும் நம்பிகள் கொண்ட ஐயப்பாட்டினைக் கேட்டு அருகுநின்றார், உலகியல்பின் வழித் தாமே விடைகூறுகின்றார்; இயம்பியபோது கேட்டு அருகு நின்றார்கள்.
நங்கை சங்சிலியார் - "அவர்நங்கை பரவையார் சென்றும்பர் தரத்தார்க் குஞ் சேர்வரியார்" (293) என்று முன்னர்ப் பரவையாரையும் இவ்வாறே அங்கு முன்னின்றவர்கள் அறிவுறுத்தியமை காண்க.
நங்கை - பெண்களிற் சிறந்தாரை நங்கை என்பதும், ஆடவருட் சிறந்தாரை நம்பி என்பதும் மரபு.
பெருகுந் தவத்தாற்....பேணும் கன்னியார் - அவரது தவத்தினைப் பற்றிய அன்பின் குணநலனும் மணஞ் செய்யப் பெறாத கன்னிப்பருவமும் குறித்தபடி காண்க. இஃது மேலும் வினாவுக்கு இடமின்றி அறிவிக்கு முறையும் மரபுமாம். முன்னை நிலையின் தவத்தின் பயனாகிய அன்பு நெறியும், அது பற்றி ஈண்டும் நாணாளும் செய்து ஈட்டப்படும் தவநெறியும் கூடுதலின் பெருகும் தவம் என்றார்.
"இருவரால்...மற்றையவளாம்" என மருண்டார் - இது நம்பிகளின் அழுந்திய அறிவினுள்ளே முன்னை நினைவு தலைக்கூடத் தம்மனத்துட் கொண்ட தெளிவு. மருட்சி - காணாது கண்டு கொண்ட பொருளின் வழித் தோன்றும் பெரு வியப்பாகிய மனநிலை; இருவர் - அநிந்திதையார் - கமலினியார்; இப்பிறவியை எய்துவித்தார் - திருமலைச் சருக்க வரலாறு.
பிறவியை அருளால் எய்துவித்தார் - கன்மங்களை அனுபவித்துக் கழித்து வீடுபெற உதவுதலின் இறைவர் பிறவிதருதலும் அருளேயாம் என்பது ஞான நூற்றிணிவு; இனி அம்மட்டினாலன்றி நம்பிகளது இப்பிறவி அவ்விருவர் மட்டிலேயாக அமைந்து மேல் ஏதும் வினைச்சார்புக்கு இடமின்றி நிகழ அருள் பெற்றமையால் அச் சிறப்பு வகையானும் அருளால் என்றார். அருளால், நம்பிகளது திருவவதாரம் ஏனை உயிர்களின் கன்மவசமாகிய பிறவி போன்றதன்று; தென்றிசை வாழவும் திருத்தொண்டத்தொகை தரவும் சிவத்திருவருள், அம்மையார் இருவரை முன்னிலையாக ஒரு காரணமாய்க் கொண்டு நிகழ்வித்த செயல் என்ற குறிப்புமாம். இருவரால் - இருவர் முகமாக;
மருவும் - முன்னர் வந்து பொருந்திய. இப்பாட்டுத் தெளிதல் என்ற அகப்பொருட்டுறை யமைதி கொண்டது காண்க.
இம்மூன்று பாட்டுக்களும் முறையே காட்சி ஐயம் தெளிதல் என முன்னர்த் திருவாரூரில் பரவையார் திறத்தில் நிகழ்ந்தவையே போல முறையே அமைந்த ஒப்புமையும் கண்டுகொள்க; இனி, அங்குப் பரவையார் திறத்தும் நம்பிகள் பால் நிகழ்ந்த அவ்வாறு காட்சி முதலிய துறைகளின் நிகழ்ந்தவை முன் உரைக்கப்பட்டன. 288 - 289 - 290 -317 -318 பார்க்க. ஆயின் ஈண்டுச் சங்கிலியம்மையார் திறத்து அவை நிகழ்ந்தமை ஆசிரியர் கூறாது, நம்பிகள் திறத்தின் நிகழ்ச்சிகளையே பற்றிக் கூறித், திருமணம் வரை மேற் செல்லுதலின் அவை நிகழவில்லை என்பது கருதலளவையாற் றுணியக் கிடக்கின்றது; இஃதென்னையோ நிலை? எனின், சங்கிலியார் முன்னையறிவுடன் வந்துதாம், திருஅருள் பெற்ற ஒருவர்க்கு அருள்வழியே முன்பே உரிமையாயினமை உணர்ந்து, அவ்வாறே செயல்கள் நிகழ்ந்தமை முன் உரைக்கப்பட்டது; ஆதலின் அத்துறைகளின் நிகழ்ச்சிகள் வேண்டப்படவில்லை என்பதாம்.