மலர்மே லயனு நெடுமாலும் வானு நிலனுங் கிளைத்தறியா நிலவு மலருந் திருமுடியு நீடுங் கழலு முடையாரை உலக மெல்லாந் தாமுடையா ராயு மொற்றி யூரமர்ந்த இலகு சோதிப் பரம்பொருளை யிறைஞ்சி முன்னின் றேத்துவார், | 231 | (இ-ள்.) மலர்மேல்...உடையாரை - தாமரை மலரின் மேல் இருக்கும் பிரமதேவனும் நெடிய விட்டுணுவும் முறையே ஆகாயத்தினும் நிலத்தின் கீழும் கிளைத்து அறியமாட்டாத, பிறைவளர்கின்ற திருமுடியினையும் நீடிய கழலினையும் உடைய இறைவரை; உலகமெல்லாம்......ஏத்துவார் - உலகங்களை யெல்லாம் தாம் உடையவராயிருந்தும் ஒற்றிஊரில் விரும்பி எழுந்தருளிய விளங்குகின்ற ஒளிப்பிழம்பாகிய பரம்பொருளை வணங்கித் திருமுன்பு நின்று துதிப்பாராகி, (வி-ரை.) அயனும் மாலும் - முறையே - வானும் நிலனும் நினைத்து அறியா முடியும் கழலும் என்று நிரனிறையாகக் கொள்க; கழல் - காலணி மணிவடம்; அஃதணியும் திருவடிக்காகி வந்தது. உலகமெல்லாம் - உடையாராயும் - ஒற்றிஊர் அமர்ந்த - ஒற்றிஊர் - ஒற்றி வைக்கப்பட்ட ஊர் என்ற சொற்பொருட் சிலேடை நயம்படக் கூறியது; உம்மை உயர்வு சிறப்பும்மை; உலகமுழுதும் உடையராயிருந்தும் திருவொற்றியூரினை விரும்பியருளினார் என்பது திருவொற்றியூரது தனிச் சிறப்பு உணர்த்திற்று.உலக முழுவதிலும் நிறைந்து இருப்பினும் அங்கெல்லாம் இறைவர் பாலினெய் போல மறைந்து நிற்பர்; உத்தமப் பெருந்தலங்களிலும் சிவாலயங்களிலும் தயிரினெய்போல வெளிப்பட விளங்கிநிற்பர் என்பது ஞான சாத்திரம். அப்பொருட் குறிப்புப்பட "உலகமெல்லா முடையராயும், ஒற்றியூர் அமர்ந்த இலகு சோதி" என்றார், அமர்தல் - விரும்பி வீற்றிருத்தல். "அவன் மற்றிவ் விடங்களிற் பிரகாசமாய் நின்றே, அல்லாதவிடத்து அப்பிரகாசமாய் நிற்றலான்" (போதம் - 12சூத்). |
|
|