பாடல் எண் :3386

"மங்கை யொருபான் மகிழ்ந்ததுவு மன்றி மணிநீண் முடியின்கட்
கங்கை தன்னைக் காத்தருளுங் காத லுடையீ! ரடியேனுக்
கிங்கு நுமக்குத் திருமாலை தொடுத்தென் னுள்ளத் தொடைவிழ்த்த
திங்கள் வதனச் சங்கிலியைத் தந்தென் வருத்தந் தீரு"மென,
232

(இ-ள்.) மங்கை...உடையீர்! - மலை மங்கையாராகிய உமையம்மையாரை ஒரு பாகத்தில் மகிழ்ந்து வைத்ததுமல்லாமல் அழகிய நீண்ட திருமுடியினிடத்தே கங்கை யம்மையாரையும் மறைத்து வைத்தருளும் பெரு விருப்ப முடையீரே!; இங்கு....சங்கிலியை - இங்கு உமக்குத் திருமாலையினைத் தொடுத்துக்கட்டியும் எனது கட்டுடனின்ற உள்ளமாகிய தொடையினை அவிழ்த்தும் செயல்புரிந்த சந்திரன் போன்ற முகமுடைய சங்கிலியாரை; அடியேனுக்கு - அடியேனாகிய எனக்கு; தந்து...என - தந்தருளி எனது வருத்தத்தினைத் தீரும் என்று கூறி,

(வி-ரை) இப்பாட்டு நம்பிகள் இறைவர் பால் வேண்டிக்கொண்ட நிலை கூறிற்று.
மங்கை....உடையீர் - பரவையார் ஒருவர் முன்னமே மனைவியாராயிருக்க, மேலும் சங்கிலியாரையும் மணம்புரிய வேண்டிக் கொள்வது என்னை? என்று இறைவர் கேட்டருளி, அருள் செய்யாவிடின், அதற்கு விடையாக நீர் மங்கை ஒரு பால் இருக்கச் சடையுள் ஒருத்தியைக் கரந்த நிலைபோல நானும் வேண்டுகிறேன்; உமக்கு ஏற்றதாயின் நிலையே எனக்கும் ஏற்றதாகும் என இவ்வாறு நம்பிகள் தோழமை நிலையினால் கூறிய தன்மை கண்டுகொள்க; "நண்பால் நினைந்து" என்பது, முன் "முடியார்பாற் பெறுவேன்" என்றதும் காண்க; "உம்மைப் போலென்னைப் பாவிக்க மாட்டேன்" "மூன்று கண்ணுடை யாயடி யேன்கண்கொள்வதே கணக்கு வழக்காகில்" (திருவொற்றியூர்) (நம்பி - தேவர்); கங்கை - கங்கை நங்கை. கரந்த - உமையம்மையார் அறியாமல் நீர் மறைத்து வைத்தமை போலவே யானும் பரவையார் அறியாமல் இந்த மணத்தை விரும்புகின்றேன் என்ற குறிப்பு.
காதல் உடையீர் - உமது அச்செயலுக்குக் காதல் காரணமாதல்போல ஈண்டு உம்பால் என் வேண்டுகைக்கும் அதுவே காரணமாமென்பது.
திருமாலை தொடுத்து - என் உள்ளத் தொடை அவிழ்த்த - ஒரே செயலில் ஒரு புறம் மாலை தொடுத்தலும் அப்போதே மற்றொருபுறம் தொடையைப் பிணிப்பு அவிழ்த்தலும் செய்யும் சதுரப்பாடு என்ற சங்கிலியாரின் மேன்மை தம்மனத்துப், பதிந்தமை தோன்றக் கூறியதுடன், தமது உள்ளம் கட்டுடைந்து அவர்பாற் சென்ற நிலையும் கூறியபடியாம்.
திங்கள் வதனச் சங்கிலி - "புதியமதி தன்னு ணீர்மையாற் குழைத்துச் சமைத்த" (3382) என்றது காண்க. காதல் வெப்பத்தினால் உயிர்போம் நிலையினை வராது காக்கும் அமுதகலைகளை உடையவர் என்பது குறிப்பு. மேல் "உயிர்காக்க" என்பதும் (3390) காண்க. உயிர் காக்க என்பது ஆண்டு நின்றீர் என்பதுடனும் கூட்டி யுரைக்க நின்ற நயம் கண்டுகொள்க.
தந்து - அவள் தம் சுற்றம் பற்று எல்லாந் துறந்து உமது உடைப்பொருளாய் நின்றமையால் அவளை நீரே தருதற்குரியீர் என்பதாம்; "முடியார்பாற்பெறுவேன்" (3384) என்றதும் இக்குறிப்பு; இவ்வாறே முன்னர் நம்பிகள் பரவை யாரைத் திருவாரூர்ப் பெருமான்பால் வேண்டிப் பெற்ற நிலையும் ஈண்டுக் கருதத்தக்கது.
வருத்தம் - காதற்றுன்பம்; அனுபவித்துக் கழிக்க நின்ற கன்மசேடத்தால் வரும் துன்பம் என்று உலகைத் தெருட்டும் நிலையின் குறிப்பும்பட நின்றது. தீர்த்தல் - போக்குதல்; கழிப்பித்தல்.
இது நம்பிகள் இறைவர் திருமுன்பு நின்று திருவாக்கினால் வேண்டிக் கொண்டது.