மதிவாண்முடியார்மகிழ்கோயிற் புறத்தோர் மருங்கு வந்திருப்பக், கதிரோன் மேலைக் கடல்காண மாலைக் கடலைக் கண்டயர்வார், முதிரா முலையார் தம்மைமணம் புணர்க்க வேண்டி முளரிவளை நிதியா னண்பர் தமக்கருளு நண்பா னினைந்து நினைந்தழிய, | 234 | (இ-ள்.) மதிவாள் முடியார்...இருப்ப - சந்திரனது ஒளி வீசும் முடியினையுடைய இறைவர் மகிழும் திருக்கோயிலின் புறத்தே ஒருபக்கத்தில் (நம்பிகள்) தங்கியிருக்க; கதிரோன்....அயர்வார் - சூரியன் மேல் கடலைச்சேரும் காலமாகிய அப்போது மாலையாகிய கடலினைத் தாம் கண்டுஅயர்வாராய்; முதிரா....வேண்டி - முதிராத இளமுலையவராகிய சங்கிலியாரை மணம் புணர்தலை விரும்பி; முளரி....நினைந்துஅழிய - பதுமநிதியும் சங்கநிதியும் உடைய குபேரனது நண்பராகிய சிவபெருமான் தமக்கு அருள்புரியும் தோழமையாகிய உரிமையினாலே நினைந்து நினைந்து மனமழிய, (வி-ரை.) மதிவாண் முடியார் - முன்பாட்டிற் கூறிய குறிப்பு. கோயிற் புறத்தோர் மருங்கு - இது தமது திருமாளிகையினன்றி அன்றிரவு கோயிற்புறத்து நம்பிகள் தங்கிய தனியிடம். முன்னர்ப் பரவையார் திருமணத்தின் முன் திருவாரூரில் தேவாசிரியனில் நம்பிகள் தங்கி நின்ற வரலாறு ஈண்டு நினைவு கூர்தற்பாலது; ஓர்மருங்கு - ஒருபுறமாக ஒதுங்கிய இடம் என்பதும்குறிப்பு. கதிரோன்...அயர்வார் - கதிரோன் - சூரியன். மேலைக்கடல் காண - சூரியன் - மேல்பாற்புகும் மாலைக்காலம் வர; மாலைக் கடலைக் கண்டு - அதன் மேல்வரும் மாலை இரவு என்ற கடத்தற்கரிய கடல்போன்ற துன்பந்தரும் காலம்; மாலையினையும் கடலினையும் கண்டு என்றுரைத்தலுமாம்; இவையிரண்டு துணைபிரிந்தாரைத் துன்புறத்துவன. நிலவுவெளிப்பட வருந்துதல். இரவுறுதுயரங் கடலோடு சேர்த்தல், கடலொடுபுலத்தல், பொழுதுகண்டு மயங்கல் முதலிய அகப்பொருட்டுறைகள் காண்க. அயர்வார் - முன்னர்த் திருவாரூரில் இக்கால நிகழ்ச்சிப்பண்புகளை விரிவுற (298 - 313) உரைத்தமையின் இங்கு அயர்வார் என்று குறிப்பிற் கூறிய மட்டினமைந்தார். மேல் நினைந்து நினைந்தழிய என்பது ஈண்டு விரித்துரைத்துக் கொள்ள வைத்த குறிப்பு. முதரா முலையார் - இளமையும் கன்னித் தன்மையும் குறித்தது. முளரி வளை நிதியான் - குபேரன்; முளரி நிதியான் - வளைநிதியான் - என்று தனித்தனிக் கூட்டுக; முளரி - தாமரை; பதுமம்; வளை - சங்கம் - "சங்கநிதிபதுமநிதியிரண்டும் தந்து" (தேவா); நிதியான் நண்பர் - குபேரன் றோழர் என்பது சிவபெருமான் பெயர்களுள்ஒன்று; "மித்திரவச் சிரவணற்கு விருப்பன் றான்காண்" (தேவா); - மித்திரவச்சிரவணன் - குபேரன். நண்பால் நினைந்து - தம்பிரான் தோழர் என்ற நட்புரிமையினாலே இதனை வேண்டி நினைந்து; "பாங்கனை யானன்ன பண்பனைக் கண்டிப் பரிசுரைத்தால், ஈங்கெனை யார்தடுப் பார்மடப் பாவையை யெய்துதற்கே" (திருக்கோவை - 19 - பாங்கற் கூட்டம்) என்ற நிலை ஈண்டு வைத்துணர்தற்பாலது. நினைந்து நினைந்து - பலவாறும் எண்ணமிட்டு; அழிதல் - நெஞ்சமுடைதல். |
|
|