பாடல் எண் :3389

உம்ப ருய்ய வுலகுய்ய வோல வேலை விட முண்ட
தம்பி ரானார் வன்றொண்டர் தம்பா லெய்திச் "சங்கிலியை
இம்ப ருலகி லியாவர்க்கு மெய்த வொண்ணா விருந்தவத்துக்
கொம்பையுனக்குத்தருகின்றோங்; கொண்டகவலையொழி"கென்ன,
235

(இ-ள்.) உம்பர்...எய்தி - தேவர்கள் உய்யவும் உலகம் உய்யவும் ஒலிபொருந்திய கடலினின்றும் எழுந்த விடத்தை உண்டருளிய தமது பெருமானார் (தாமே ஆட்கொண்டருளிய) வன்றொண்டரிடத்தில் எழுந்தருளி; இம்பர்...ஒண்ணா - இவ்வுலகில் எத்தன்மையாருக்கும் அடைய முடியாத; இருந்தவத்துக் கொம்பைச் சங்கிலியை - பெரியதவமுடைய கொம்பு போன்ற சங்கிலியை; உனக்கு...ஒழிக என்ன - உனக்குத் தருகின்றோம்; நீ மனத்துக்கொண்ட கவலையினை ஒழிவாயாக; என்று கூறியருள,
(வி-ரை.) இப்பாட்டு முன் கூறியவாறு நம்பிகள் கூறியமுறை கேட்டு இறைவரது அருளிச்செயல் கூறிற்று.
உம்பர் உய்ய - உலகுய்ய - தேவர்களுய்ய - உலகத்தவர்களும் உய்ய - என்று பிரித்துக் கூறியது ஈண்டு இனி இறைவரருளால் நிகழவுள்ள திருமணத்தின் இருபாலாருக்கும் நிகழும் அருட்பயனும் அதனால் உலகம் பெறும் பயனும் குறித்தது.
பிரானார் - தொண்டர்பால் எய்தி - தலைவர் தமது தொண்டரிடம் நாடிப் போந்தமை அருளின் பெருமை; வன்தொண்டராதலின் பிரானார் எய்தினர் என்ற தந்தருளினர் என்பது கருதத்தக்கது. சங்கிலியார் திறத்துக் கனவிற்றோன்றினார் (3391) என்றும், "உணர்ந்தெழுந்து அவ்விரவின் கண்...கண்துயிலார்" (3407) என்று விளங்கக் கூறுதல் காண்க.
இருந் தவத்துக் கொம்பைச் - சங்கிலியை என்று கூட்டுக.
கொம்பை - கொம்பு போன்றாரைக் கொம்பு என்றது உபசாரம்.
இம்பருலகில்....ஒண்ணா - முன்னர்ப் பரவையாரைச் "சென்றும்பர் தரத்தார்க் குஞ் சேர்வரியார்" (293) என்றது காண்க. அங்கு உரைத்தவர் முன்னே நின்ற மக்கள்; இங்கு இறைவர் தமது திருவாக்கினாலே "யாவர்க்கு மெய்த வொண்ணா இருந்தவம்" எனப்பெற்றது சங்கிலியாரது பெருந்தவத்தின் சிறப்பு;"சங்கிலியார் வழியடிமைப் பெருமையோ" (3404) என்பது மிக்கருத்தது. அவரை அடைதற்கு உரிமை அவரினும் மேம்பட்ட தவத்தை உடைய நம்பிகளுக்கே உண்டு என்பார்போல "சால வென்பா லன்புடையான் - மேருமலையின் மேம்பட்ட தவத்தான்" (3393) என்று இறைவர் ஈண்டே நம்பிகளையும் தமது திருவாக்கினாற் கூறியருளும் நிலையும் தவத்தின் சிறப்பாகும்.