"அன்று வெண்ணெய் நல்லூரில் வலிய வாண்டு கொண்டருளி ஒன்று மறியா நாயேனுக் குறுதி யளித்தீ ருயிர்காக்க, இன்று மிவளை மணம்புணர்க்க வேன்று நின்றீ!" ரெனப்போற்றி மன்றன்மலர்ச்சேவடியிணைக்கீழ்வணங்கிமகிழ்ந்தார்வன்றொண்டர். | 236 | (இ-ள்.) அன்று....உறுதியளித்தீர் - முன்னைநாளில் அன்று திருவெண்ணெய் நல்லூரிலே நீரேவந்து வலிய ஆட்கொண்டருளி ஒன்றும் அறியாத நாயினேனுக்கும் உறுதிதந்தருளினீர்; உயிர்காக்க - எனது உயிரினைப் போகாமே காக்கும் பொருட்டு; இன்றும்...நின்றீர் - (அதுபோலவே) இன்றும் இவளை எனக்கு மணம் புணரச் செய்ய ஏற்றுக்கொண்டீர்; எனப் போற்றி - என்று துதித்து; மன்றல்...வன்றொண்டர் - (அவரது) மணங்கமழும் தாமரை மலர்போன்றசேவடிக் கீழே வீழ்ந்து வணங்கி மகிழ்ந்தனர் வன்றொண்டர். (வி-ரை.) அன்று....உறுதியளித்தீர் - இங்கு நம்பிகள் தம்மை இறைவர் திருவெண்ணெய் நல்லூரில் தடுத்தாட் கொண்டது பேர் அருளின் திறம் என்று போற்றுகின்றார். வலிய - ஆளல்லேன் என்று மறுப்பவும் வலிந்து வழக்கிட்டு என்றபடி; மணப்பந்தரில் "இவன் என் அடியான்" என்று இறைவர் கூறிய போது உலகச்சூழலின் மயக்குட்பட்டு ஒரு மணம் புரிய நின்ற மணமகனாகிய நம்பிகளும் சுற்றத்தாரும் அதனை வெறுத்துச் சினந்தனர்; பின்னர், வெண்ணெய் நல்லூரில் வழக்கு வென்று, மறைந்து, விடைமேற்றோன்றி உணர்த்தி ஆளாகக் கொண்ட போதே நம்பிகள் அஃது இறைவரது பேரருளிப்பாடு என்று மகிழ்ந்தனர். உலக மயக்கினின்றும் பிரித்துத் தம்மைத் தொடர்வறத்தொடர்ந்து வந்து ஆட்கொண்டதனையும், அது, கயிலையில் தந்த வரமென்பதனையும், அதுவே உயிர்க்குறுதியாவதென்பதனையும் உணர்ந்தனர். இங்கும் அவ்வரத்தினையும், கயிலையில் பெற்ற ஆணையினையும், அவற்றின் தொடர்ச்சியாக இத்திருமணம் இனி நிகழ்வதாகும் என்பதனையும் உணர்ந்தனர். ஆதலின், அன்று - உறுதி அளித்தீர்; இன்றும் - ஏன்று நின்றீர்" எனத் தொடர்புபடுத்திக் கூறினார்; இன்றும் - அதுபோலவே இன்றும் என உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை. உயிர்காக்க - உயிர்காக்க - உறுதியளித்தீர் என்றும், உயிர்காக்க - ஏன்று நின்றீர் என்றும் முன்னும் பின்னும் கூட்டியுரைக்க இடையில் வைத்தருளினார்; இடைநிலைத்தீபம். ஒன்றும் அறியா - இறைவர் வந்து தடுத்த செயலினை அருள் என்று சிறிதும் அறியாத; இன்றும் இங்கும் இத்திருமணம் உமது ஆணைவழி நிகழ்வதாகிய நிலை என்றும் அறியாத என்று பின்னும் வருவித்துரைத்துக் கொள்க. ஏன்று நின்றீர் - தருகின்றோம் என்று உடன்பட்டீர்; இசைந்து நின்றீர். ஏலுதல் - மேற்கொள்ளுதல்; உடன்படுதல். உயிர்காக்க - அன்று உயிர்காக்க - உறுதியளித்தமையாவது உயிர் உலகச் சூழலிற் புறம் போகிக் கன்ம வீட்டம் கொண்டு பிறவிக்காளாகாது தடுத்துக்காத்த செயல். இன்று உயிர்காக்க ஏன்று நின்றீர் என்றது காதல் காரணமாக உயிர் போகு நிலையினின்றும் காக்கும் செயல். "அவள்பா லின்று மேவுதல் செய்யீராகில் விடுமுயிர்" (3509) எனப் பின்னர்க் கூறும் அத்தன்மை காண்க. வன்றொண்டர் - முன்னரும் (3389) "வன்றொண்டர் தம்பால்" என்றார். இந்நிகழ்ச்சிகள் யாவும் அவரது வன்றொண்டராந் தன்மைபற்றியே வருவன என்பதுணர்த்தியபடி. அன்று....உறுதியளித்தீர் - இதனை நம்பிகள் என்றும் மறவாது பலவிடத்தும் பன்னிப்பன்னிப் பாராட்டி மகிழ்ந்து துதிக்கின்றார்; "அன்று வந்தெனை யகலிடத்தவர்முன் னாள தாகவென் றாவணங் காட்டி, நின்று வெண்ணெய்நல்லூர்மிசை யொளித்த" (திருக்கோலக்கா- 5); "வெண்ணெய் நல்லூரி, லற்பு தப்பழ வாவணங் காட்டி, யடிய னாவெனை யாளது கொண்ட" (திருநள்ளாறு - 6) என்பன முதலியவை காண்க. ஏத்துவாராய் (3385);- என (3386) - உணர்த்தி - தளர்வார் (3387) - இருப்ப - அயர்வார் - அழிய - (3388) - எய்தி - என்ன (3389) - எனப்போற்றி - மகிழ்ந்தார் - வன்றொண்டர் (3390) என்று இந்த ஆறு பாட்டுக்களையும் கூட்டி முடிபுபடுத்திக் கொள்க. மருண்டார் - (3383) - புக்கார் (3384) என்று மனமருட்சியுடன் புக்க நம்பிகள்பால் அம்மருட்சி நீங்கி மகிழ்வுண்டாம்வரை இடையீடின்றி ஒரே தொடர்பாய்க் கூறும் கவிமரபும் நயமும் கண்டுகொள்க. |
|
|