பாடல் எண் :3393

"சாருந் தவத்துச் சங்கிலிகேள்! சால வென்பா லன்புடையான்;
மேரு வரையின் மேம்பட்ட தவத்தான்; வெண்ணெய் நல்லூரில்
யாரு மறிய யானாள உரியா; னுன்னை யெனையிரந்தான்;
வார்கொண் முலையாய்! நீயவனை மணத்தா லணைவாய்மகிழ்ந்" தென்றார்.
239

(இ-ள்.) வெளிப்படை. "சார்கின்ற பெரிய தவத்தினையுடைய சங்கிலியே! கேட்பாயாக; என்னிடத்தில் மிகவும் அன்புடையவன்; மேருமலையினும் மேம்பட்ட தவத்தினை உடையவன்; திருவெண்ணெய் நல்லூரில் எல்லாரும் காண யான் ஆளாகக் கொள்ளும் உரிமைபெற்றவன்; உன்னை வேண்டி என்பால் இரந்தனன்; வாரணிந்த முலையுடையாய்! நீ அவனை மணஞ் செய்து மகிழ்ந்து அணைவாயாக" என்று அருளிச் செய்தனர்.
(வி-ரை.) "சாரும் தவத்துச் சங்கிலி கேள்....மகிழ்ந்து" இஃது இறைவர் அருளியது; சாரும் - சாரத்தக்க; "சார்புணர்ந்து சார்புகெட வொழுகின்" (குறள்); தவம் - சிவனை நோக்கிச் செய்யப்படுவது; மலச் "சார்புகெட வொழுகுதல்"; தவம் சாரும் என்னின் வேறெவ்வகைகளையும் கொள்ளவருமாதலின் தகாத ஏனையவற்றை விலக்கச் சாரும் தவம் என்றார்; பிறிதினியைபு நீக்கிய விசேடனம்.
சாரும் - தவம் - தமது கணவரைச் சார்தற்காகச் செய்யும் தவம் என்ற குறிப்புமாம். முன்னர்ப் பரவையார் திறத்தும் "மணிகண்டர் கழல்வணங்கிக் கணவனை முன் பெறுவாள் போல" (315) என்றது காண்க.
தவத்துச் சங்கிலி - தவத்தான் - என இருபாலும் தவம் பற்றிக் கூறியது இவர்களது நிலைகளும் தொடர்பும் தவத்தாற் சிவச் சார்பாகிய தவச் சார்புபற்றி நிகழ்வனவேயன்றி, ஏனை உலகவரிற்போலப் பவச்சார்புபற்றி நிகழ்வன அல்ல என்றும், அவ்வாறு கருதுதல் அபசாரமென்றும் உணர்த்துதற்பொருட்டு.
சால என்பாலன்புடையான் - தவத்தான் - உரியான் - என்று இன்னார் எனக் கூறாது அருளியது முன்னமே சங்கிலியார் அறிந்த முன்னையறிவின் றொடர் புணர்வு பற்றி; 3395-ம் பார்க்க.
யான் ஆள உரியான் - "எம்பெருமா னீசன் றிருவருளே மேய வொருவர்க்குரியதியான்" (3365) எனவறிந்துள்ளாராதலின் அவ்வாறு "அருள்மேய ஒருவன் இவன்" என்றறிவித்தபடி.
உன்னைத் தரும்படி என்னை யிரந்தான் - என்க. இரத்தல் - வேண்டுதல்.
மணத்தால் அணைவாய் - விதிமணம் புரிந்து கொள்வாயாக; "தக்க விதி மணத்தால் - நல்கியருளும் பொழுது" (3395) என்று மேற் கூறுதல் காண்க.
மகிழ்ந்து - அணைவாய் என்க; மனமுவந்து ஏற்றுக்கொள்க என்றதாம். மகிழ்ந்திருந்து பின்பு நம்முகில் அணைவாய் என்ற குறிப்புமாம். "கலந்தணைவாய்" (37).
அவனை - முன்னறி சுட்டு.
யாருங்காண - என்பதும் பாடம்.