ஆதி தேவர் முன்னின்றங் கருளிச் செய்த பொழுதின்கண், மாத ரார்சங் கிலியாரு மாலு மயனு மறிவரிய சீத மலர்த்தா மரையடிக்கீழ்ச் சேர்ந்து வீழ்ந்து செந்நின்று வேத முதல்வர் முன்னடுக்க மெய்தித்தொழுது விளம்புவார், | 240 | (இ-ள்.) ஆதி....பொழுதின்கண் - ஆதிதேவர் அவ்வாறு அருளிச் செய்த பொழுதில்; மாதரார்...செந்நின்று - அழகுமிகுந்த சங்கிலியாரும் விட்டுணுவும் பிரமனும் அறிதற்கரிய குளிர்ந்த தாமரை மலர் போன்ற திருவடியின் கீழே பொருந்த விழுந்து நேர்நின்று; வேத முதல்வர்.....விளம்புவார் - வேதமுதல் வராகிய இறைவரது திருமுன்பு நடுக்கம் பொருந்தித் தொழுது சொல்வாராகி, (வி-ரை.) ஆதிதேவர் - எல்லாத் தேவர்களுக்கும் முற்பட்டவர்; ஆதியாகிய - முதன்மையுடைய - தேவர் என்றபடியுமாம் "முளைத்தானை யெல்லார்க்கு முன்னே தோன்றி" (தேவா); முன் - தமது முன்பு. முன் நின்று - தாமே பொறுப்பு ஏற்றுக்கொண்டு முன்னின்று என்பதுமாம். மாதரார் - அழகு நிறைந்த; மாதர் - அழகு. மாதர் - பெண் என்றலுமாம். மேல் வருவன பெண்களி னியல்புபற்றியன என்பது குறிப்பு. சேர்ந்து - திருவடியில் முடி பொருந்த. செந்நின்று - நேரே நின்று; இஃது இறைவர் முன்பும், சிவ பூசையிலும் உடம்பை நேரே நிறுத்த வேண்டும் என்னும் முறைபற்றியது; "தறியிருந்தாற் போலத் தன்மை நிறுத்தி" (திருமந்) "சுருட்குஞ்சி யுடனலையச் செந்நின்று" (1948). நடுக்க மெய்தி - இறைவர் அறியாத தொன்றை அறிவிப்பார் போன்று விண்ணப்பிக்கத் தொடங்குதலின் நடுக்க மெய்தினார்; "வேண்டத்தக்க தறிவோய் நீ" என்ற உண்மையினை முற்றும் அறிந்தவர் சங்கிலியார்; ஆயினும் ஆர்வத்தினால் விண்ணப்பிக்கின்றாராதலின் நடுங்கினார் என்க; உண்மை அறிந்தோர்க்கே இவ்வாறு மெய்ப்பாடு உளதா மென்க. விளம்புவார் - என்பார் (3395) - பின்னும் - உரைப்பார் - என்றார் (3396) என்று கூட்டிமுடிக்க. |
|
|