பாடல் எண் :3395

எம்பிரானே! நீரருளிச் செய்தார்க் குரியேன் யானிமையோர்
தம்பி ரானே! யருடலைமேற் கொண்டேன்; றக்க விதிமணத்தால்
நம்பி யாரூ ரருக்கென்னை நல்கி யருளும் பொழுதிமயக்
கொம்பி னாகங் கொண்டீர்க்குக் கூறுந் திறமொன் றுளதென்பார்,
241

(இ-ள்.) எம்பிரான்....உரியேன் - எமது பெருமானே! தேவரீர் அருளிச் செய்த அவருக்கு நான் உரியவள்; இமையோர்...மேற் கொண்டேன் - தேவர்கள் பெருமானே! தேவரீரது அருட் கட்டளையைத் தலைமேற் கொண்டு பூண்டேன்; தக்க....ஒன்று உளது என்பார் - தகுந்த விதிமணத்தின்படி நம்பியாரூரருக்கு என்னைக் கொடுத்தருளும்போது, இமயக்கொம்பாகிய உமையம்மையாரை ஒரு பாகத்தில் கொண்ட தேவரீருக்குச் சொல்கின்ற திறம் ஒன்று உள்ளது என்பாராய்,
(வி-ரை.) எம்பிரானே! - தம்பிரானே - முன்னர் உடன்பாட்டுக் குறிப்பும், பின்னர் அதனில் சில மாறுபாட்டுக் குறிப்பும் உணர்த்துகின்றாராதலின் இரண்டு விளிகள் பட அமைத்துக் கூறினார்; இது கவிநயம். இமையோர் தம்பிரான் - என்று வேறுபடுத்திய குறிப்புக் காண்க.
அருளிச் செய்தார் - உம்மால் அருளிச் செய்யப்பட்டார்; செயப்பாட்டுவினை; மணம் பற்றி முன்னர்க் கைலையில் அருளிப்பாடும், இன்று ஈண்டுக் கனாவில் அருளிப்பாடும் உள்ளடக்கி நின்றது.
தக்க - விதி மணத்தால் - களவு கற்பு என்ற இருதிறத்தினுள் இது விதிமணம் எனப்படும். ஊரவரறிய ஈண்டுச் சிறப்பு உரிமையாளராகிய இறைவரால் தரப்பட்டு மேல்உரிய சடங்குடன் நிகழ்த்தப்படும் மணத்தின் மூலம்; "கண்ணிறைந்த பெருஞ் சிறப்பிற் கலியாணஞ் செய்தளித்தார்" (3420) என்பது காண்க.
என்னை நல்கியருளும் பொழுது - பெற்றோரையும் பதியையும் சுற்றத்தையும் விட்டுச் சிவனாரருளிற் சென்றமைந்தாராதலின் அவரை மணஞ் செய்து கொடுக்கும் உரிமை பொதுவாயும் சிறப்பாயும் திருஒற்றியூர் இறைவர்பால தாயிற்று என்பார் நல்கியருளும் என்றார்; சிவனடிமையேயாந் திறம்.
இமயக் கொம்பின் ஆகங்கொண்டீர்க்கு என்றும், மேல் "எம்பிராட்டி திருமுலை தோய் - மார்பீர்!" என்றும் இக்குறிப்புப்படக் கூறுதல் (3396) உமையம்மையாரை நீர்பிரியாது ஒருபாகத்து வைத்தல் போல் எனது நாயகராகும் நம்பியும் என்னைப் பிரியாதுடனிருக்க வைத்தல் முறை என்பது குறிப்பு. முன்னர் (3386) நம்பிகள் இவ்வாறே இறைவர்பால் வைத்துப் போற்றும் குறிப்பும் காண்க.
கூறும் திறன் ஒன்று உளது - திருமணத்தின் முன்னர்க் குறிக்கொள்ள வேண்டிக் கூறும் செய்தி ஒன்றுண்டு என்பதாம்.