பாடல் எண் :3396

பின்னும்பின்னன்முடியார்முன் பெருகநாணித் தொழுதுரைப்பார்
"மன்னுந் திருவா ரூரின்க ணவர்தா மிகவு மகிழ்ந்துறைவ
தென்னுந் தன்மை யறிந்தருளு மெம்பி ராட்டி திருமுலைதோய்
மின்னும் புரிநூ லணிமார்பீ!" ரென்றார் குன்றா விளக்கனையார்.
242

(இ-ள்.) பின்னும்...உரைப்பார் - புரிந்த சடைமுடியாராகிய இறைவர் திருமுன்பு மிகவும் நாணமுற்றுத் தொழுது மேலும் சொல்வாராகி; "மன்னும்...அணிமார்பீர்!" என்றார் - நிலைபெற்ற திருவாரூரினிடத்தே அவர்தாம் மகிழ்ச்சியுடன் நிரந்தரமாக எழுந்தருளுவர் என்னும் தன்மையினை அறிந்து அதற்கேற்றவாறு அருள் செய்தல் வேண்டும்; எமது பிராட்டியாகிய மலைவல்லியாரது திருமுலை தோய்ந்த மின்னுகின்ற வெண்புரிநூலினை உடைய அழகிய மார்பினையுடையவரே! என்று கூறினார்; குன்றா விளக்கனையார் - குறையாத விளக்குப் போன்ற சங்கிலியார்.
(வி-ரை.) பின்னும் பின்னல் - சொற்பின் வருநிலை என்ற சொல்லணி; பின்னல் - பின்னியது போன் புரித்த சடை; பின்னும் - உரைப்பார் என்று கூட்டுக; பின்னும் - மேலும் தொடர்ந்து,
பெருக நாணி - மிகவும் நாணமடைந்து; நாண் - பெண்மையின் இயல்புக்குணங்கள் நான்கனுள் முதலாவது; தமது நாயகர் தம்மைப் பிரியாது தமக்கே உரியராய் உடனே இருக்க விரும்புதல் பெண்மையின் இயல்புக் குணம்; ஆயின், அதனைப் பிறர்பால் அறிவித்தலும், அதற்குத் துணை செய்யக் குறிப்பாற் கூறுதலன்றி வெளிப்படையாய்க் கூறுதலும் நாணத்தால் பெண்கள்செய்யார்; முன்னர் "மறைவிட் டியம்புவார்" (3367) என்ற குறிப்பும் காண்க. ஈண்டு அதனைக் குறிப்பாற் கூறும் திறம் மேற்காண்க. எம்பிராட்டி - முன்னைநிலையின் றொண்டின் உரிமை.
மன்னும்....அறிந்தருளும் - திருவாரூரில் மிகவும் மகிழ்ந்துறைவது என்னும் தன்மையறிந்து அதற்கு ஏற்றபடி நெறிசெய்து அருளுவீர் என்றதனால் அவரது பிரிவும், திருஆரூரில் வேறுமொரு நாயகிக்கு உரியராந்தன்மையும், பிரியாமைக்குரிய நிபந்தனை அமைக்க வேண்டுதலும் குறிப்பால் உணர்த்திய நிலை கண்டு கொள்க. அதனை அவ்வாறே உட்கொண்ட இறைவர், மேல் "உனை இகந்து போகாமைக்கொரு சபதம்...அவன் செய்வான்" (3397) என்றருளுவதும் காண்க.
குன்றா விளக்கு அனையார் - குன்றா - கெடுதலில்லாத; வினைபற்றி வந்த உவமம்; முன்னர்த் தூண்டு சோதி விளக்கனையார் (3391) என்ற விடத்துரைத்தவை பார்க்க. தூண்டும் விளக்காயினும் குன்றுதலில்லாதது என்க.