மற்றவர்தம் முரைகொண்டு வன்றொண்டர் நிலைமையினை ஒற்றிநக ரமர்ந்தபிரா னுணர்ந்தருளி! யுரைசெய்வார், "பொற்றொடியா! யுனையிகந்து போகாமைக் கொருசபதம் அற்றமுறு நிலைமையினா லவன் செய்வா னெனவருளி, | 243 | (இ-ள்.) மற்று...கொண்டு - மற்று அவரது (சங்கிலியாருடைய)மொழிகளை ஏற்றுக்கொண்டு; வன்றொண்டர்...உரை செய்வார் - வன்றொண்டரது மன நிலையினையும் திருவொற்றியூரில் அமர்ந்தருளிய பெருமானார் திருவுளங்கொண்டருளி உரைப்பாராகி; பொற்றொடியாய்...என அருளி - பொன்னாலாகிய தொடியினை அணிந்தவளே! உன்னைவிட்டுப் பிரிந்து போகாமலிருத்தற்கு அந்தரங்கமாகப் பொருந்தும் நிலையினாலே அவன் ஒரு சபதம் செய்வான் என்றருளிச் செய்து, (வி-ரை.) மற்று அவர் தம் உரை - மற்று - உரை - தமது இசை வினை ஒருவாறு அளவுபடுத்திய உரை என்ற குறிப்புடன் நின்றது; மற்று - மாறுபடுக்கும்; கொண்டு - ஏற்றுக் கொண்டு; மேற்பூண்டு கொண்டு. வன்றொண்டர் -முன்னும், இனியும் இப்பெயராற் கூறும் குறிப்புப்பற்றி முன் உரைக்கப்பட்டது. (3390 - 3399 - 3401). வன்றொண்டர்...உணர்ந்தருளி - நிலைமை யாவது இறைவர்பதிகள் சென்று சென்று குறிப்பிட்டும் பாடியும் வரும் வாழ்க்கை; - "பிறபதியும் நயந்த கோலஞ்சென்று கும்பிடவே கடவேனுக்கு" (3401). உணர்ந்தருளி - எல்லாம் அறிந்த இறைவரை இங்கு உணர்ந்தருளி என்றருளியது என்னை? எனின், எல்லாமுணர்தல் பொதுவுணர்வு; ஈண்டுக் கூறியவுணர்வு ஆன்மாக்களின் அறிவிச்சை செயல்களைத் தொழிற் படுத்தற்காக இறைவர் தமது சத்தியை அதிட்டித்து நின்று மேற்கொள்ளும் சிறப்பு உணர்வு. உரைசெய்வார் - என அருளி - என்று கூட்டுக. இகந்து போகாமைக்கு - இகத்தல் - நீத்தல் - விடுதல்; போகாமைக்கு - போகாதிருத்தற் பொருட்டு. அற்ற முறு நிலைமையினால் - தனித்த நிலைமை; அந்தரங்கமாகிய உண்மைநிலை. "அற்ற மெனக்கருள் புரிந்த" (3406). அற்றம் - வருத்தம் எனக்கொண்டு, இதனைச் சங்கிலியார்பாற் சேர்த்தி நீ வருந்தும் நிலையினாலே என்றுரைப்பர் இராமலிங்கத் தம்பிரானார்; அற்றம் - விருப்பம் - காதல் எனக்கொண்டு உன்மேல்காதல் கொண்ட காரணத்தால் என்றுதும் குறிப்பாம் என்பர் இராமநாதச் செட்டியார். "வம்பணிமென் முலையவர்க்கு மனங்கொடுத்த" என்பது காண்க. அருளி - மீண்டருளி - அணைந்து - அருள - (3398) வன்றொண்டர் வணங்கி - என்ன - செய்க என - அருள் செய்வதார் (3399) என்று இம்மூன்று பாட்டுக்களையும் கூட்டி வினை முடிபு கொள்க. |
|
|