பாடல் எண் :3398

வேயனைய தோளியார் பானின்று மீண்டருளித்,
தூயமன மகிழ்ந்திருந்த தோழனார் பாங்கணைந்து,
"நீயவளை மணம்புணரு நிலையுரைத்தோ; மதற்கவள்பால்
ஆயதொரு குறையுன்னா லமைப்பதுள" தென்றருள,
244

(இ-ள்.) வேய்அனைய....மீண்டருளி - மூங்கில் போன்ற தோளினையுடைய சங்கிலியாரிடத்தினின்றும் மீண்டு சென்றருளி; தூயமனம்...அணைந்து - தூய்மையுடைய மனத்தில் மகிழ்ச்சி கொண்டிருந்த தோழனாரிடத்து வந்து அணைந்து; நீ அவளை....என்றருள - நீ அந்தச் சங்கிலியை மணம் செய்து கொள்ளும் நிலையினை அவளிடம் சொன்னோம் அதற்காக அவளிடம் உன்னால் அமைக்க லேண்டியதாகிய குறை ஒன்று உள்றது என்று அருளிச் செய்ய;

(வி-ரை.) வேயனைய தோளியார் - "வேயனைய தோளுமை" - என்னும் தேவார ஆட்சி போற்றப்பட்டது; உமையம்மையாருக்குத் தொண்டு செய்தலின் அத்தன்மை பெற்றவர் என்ற குறிப்புமாம்.
மீண்டருளி - அணைந்து - அங்கு நின்றும் மறைந்து மறைந்து இங்கு வெளிப்பட்டு; மீளுதலும் அணைதலும் இறைவர்பாற் கூறுதல் உபசாரம்.
தூய மனம் - பின்னர் (3402) நம்பிகள் இறைவர்பால் வேண்டிக்கொள்வது பற்றி, நம்பிகள்பால் வேறுபடக் கூறி அபசாரப்படுவாரு முளராதலின், அவர்கள் அவ்வாறு அபசாரப்பட்டுச் சிவாபராதத்துக் காளாகி நரகிலழுந்தா வண்ணம் கருணையினால் ஆசிரியர் எச்சரித்துத் தெருட்டியருளியவாறு; நம்பிகளது திருவுள்ளம் எவ்விதமாகிய மாசுமற்று விளங்குவது என்க. இதுபற்றி மேலும் (3402) காண்க.
தோழனார் - உயிர்ப்பாங்கர்; "முடியார்பாற் பெறுவேன்" (3384); "நண்பால்" (3387) என்ற விடங்களிலுரைத்தவை பார்க்க. ஈண்டும், பின்னர்ப் பரவையார் திறத்தும் இறைவர் நிகழ்த்தும் அருள் விளையாடல்களைப் பற்றிப் பிழைபடக் கூறுவார் இத்தன்மையினைக் குறிக்கொள்ளக் கடவர். ஈண்டு இப்புராணமுடைய ஏயர்கோன் கலிக்காமர் சரிதவரலாற்றின் குறிப்பும் கண்டு கொள்க.
உன்னால் அமைப்பது ஒரு குறை உளது - என்க.
அமைப்பது - நிறைவேறச் செய்வது; குறை - மேற் செய்ய நின்ற கடன்; அதற்கு - அது முடிப்பதற்கு; ஒருகுறை - என்றதனால் அவ்வளவு மட்டிலன்றி வேறு தடையிலது என்பதும், மற்று அவளது இசைவும் குறிப்பிற் கூறியவாறு கண்டுகொள்க. மேலும் "குறை" (3398) என்பது காண்க.