வன்றொண்டர் மனங்களித்து வணங்கி "யடி யேன்செய்ய நின்றகுறை யா"தென்ன, "நீயவளை மணம்புணர்தற் கொன்றியுட னேநிகழ வொருசபத மவள்முன்பு சென்றுகிடைத் திவ்விரவே செய்க"வென வருள்செய்தார். | 245 | (இ-ள்) வன்றொண்டர் ... யாது? என்ன - வன்றொண்டராகிய நம்பிகள் மனமகிழ்ந்து பணிந்து அடியேனாற் செய்யப்பட வேண்டிய குறையாவது யாது? என்று வினவ; நீ அவளை ... என அருள் செய்தார்- நீ அவளை மணஞ்செய்து கொள்வதற்கு, நீங்காது ஒன்றித்து அவளுடனே உறைவதாக ஒரு சபதத்தினை அவள் முன்பு நீ சென்று சேர்ந்து இவ்விரவிலேயே செய்வாயாக என்று அருளிச் செய்தார். இம் மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. (வி-ரை.) செய்ய நின்ற குறை - செய்யக் கடவதாய் எஞ்சிநின்ற செயல் - கடமை; செய்து நிறைவாக்க நிற்பதாதலின் குறை எனப்பட்டது. ஒன்றி உடனே நிகழ - ஒன்றுதல் - சேர்தல். உடனே நிகழ்தல் - பிரியாது உடனிருத்தல். ஒன்றுதல் - அகமாகிய மனவொருமைப்பாடும், உடனிகழ்தல் புறமாகிய உடனுறைதலும் குறித்தலின் கூறியது கூறலன்மை யுணர்க; இது திருவொற்றியூரில் பிரியாது அமர்தல் குறித்தது; 3414 பார்க்க. அவள் முன்பு சென்று கிடைத்து இவ்விரவே செய்க - அவள் முன்பு - என்றது அவள் நேரில் கண்டும் கேட்டும் நிற்க என்றதாம்; சென்று கிடைத்து என்றது முற்பட்டுச் செல்ல வேண்டியதும் கிட்டுவதும் உன் செயலாக நிகழ்தல் வேண்டுமென்றதாம்; இவ்விரவே என்றதுசபதம் நிகழும் காலம் குறித்தது - "காலமது வாகவே" (3409) என்பது காண்க; மணம் புணர்தற்குச் - சபதம்செய்க என்றது மணம் புணர்தற்கு இன்றியமையாத முற்செயலாக என்றதாம். நிகழ்வ தொரு - என்பதும் பாடம். |
|
|