"என்செய்தா லிதுமுடியு மதுசெய்வ னியா;னதற்கு மின்செய்த புரிசடையீ! ரருள்பெறுதல் வேண்டு"மென, முன்செய்த முறுவலுடன் முதல்வரவர் முகநோக்கி "யுன்செய்கை தனக்கினியென் வேண்டுவ?" தென் றுரைத்தருள, | 246 | (இ-ள்.) என் செய்தால்...யான் - எந்தச் செயலைச் செய்தால் இத்திருமணம் முற்றுப்பெறுமோ அதனை யான் செய்வேன்; மின்செய்த புரிசடையீர் - மின்னொளி விளங்கும் புரித்த சடையினையுடைய இறைவரே!; அதற்கு அருள் பெறுதல் வேண்டுமென - அதற்குத் தேவரீரது திருவருளை அடியேன்பெற வேண்டும் என்று சொல்ல; முன் செய்த...முகநோக்கி - முன்னாற் றோன்றும் புன்சிரிப்புடனே முதல்வராகிய இறைவர்அவரது முகத்தினை நோக்கி; உன் செய்கை....வேண்டுமென்று - சபதம் செய்வதாகிய உனது செயலை நீ முடித்தற்கு இனி என்ன வேண்டுவது என்று; உரைத்தருள - வினாவியருள, (வி-ரை.) இது - இத்திருமணம்; முடியும் - நிறைவேறும்; அது - என்ன செய்தால் முடியுமோ அதனை; "ஒரு சபதம் செய்க" என்று இறைவர் பணித்தாராதலின் இதனை முடித்தற்குச் சபதஞ் செய்ய வேண்டுவதுண்டாயின் அதனை என்பதாம்; சபதம் செய்து மணம் பெறுதல் வழக்கில் இல்லையாதலின் இவ்வாறு உடன்பட்டு வினாவிக் கூறினார். அதற்கு....வேண்டும் - சடையீரே! அதனுக்கு உமது அருள் பெற வேண்டும்; சடையீராகிய உமது அருட்செயலின் துணையும் ஒன்று வேண்டும் என்பது. முன் செய்த முறுவல் - முன் செய்த - முன்னே சிறப்பாகத் தோன்றும்; முறுவல் - புன்னகை; பின்னர்ச் சங்கிலியாருக்கு உணர்த்திய (3405) வகையால் நம்பிகள்பாற் செய்யும் இத்திருவருள் நிலை வேறு என்பது குறிப்பு. உன்செய்கை...என்வேண்டுவது - இனி அவள்பால் சென்று சபதம் செய்து மணமுடித்துக் கொள்வது உன் கடமையும் பொறுப்புமாம்; அவ்வாறிருக்க மற்றுச் செய்ய வேண்டுவதொன்று மில்லையே என்பது வினாவின் குறிப்பு. முதல்வர் தாம் - என்பதும் பாடம். |
|
|