வம்பணிமென் முலையவர்க்கு மனங்கொடுத்த வன்றொண்டர் "நம்பரிவர் பிறபதியு நயந்தகோ லஞ்சென்று கும்பிடவே கடவேனுக் கிதுவிலக்கா" மெனுங்குறிப்பாற் றம்பெருமான் றிருமுன்பு தாம்வேண்டுங் குறையிரப்பார். | 247 | (இ-ள்.) வம்பணி....வன்றொண்டர் - கச்சு அணிந்த இளமுலையாராகிய சங்கிலியாருக்குத் தம் மணத்தை ஒப்புக் கொடுத்த வன்றொண்டர்; நம்பர் இவர்....குறிப்பால் - நம்பராகிய இறைவர் இவர் பிறபதிகளிலும் விரும்பி எழுந்தருளியிருக்கும் திருக்கோலங்களை அங்கங்கும் சென்று சென்று கும்பிடுதலே கடனாகவுடைய எனக்கு இது தடையாகும் என்று கொண்ட திருவுள்ளக் குறிப்பினாலே; தம் பெருமான்....இரப்பார் - தமது பெருமான் திருமுன்பில் தாம் வேண்டுகின்ற குறையினை இரப்பாராகி, (வி-ரை.) வம்பணி மென் முலையவர் - கங்கை சங்கிலியார்; வம்பு - கச்சு; மங்கைப்பருவம் குறித்தது; மனங் கொடுத்தல் - மனமுழுதும் அவர்பால் வைத்துத் தம் வசமறுதல். "நம்பரிவர்....இது விலக்காம்" எனுங் குறிப்பால் - நம்பிகளது திருவுள்ளத்திற் சபதம் செய்வதனால் விளையும் விளைவுபற்றி எழுந்த குறிப்பு. இது - இவ்வாறு சபதம் செய்தல்; விலக்கு - தடை; குறிப்பு - மனநிகழ்ச்சி; "அர்ச்சனை பாட்டேயாகு மாதலான் மண்மே னம்மைச், சொற்றமிழ் பாடு கென்றான்" (216) என்ற சிவனாணையின்படி அங்கங்கும் சென்று பாடிவருவதே கடமையாகவுடையேன்; சங்கிலியாரைப் பிரியாமைக்குச் சபதஞ் செயதல் திருவொற்றியூரினைப் பிரியலாகாது என்றதாகும்; அதனால் ஏனைப் பதிகளிற் சென்று கும்பிடுதலுக்குத்தடையாம் - என்று உட்கொண்டனர்; சங்கிலியாரையும் உடனழைத்துப் பிறபதியும் கும்பிடலாமே எனின்? அற்றன்று; அவ்வாறு செய்தல் உலகவாழ்க்கையிற் கட்டுண்டுழலும் எம்போன்ற கடையேமாகிய ஏனைமக்களுக்கே இயல்வதொரு செயலாம்; முன்னரும், இனியும், பரவையாரையும் நம்பிகள் உடன்கொண்டு; சங்கிலியாரையும் உடனழைத்துப் பிறபதியும் கும்பிடலாமே எனின்? அற்றன்று அவ்வாறு செய்தல் உலகவாழ்க்கையிற் கட்டுண்டுழலும் எம்போன்ற கடையேமாகிய ஏனைமக்களுக்கே இயல்வதொரு செயலாம்; முன்னரும், இனியும், பரவையாரையும் நம்பிகள் உடன்கொண்டு செல்லாமையும் கண்டுகொள்க; நம்பிகள் இவ்விருவர்பால் நேர்ந்த விளைவு கழியும்வகையளவினால் உலகவாழ்விற் சென்றனரேயன்றி மற்றை அவரது வாழ்வெல்லாம் சிவவாழ்வேயாகி உலகுக்குறுதி பயத்தற்கே நிகழ்ந்தன என்பதும் உய்த்துணர்ந்து கொள்க; "மாதவஞ் செய்த தென்றிசை வாழ்ந்திடத், தீதி லாத்திருத் தொண்டத்தொகைதரப், போதுவார்" (35) என்று நம்பிகள் திருவவதார உள்ளுறை விளக்கப்பட்டது; இரண்டு திருமணங்களும் அவ்வுள்ளுறைக்குத் துணையாய் நிற்குமளவே நிகழ்ந்தன; ஏனை உலகவாழ்வுகளின் நிகழ்ச்சிகள் எவையும் சாராமல் இறைவர் தடுத்தாட் கொண்டதும் காண்க. ஆதலின் உலகருள் ஒருவராகக், கடையேமாகிய எம்போலியர் வாழ்க்கையினுடன் ஒருங்கு வைத்து நம்பிகளது தூய சிவவாழ்க்கையினை எண்ணுதல் பெருஞ்சிவாபராதமாம்; "தூயமனம்" (3398) என்றதும் காண்க. இறைவரை மகிழின் கீழே தங்குமிடங் கொள்ளும்படி நம்பிகள் வேண்டிய திறத்தினையும் இக்கருத்துக்களின் றொடர்பு பற்றி உணர்ந்து கொள்க; ஈண்டும், பின்னர்ப், பரவையார் திறத்தும் நிகழ்பவைகளைப்பற்றி மாறுபாடாகச் சில மந்தமதிகள் கூறும் புறங்கூற்று மொழிகள் பொருளற்றன என்றொதுக்குக. வேண்டும் குறை - தமக்குச் செய்ய வேண்டிய உதவி - உபகாரம். இரப்பார் - இரந்து வேண்டுவார்; உலகர்க்கு ஒவ்வாது போன்று உள்ள நிலையாதலின் இரந்து வேண்டுதல் வேண்டப்பட்டது. உரைப்பார் - என்பதும் பாடம். |
|
|