பாடல் எண் :3402

சங்கரர்தாள் பணிந்திருந்து தமிழ்வேந்தர் மொழிகின்றார்
"மங்கையவ டனைப்பிரியா வகைசபதஞ் செய்வதனுக்
கங்கவளோ டியான்வந்தா லப்பொழுது கோயில்விடத்
தங்குமிடந் திருமகிழ்க்கீழ்க் கொளவேண்டு"
மெனத்தாழ்ந்தார்.
248
(இ-ள்.) சங்கரர்....மொழிகின்றார் - சங்கரராகிய இறைவரது திருவடிகளைப் பணிந்திருந்து தமிழ்வேந்தராகிய நம்பிகள் சொல்வாராய்; மங்கைதனை....வந்தால் - மங்கையாகிய சங்கிலியைப் பிரியாதிருப்பதற்குரிய சபதத்தைச் செய்வதற்காகஅங்கு உமது திருமுன்பு நான் வந்தால்; அப்பொழுது...வேண்டும் என - அப்பொழுது திருக்கோயிலினை விட்டு நீங்கித் தேவரீர் தங்கும் இடம் திருமகிழின் கீழே இடமாகக் கொண்டெழுந்தருள வேண்டும் என்று; தாழ்ந்தார் - வணங்கினார்.
(வி-ரை.) சங்கரர் - சுகத்தைச் செய்பவர் என்ற காரணக் குறிப்புப் படக் கூறியவாறு.
தமிழ்வேந்தர் - நம்பிகள்; மேற்கூற நின்ற வேண்டுதலுள் தமிழ்வளமிக்க தன்மைக் குறிப்பு.
அங்கு - திருக்கோயிலிற் றிருமுன்பு; அப்பொழுது தங்குமிடம் கோயில்விடத் திருமகிழ்க்கீழ்க் கொள்ள வேண்டும் என்க. அவ்வொரு கணம் திருக்கோயிலினின்று மறைந்து திருமகிழின் கீழ் விளங்கி நிற்க என்பதாம்; அப்பொழுது - அவளுடன் நான் வரும் அச் சிறிய நேரம் என்பதாம்; தங்குமிடம் - விளங்க வீற்றிருக்கும் இடம். கோயில்விட - மகிழ்க்கீழ் - என்றது சிவபெருமானது பொதுவகையாகிய எங்கு நிறையும் தன்மையன்றிச் சிறப்பு வகையாற் சிவலிங்கக் குறியினிடத்து விளங்கும் விளக்கம். விறகிற் றீப் போலவும், பசுவின் உடல் முழுதும் நிறையும் பால் முலையினிடத்து விம்மி வெளிப்படுவது போலவும் சிவக்குறியினிடத்துச் சிவனைக் கண்டார்க்குச் சிவன் விளங்குபவன் என்பது ஆகமம். இங்கு நம்பிகள் வேண்டுவது அவ்வாறு விளங்காது மறைந்து நிற்றலையேயாம் என்க. இவ்வாறன்றிக், கோயிலின் அப்பொழுது இல்லாமல் மகிழ்க்கீழே இருப்பது வேண்டினார் நம்பிகள் என்னில் அஃது இறைமைக் குணங்களுள்இன்றியமையாது சிறந்ததாகிய, எங்கும் நீக்கமற நிறைகின்ற தன்மையுடன் மாறுபட்டு இறைவராலியலாத தொன்றாகும் என்க; "நீங்கினா ரெப்பொருளு நீங்காத நிலைமையினார்" (3334) என்ற கருத்துக் காண்க.
மகிழ்க்கீழ்த் தங்குமிடம் கொள வேண்டும் எனத் தாழ்ந்தது, சங்கிலியாரை வஞ்சிக்கும் எண்ணமாம் என்று ஈண்டுச் சிலர் குறை காண்பர்; அற்றன்று; நம்பிகள் திருவுள்ளம் சங்கிலியாருடன் இன்பமுற்றிருப்பதினும், பதிதோறும் சென்று கும்பிடுதலிலேயே முனைந்திருந்ததாதலின் அதுவே அவரது உள்ளம் மிக நாடி அதற்குரிய வழி தேடியது என்க; இது சபதம் செய்தும் அதனைக் கடத்தலால் வரத்தக்க துன்பத்தையும் பொருட்படுத்தாது நீங்கியதனாலும், அதுபற்றிய துன்பங்களை மனமார அனுபவிக்கத் துணிந்ததனாலும் புலனாகும்.