பாடல் எண் :3403

தம்பிரான் றோழரவர் தாம்வேண்டிக் கொண்டருள
உம்பர்நா யகருமதற் குடன்பாடு செய்வாராய்
"நம்பிநீ சொன்னபடி நாஞ்செய்து" மென்றருள
"எம்பிரா னே!யரிய தினியெனக்கென்?" எனவேத்தி,
249

(இ-ள்.) தம்பிரான் தோழரவர்...கொண்டருள - தம்பிரான் றோழராகிய நம்பிகள் தாம் அவ்வாறு வேண்டிக்கொள்ள; உம்பர்...செய்வாராய் - தேவர் தலைவராகிய இறைவரும் அதற்குத் தாம் இசைவாராகி; நம்பி...என்றருள - நம்பி! நீ கூறியபடியே நாம் செய்வோம் என்றருளிச் செய்ய எம்பிரானே ! ... என்? ஏத்தி - எமது பெருமானே ! இனி எனக்கு எச்செயல்தான் அரியதாகும்; (கிடைத்தற்கரிய தொன்றுமில்லை) என்று துதித்து,
(வி-ரை.) தோழரவர் - வேண்டிக் கொண்டருள - என்றருள - தோழராதலின் அவர் வேண்ட மறாது உடன்பட்டுரைத்தனர் என்பது குறிப்பு. முன்னர்த் "தோழனார்" (3398); "நண்பால்" (3388) என்றவை காண்க.
உடன்பாடு செய்வாராய் - உடன்படுவாராய்; அதற்கு, உடன்....கூடவே - அதனுள்ளேயே; பாடு செய்வாராகி - அதற்கு மாறுபாடும் உடன் செய்வாராகி என்ற பிற்சரித விளைவுக் குறிப்பும் ஆம்; பாடு - மாறுபாடும்; இது கவிநயம்.
நம்பி...செய்தும் - நம்பி - நம்பியே! விளி; நம்பி - நம்புதல் கொண்டு என்ற தொனியும் காண்க.
எனக்கு இனி அரியது என்? - ஒன்று மரியதில்லை என்று வினா எதிர்மறை குறித்தது.