பாடல் எண் :3404

அஞ்சலிசென் னியின்மன்ன வருள்பெற்றுப் புறம்போதச்
செஞ்சடையா ரவர்மாட்டுத் திருவிளையாட் டினைமகிழ்ந்தோ?
வஞ்சியிடைச் சங்கிலியார் வழியடிமைப் பெருமையோ?
துஞ்சிருண்மீ ளவுமணைந்தா ரவர்க்குறுதி சொல்லுவார்.
250

(இ-ள்.) அஞ்சலி....போத - தலையின்மேற் கைகளை அஞ்சலியாகக் கூப்பி அருள் விடைபெற்றுப் புறம்பு போக; செஞ்சடையார் - சிவந்தசடையினையுடைய சிவபெருமான்; அவர்...மகிழ்ந்தோ? - அந்நம்பிகளிடத்து ஒரு திருவிளையாட்டினை மகிழ்ந் தெண்ணியோ?; (அன்றி,) வஞ்சியிடை....பெருமையோ? - வஞ்சிக்கொடி போன்ற இடையினையுடைய சங்கிலியாரது இடைவிடாத வழியடிமைப் பெருமையினை எண்ணியோ? (அறியோம்); துஞ்சிருள்....சொல்லுவார் - தூங்கும் இருளிலே மீண்டும் அவர்பால் அவர்க்குறுதி சொல்லுவாராகி; மீளவும் அணைந்தார் - மீண்டும் அணைந்தனர்.
(வி-ரை.) அருள்பெற்று - திருவருள் விடைபெற்று; புறம் - தங்கிய கோயிற் புறமாகிய இடத்தின் புறத்தே தமது திரு மாளிகைக்கு.
அவர்மாட்டு - நம்பிகளிடத்து; வழியடிமைப் பெருமையோ? - முன்னர்த் திருக்கயிலையிற் செய்த அடிமைத்திறத்தின் பெருமைபற்றியோ?; வழி - அதன் வழியே நிலவுலகத்தில் அந்நினைவோடும் செய்து வரும் "ஏகனாகி இறைபணி" நிற்கும் பெருமை; மகிழ்ந்தோ? பெருமையோ? என்று இவ்வாறு ஐயவினாக்கள் போல இரண்டு வினாக்களை வைத்து, நிகழும் காரணம் இன்னதென்று உய்த்துணரத்தக்க இயல்புடன் அதனுள்ளே சரித நிகழ்ச்சிக் குறிப்பும் பெறக்கூறுதல் ஆசிரியரது சிறந்ததெய்வக் கவிநலங்களுள் ஒன்று; "தம்மேலைச் சார்புணர்ந்தோ?சாரும் பிள்ளைமை தானோ?" (1961); "அருளாலேயோ? மேனியினி லேயு மசைவினயர்வாலோ? அறியோம்" (1891) என்றவை காண்க; ஈண்டுச் சங்கிலியார் பால் தாமே மீளவந் தருளிய செய்தியை நம்பிகள் பின்னர்ச் சரிதவிளைவானன்றி அறியமாட்டாது நிற்றலின் சங்கிலியாரது வழியடிமைப் பெருமையே காரணம் என்று கருதி யுணரவைத்தார்; "அவர்குறுதி சொல்லுவார்" என்று மேல் விளக்குதலும் காண்க. வழியடிமை - சங்கிலியார் அவதரித்த வேளாளர் குலம் சிவனுக்கு வழிவழியடிமை செய்யும் செம்மை யுடையது என்ற குறிப்பும் காண்க. "வல்லவா றதற்கே பிறந்தவே ளாளர் வழிவழி யடிமையா யுள்ளார்" (பேரூர்ப் புராணம் - பள்ளுப்படலம் - 38); "மேலாங் கொள்கை வேளாண்மை மிக்க திருஞா யிறுகிழவர்" (3361) என்ற குறிப்பும் காண்க.
திருவிளையாட்டு - இறைவர் உயிர்களிடத்துச் செய்வன எல்லாம் ஐந்தொழில் திருவிளையாட்டின் பாற்படும் என்ப; உயிர்க்குறுதி செய்யும் பயத்தன என்றலும் உண்மைநூற் றுணிபாம்.
"சொன்னவித் தொழில்க ளென்ன காரணந் தோற்ற வென்னின் முன்னவன் விளையாட்டென்று மொழிதலு மாமு யிர்க்கு, மன்னிய புத்தி முத்தி வழங்கவு மருளான் முன்னே துன்னிய மலங்க ளெல்லாந் துடைப்பதுஞ் சொல்லலாமே" (சித்தி - 1- 57). "விளையாட்டு" (3505).
துஞ்சு இருள் - "பேயு முறங்கும் பிறங்கிருள்" (3476) "ஊரெலாந் துஞ்சியுலகெலாம்...பாடவிந்த" (11-ம் திருமுறை - திருவாரூர்-மும்-கோ.26).
துஞ்சுதல் - ஈண்டு உறங்குதல்; துஞ்சிருள் - இரவு நடுயாமவேளை; பின்னர்ப் பரவையாரிடம் நம்பிகளுக்காக இறைவர் இருமுறை தூது சென்ற காலமும் இதுவேயாதலும், ஆண்டு மிவ்வாறே இருமுறை சென்றருள்வதும் காண்க. தூங்கிருள் நடுநல்யாமம்" (திருவிசைப்பா).
அவர்க்குறுதி சொல்லுவார் - இறைவர் இவ்வாறு நம்பிகளது திருவுள்ளத்தின் அந்தரங்கத்தினை அவரறியாமே சங்கிலியார்பால் மீளவும் சென்றறிவித்தல் சங்கிலியாருக்கு உறுதி கூறுதற் பொருட்டே என்று முன்கூறிய ஐயவினாக்களை விடுத்த முறையும் காண்க.
சொல்லுவார் - அணைந்தார் - என்று கூட்டுக.