பாடல் எண் :3405

சங்கிலியார் தம்மருங்கு முன்போலச் சார்ந்தருளி
"நங்கையுனக் காரூர னயந்துசூ ளுறக்கடவன்;
அங்குநமக் கெதிர்செய்யு மதற்குநீ யிசையாதே
கொங்கலர்பூ மகிழ்க்கீழே கொள்க"வெனக் குறித்தருள,
251

(இ-ள்.) சங்கிலியார்...சார்ந்தருளி - சங்கிலியம்மையாரிடத்து முன்பு போலத் தோன்றியருளி; நங்கை...கடவன் - நங்கையே! நம்பி ஆரூரன் உனக்கு விருப்பத்துடனே சபதம் செய்வான்; அங்கு...குறித்தருள - ஆனால் அச்சபதத்தினை அங்குத் திருக்கோயிலில் நம் எதிரில் செய்வதற்கு நீ இசையாதேமணம் விரியும் மலர்கள் நிறைந்த மகிழமரத்தின் கீழே கொள்வாயாக" என்று குறித்து அருள் செய்ய,
(வி-ரை.) முன் போலச் சார்ந்தருளி - முன் வந்த கோலத்திலே கனவிலே சேர்ந்தருளி.
சூளுறக்கடவன் - சபதம் செய்வான்; சூள் - சபதம்; சூள் உற - சபதம் செய்ய; உறக்கடவன் - செய்வான்; செய்ய இசைந்துள்ளான் என்பது.
அங்கு நமக்கெதிர் - அங்கு - அப்போது - அவ்விடத்தில் எனக் காலமும் இடமும் குறித்தது.
நமக்கு எதிர் - நமது எதிரிலே; திருமுன்பில்.
நமக்கு - நம்முடைய; வேற்றுமை உருபுமயக்கம்.
எதிர் - ஏழனுருபு விரிக்க.
இசையாதே - கொள்க - என்று கூட்டுக; இசையாதே - இசையாமல்; வினை எச்சமாயன்றி ஏவல் வினைமுற்றாகக் கொள்ளினுமாம்.
கொங்கு அலர் பூமகிழ் - மகிழமரத்தின் இயல்பினை விரித்தவாறு, "மகிழினிது கந்தம்" என்றபடி இனிய மெல்லிய மணம் விரிந்து வீசும்பூக்களை "அளவிறப்பக்கொண்டு விளங்குவது மகிழ்; கொங்கு - மணம்; அலர் -விரிந்து வீசுதல். வாளும் பருவத்திலும் வீசுதல்.
கொள்க - சபதம் செய்யக் கேட்டு ஏற்றுக் கொள்க.
கொள்வதென - என்பதும் பாடம்.