பாடல் எண் :3406

மற்றவருங் கைகுவித்து "மாலயனுக் கறிவரியீர்!
அற்றமெனக் கருள்புரிந்த வதனிலடி யேனாகப்
பெற்றதியா" னெனக்கண்கள் பெருந்தாரை பொழிந்திழிய
வெற்றிமழ விடையார்தஞ் சேவடிக்கீழ் வீழ்ந்தெழுந்தார்.
252

(இ-ள்.) மற்றவரும் கைகுவித்து - அதுகேட்ட அச்சங்கிலியாரும் கைகூப்பித் தொழுது; "மாலயனுக் கறிவரியீர்....பெற்றதியான்" என - மாலுக்கும் அயனுக்கும் அறிவதற்கரியவரே! உண்மையாகிய அந்தரங்கத்தை எனக்கு அருளிச் செய்த அதனால் அடியேனாக ஏற்றுக்கொள்ளப் பெற்றேன் யான் என்று கூறி; கண்கள்.....எழுந்தார் - கண்களினின்றும் பெருந்தாரையாக நீர்பெருகி வழிய வெற்றியுடைய இளம் விடையாராகிய இறைவரது சேவடிக்கீழே விழுந்து பணிந்து எழுந்தனர்.
(வி-ரை.) மற்றவரும் - மற்றும் அதுகேட்ட சங்கிலியாரும்; மற்று - என்றது முன்னுரைத்ததனை ஒருவாறு மாற்றும் என்ற குறிப்புடன் நின்றது; இக்குறிப்புப்பட முன்னரும் மற்றவர்தம் (3397) என்றது காண்க.
அற்றம் - உண்மை - இரகசியம் - அந்தரங்கம்; முன், "அற்றமுறு நிலைமையினால்" (3397) என்றது காண்க.
அதனில் - அதனால்; அருளிய அச் செயலினால்; அதனில் அடியேனாகப் பெற்றது யான் - அருள்புரிந்த அச்செயலின்மூலம் யானும் ஒருஅடியேனாக ஏற்றுக் கொள்ளப் பெற்றனன் என்பது போதருகின்றது; அதனில் - அற்றம் அருள்புரிந்த அதனினும் - பேற்றினும் - அடியேனாகப் பெற்றது பெரும்பேறு என்ற குறிப்பும் காண்க.
கண்கள் பெருந்தாரை பொழிந்திழிய - இஃது இறைவரால் அடிமையாக ஏற்றுக்கொள்ளப் பெற்ற அருளின் செயல் கண்டபோது அவரது அளவிறந்த பெருங்கருணையினையும் தமது அளவிறந்த சிறுமையினையும் எண்ண எண்ணப் பெருகும் அன்புக் கண்ணீர்; "எத்தனையு மரியநீ யெளியை யானா யெனையாண்டு கொண்டிரங்கி யேன்று கொண்டாய்.....இத்தனையு மெம்பரமோ வைய வையோவெம்பெருமான் றிருக்கருணை யிருந்த வாறே" (தேவா - தாண்) என்ற மனநிலையினால் வருவது. இப்படி எப்போதும் எண்ணியதனால் அரசுகளது திருவடிவம் "மார்பாரப் பொழிகண்ணீர் மழைவாரும் திருவடிவும்", "வந்திழி கண்ணீர் மழையும்", "மழைவாரு மிணைவிழியும்" என்று போற்றப்பட்டது.
கண்களி னின்றும் நீர் பெருந்தாரையாகப் பொழிந்து வழிய என்க. நீர் - சொல்லெச்சம்; பொழியப்பட்டு என்னும் செயப்பாட்டு வினைபொழிந்து எனச் செய்வினையாக நின்றது; கண்ணீர் பொழிதல் - பணிதல் இவை கனா நிலையினும் நிகழ்வன.