தையலார் தமக்கருளிச் சடாமகுட ரெழுந்தருள எய்தியபோ ததிசயத்தா லுணர்ந்தெழுந்தவ் விரவின்கட் செய்யசடை யாரருளின் றிறநினைந்தே கண்டுயிலார் ஐயமுட னருகுதுயில் சேடியரை யணைந்தெழுப்பி, | 253 | (இ-ள்.) தையலார்....எழுந்தருள - தையலாராகிய சங்கிலியாருக்கு முன் கூறியபடி அருளிச் செய்து சடை முடியினை உடைய பெருமான் மறைந்து நீங்க; எய்தியபோது அதிசயத்தால் உணர்ந்தெழுந்து - இந்நிகழ்ச்சி பொருந்தப் பெற்ற அப்போது அதிசயமாகிய மனநிலையினாலே துயிலுணர்ந்து எழுந்து; அவ்விரவின்கண்....கண்துயிலார் - அந்த இரவிலே சிவந்த சடையினையுடைய இறைவரது பெருங்கருணையின் றிறத்தினை எண்ணி எண்ணி நின்றமையால் உறக்கம் பெறாதவராகி; ஐயமுடன் - ஐயத்தினுடனே; அருகுதுயில்....எழுப்பி - தம்மருகே துயில்கின்ற சேடியர்கள் பாலணைந்து எழுப்பி; (வி-ரை.) எழுந்தருள - மறைந்தருள; எய்தியபோது - இவ்வாறு பொருந்தப்பெற்றபோது. அதிசயம் - "அதிசயம் கண்டாமே" (திருவா.) உணர்ந்து - எழுந்து - துயில்நீங்கி விழித்து எழுந்து. உணர்தல் - துயில்நிலையினின்றும் நனவுநிலை யடைதல். முன்னது சொப்பனம் என்றும், பின்னது சாக்கிரம் என்றும் கூறப்படும் அவத்தைகள். அவ்விரவின்கண்...நினைந்தே - அவ்வோரிரவிலே இருமுறை தம் பொருட்டுத் தோன்றி யருள்புரிந்த கருணைப் பெருக்கினை எண்ணியதனால். அவ்விரவின்கண்....கண்டுயிலார் - என்று பின்னரும் கூட்டுக; நினைந்தவை இரவின் முற்பகுதி நிகழ்ச்சிகள்; துயிலாமை பிற்பகுதி வைகறைவரை நிகழ்ச்சி. கண்டுயிலார் - துயிலார் என்றலே யமையுமாயினும், கண்மூடும் முயற்சி தானுந் நிகழாமை குறிக்கக் கண் துயிலார் என்றார்; நல்ல கனவு காணில் அவ்விரவு அதன்பின் துயில் கொள்ளாது திருநீறணிந்து சிவனை நினைந்திருத்தல் வேண்டுமென்பது விதி. ஈண்டும் அக்கனாவின் நிகழ்ச்சிகளின் பின்னர்ச் சங்கிலியாரும் அவ்வாறே சிவனருளை நினைந்து துயிலாதிருந்தனர் என்பதாம். ஐயமுடன் ஐயம் என்றது கனவின் நிகழ்ச்சிகள் உண்மையானவையோ? அன்றி, நோய் - பிறழ்வுணர்ச்சி - முன்னினைவு - முதலியவற்றால் நிகழும் பொய்படும் காட்சியோ? என்பது முதலிய ஐயப்பாடு; மெய்யாயில் அவ்வாறே கொள்ளப்பட்டுப் பலன்தருவனவோ?, பிறிதுபடப் பொருள்கொள்ளத் தக்கனவோ? என்றலுமாம் - கனவுடம்பிற்கு நனவுடம்பு வேறாதலின் இவ்வாறு நிகழ்ந்தது யாதென ஐயம் உண்டாயிற்றென்பர் இராமலிங்கத் தம்பிரானார். அருகுதுயில் சேடியர் - "கடிசேர் முறைமைக் காப்பியற்றி" (3374) என்றபடி பணிவிடைகளுக்கும் காவலுக்குமாக நியமம் பெற்ற சேடியர்; அப்பொருளியல் பில் இவர்கள்தோழி, உயிர்ப்பாங்கி முதலாகப் பேசப்படுவர்; தலைவி தனதுமணம் பற்றிய நிலைகளைத் தான் பிறர்பாற் கூறாது பாங்கியின் துணைகொண்டு நிறைவேறச் செய்தல் அகப்பொருட் டமிழிலக்கண வரம்பு; இவ்வாறே, முன்னர்ப், பரவையாரும் நம்பிகளைப் பற்றிய வரலாற்றினை அருகிருந்த சேடியை வினாவியறிந்த (317) வரலாற்றையும் இங்கு நினைவு கூர்க. தலைவன் தனது பாங்கனுக்கு அறிவித்துப் பாங்கற் கூட்டமாகிய நிகழ்ச்சிகள் நிகழப்பெறும் நிலையும் காண்க. எழுப்பிப் - பாங்கறிய மொழிய என மேல் வரும் பாட்டுடன் முடிக்க; கனா நிகழ்ச்சிகள் நனவில் உள்ளபடி நினைவு கூர்தலின் அருமையும், அவ்வாறு நினைக்கவரினும் எளிதின் மறத்தலும் இயல்பாதலின் சேடியர் தாமாகத் துயிலுணர்ந்து விழிக்கும்வரை நில்லாது உடன் அணைந்தெழுப்பி யறிவித்தனர் என்க. அன்றியும், அப்போது வைகறை அணுகும் வேளையாகத் திருப்பள்ளியெழுச்சிக்கு மலர்தொடுக்கும் பொழுது ஆக நின்றமை மேற்பாட்டிற் கூறுதல் காண்க; அவ்விரவே சபதம் நிறைவேற உள்ளமையால் நம்பிகள் வருமுன்பே சேடியர் இவ்வரலாறுகளை உணர்ந்திருத்தல் வேண்டுவதும் அவசியமாயிற்று என்க. |
|
|