நீங்குதுயிற் பாங்கியர்க்கு நீங்கலெழுத் தறியுமவர் தாங்கனவி லெழுந்தருளித் தமக்கருளிச் செய்ததெலாம் பாங்கறிய மொழியவவர் பயத்தினுட னதிசயமுந் தாங்குமகிழ்ச் சியுமெய்தச் சங்கிலியார் தமைப்பணிந்தார். | 254 | (இ-ள்.) துயில் நீங்கு பாங்கியர்க்கு - (இவ்வாறு) துயிலின் நீங்கும் சேடிமார்களிடம்; நீங்கல்....மொழிய - "நீங்கல்" என்ற எழுத்தினை எழுதிஅதனால் எழுத்தறியும் பெருமாள் எனப் பெற்ற திருவொற்றியூரிறைவர் தாமே தமது கனாவில் இருமுறையும் எழுந்தருளித் தம்பால் அருளிச் செய்தவற்றையெல்லாம் முறைமைபெற அறியும்படி சொல்ல; அவர்....பணிந்தார் - அச்சேடியர்கள் அச்சத்துடனே அதிசயமும் பொருந்திய மகிழ்ச்சியும் கொள்ளச் சங்கிலியாரைப் பணிந்தனர்.
(வி-ரை.) துயில் நீங்கு - என்க; நீங்குதலை முன்வைத்தது அச்செயல் நிகழ்ச்சியின் விரைவுகுறித்தது; சேடியர் தமது தலைவியின் ஏவலுக்குத் துயிலிலும் சாக்கிராவத்தையை ஒட்டியே நிகழ்ந்தனர் என்பதாம். "நீங்கல்" - "திருவொற்றியூர் நீங்கலாக" என்று வரிப்பிளந்து எழுதும் எழுத்தறிபவர்; இதனால் அவர் எழுத்தறியும் பெருமானெனவும் வழங்கப்படுவர்; இதுபற்றி முன் (1116) உரைத்தவை பார்க்க; "எழுத்தறியும் பெருமானை" (1600), "ஏட்டு வரியி லொற்றிநகர் நீங்கலென்ன வெழுத்தறியு, நாட்ட மலருந் திருநுதலார்" (3358); இவ்வரலாறு முன் (1116ன் கீழ் II-பக் - 1438) உரைக்கப்பட்டது. தாம் - தாமாகவே திருவருளால் முன்வந்து என்பதாம். அருளிச் செய்ததெலாம் - இருமுறையும் முன்கூறியவாறு நிகழ்ந்தவையும் சொல்லியருளியவையும்அடங்க எலாம் என்றார். அருளிச் செய்தவெலாம் என்றுபன்மையிற் கூறாது அருளிச் செய்தது என ஒருமையாற் கூறினார்; அவை எல்லாம் அவரது ஒரே பொருள்பற்றிய அருளிப்பாடு என்னும் ஒன்றினுள் அடங்கி நிற்பது குறிக்க. பாங்கு - முறைமை; பாங்கு அறிய - பாங்காகிய (பாங்கி) தன்மையுடன் உட்கொள்ள என்ற குறிப்புமாம். பயம் - அதிசயம் - மகிழ்ச்சி - இறைவரது அருட்செயல்களைப் பற்றிய நிகழ்ச்சிகளாதலின் அச்சத்துடன் மேற்கொள்ள வேண்டுதலால் பயமும்; பெறற்கரிய பேர் அருளின் றிறங் கண்டாராதலின் அதிசயமும்; தமது தலைவிக்குத் திருமணம் நிகழவரும் சிறப்பில் அவர்க்குத் தாம் பணி செய்யப் பெறுவதற்கு மகிழ்ச்சியும் கொண்டனர். பணிந்தார் - சங்கிலியார் நேரே இறைவரது திருவருளுக் கிலக்காய் நின்ற பெருமைபற்றிப் பணிந்தார். |
|
|