பாடல் எண் :3409

சேயிழையார் திருப்பள்ளி யெழுச்சிக்கு மலர்தொடுக்குந்
தூயபணிப் பொழுதாகத் தொழில்புரிவா ருடன்போதக்,
கோயிலின்முன் காலமது வாகவே குறித்தணைந்தார்
ஆயசப தஞ்செய்ய வரவுபார்த் தாரூரர்.
255

(இ-ள்.) திருப்பள்ளி எழுச்சிக்கு....பொழுதாக - இறைவரது திருப்பள்ளி யெழுச்சிக்கு உரிய மலர் மாலைகள் சாத்தத் தொடுக்கும் தூய திருப்பணிக்குரிய பொழுது ஆயினமையால்; சேயிழையார் - சங்கிலியார்; தொழில் புரிவார் உடன்போத - உடன் கூடித் தொழில் புரியும் சேடியர்கள் தம்முடனே செல்ல; கோயிலின் முன் திருக்கோயிலின் முன்பு; ஆரூரர் - நம்பிகள்; வரவுபார்த்து - சங்கிலியாரின் வரவைப் பார்த்து; ஆயசபதம் செய்ய - முன்னர் இறைவரது ஆணையினாலாகிய சபதத்தினைச் செய்வதற்காக; காலமது.....அணைந்தார் - ஏற்றகாலம் அதுவேயாக எண்ணிக் குறித்து வந்தணைந்தனர்.
(வி-ரை.) திருப்பள்ளி யெழுச்சிக்கு - திருப்பள்ளி எழுச்சி என்னும் வழிபாட்டுக் காலத்துக்குரிய; இது வைகறைப் பொழுதிற் செய்யப்படுவது; இது பற்றி முன் ஆளுடைய அரசுகள் அருள்பெறு நேரமாகிய திருப்பள்ளி எழுச்சியினைப் பற்றி உரைத்தவை பார்க்க. (1333)
திருப்பள்ளி எழுச்சிக்கு மலர் தொடுக்கும் - அவ்வக் காலத்துக்கு ஏற்றனவாய் விதிக்கப்பட்ட அவ்வம்மலர்களைத் தொடுக்க வேண்டுதலின் ஈண்டுத் திருப்பள்ளி எழுச்சிக்கு என்றார்.
தூயபணி - மலர்தொடுத்தல் மிகத்தூய்மையுடைய பணி என்பதாம். இது பற்றி முன் முருகநாயனார் புராணத்தும், எறிபத்த நாயனார் புராணத்தும், முன் 3380லும் உரைத்தவை பார்க்க.
பணிப்பொழுது ஆக - பணி செய்தற்கு உரிய பொழுது வர.
தொழில் புரிவார் - ஏவலராகிய சேடியர்கள்; இவர்கள் சங்கிலியாரது கனா நிகழ்ச்சியை அவர் சொல்லக் கேட்டவர்கள்; 3411 பார்க்க.
சேயிழையார் - போக - என்று கூட்டுக சேயிழையார் கோயிலின்முன் போத என்றும், ஆரூரர் - கோயிலின்முன் அணைந்தார் என்றும் இருவழியும் கூட்டுக; இருதிறமும் அங்குச் சந்திப்பது அவ்வோரிடமாதலின், அது குறிக்கும் கோயிலின் முன் என்றதொரு சொற்றொடர் ஈரிடத்தும் இயையும்படி இடையில்
காலமது ஆகவே குறித்து - "இவ்விரவே செய்க" (3399) என்று இறைவர் அருளினாராதலின், அதற்கிசைந்த நம்பிகள், நங்கை சங்கிலியாரைச் சந்தித்துக் கேட்டற்கும், இரவு கழியு முன் சபதம் செய்தற்கும் உரிய காலம் அதுவே பொருந்தியதென்று குறிவைத்து; முன்னராயின் சங்கிலியார் கன்னிமாடத்திருப் பாராதலின் அங்குச் செல்ல இயலாது; பின்னராயின் இரவு கழிந்துவிடும்; ஆதலின் ஏற்றகாலம் அதுவே என்று குறிவைத்தனர் என்க; இனம் பற்றி இடமுமதுவாகவே குறித்து என்க. நம்பிகள் இறைவர்பால் வேண்டிக் கொண்ட செய்தியும் குறிக்கொண்டு என்பது.
வரவு பார்த்து - சங்கிலியார் மலர் தொடுக்கும் பணிக்கும் வரும் வரவினை எதிர் பார்த்து; சங்கிலியார் வருமுன்பே நம்பிகள் அணைந்தனர் என்க. மேற்பாட்டுப் பார்க்க.
அணைந்தார் - ஆரூரர் - வினைமுற்று முன் வந்தது விரைவுக் குறிப்பு.