நின்றவரங் கெதிர்வந்த நேரிழையார் தம்மருங்கு சென்றணைந்து தம்பெருமான் றிருவருளின் றிறங்கூற, மின்றயங்கு நுண்ணிடையார் விதியுடன்பா டெதிர்விளம்பார் ஒன்றியநா ணொடுமடவா ருடனொதுங்கி யுட்புகுந்தார். | 256 | (இ-ள்.) நின்றவர்....கூற - வரபுபார்த்து நின்றவராகிய நம்பிக் அங்கு எதிரில் வந்த சங்கிலியார் பக்கத்திற் சென்று சேர்ந்து தமது இறைவரது திருவருளின் திறங்களை எடுத்துச் சொல்ல; மின் தயங்கு....விளம்பார் - மின் போலத்துவளும் நுண்ணிய இடையினையுடைய சங்கிலியார் அவ்வாறு விதித்ததற்குத் தமது உடன்பாட்டினை அவர் எதிரே கூறாராகி; ஒன்றிய....புகுந்தார் - இயல்பிற் பொருந்திய நாணத்துடன் சேடியர்களுடன் கூடி ஒதுங்கிச் சென்று கோயிலினுள்ளே புகுந்தனர். (வி-ரை.) நின்றவர் - முன்கூறியபடி சங்கிலியாரது வரவை எதிர்பார்த்து நின்றவராகிய நம்பிகள். எதிர்வந்த நேரிழையார் தம்மருங்கு சென்றணைந்து - தம் எதிரில் முன்பு வந்த சங்கிலியாரிடம் தம் கருத்தினைக் கூறி வெளிப்படுக்கும் அளவு அணுகி; இதனால் நம்பிகள் அவர்வரு முன்னரே அங்குச் சரர்ந்தனர் என்பதும், அவர் வரும் போது நெருங்காது வழிதந்து ஒருபுறம் ஒதுங்க வேண்டியவர் இச் செய்தி அறிவித்து இசைவுபெற்று அவர் முன்பு சபதம் செய்ய வேண்டிய நிலையில் அவ்வளவிற்கு அவர் மருங்கு சென்றணைந்தனர் என்றும், "அவள் முன்பு சென்றுகிடைத்திவ்விரவே செய்க" (3599) என்று இறைவர் ஆணையிட்டருளினராதலின் தாமே முற்படச் சென்று பேசத் தொடங்கினர் என்றும் கொள்க. தம் பெருமான் றிருவருளின் திறம் கூற திறம் - சபதம் செய்க என்ற ஆணையும், மற்றும் அதன் வரலாறும்; இருவர்க்கும் பெருமானாதலிற் தம் பெருமான்என்றார். இத்திறம் தமது செயலாயினும் இறைவர் அருளிய வழி நிகழ்வது என்பார் தம்பெருமான் திருவருளின் றிறம் என்று அவர்பாற் சார்த்திக் கூறினார். மின்தயங்கும் நுண்ணிடையார் - மின்போலத் துவளும் நுண்ணிய இடையினையுடைய சங்கிலியார்; இடை, மின்போலத் துவளுதலும், சிறிதாய் இருந்தலும் பெண்களின் உடற்கூற்றின் உயர்ந்த இலக்கணம் என்ப. தயங்குதல் விளங்குதல்; மயங்குதல் என்று கொண்டு மின்னும் இடைக்கொப்பாகாது மயங்கும் என்றுரைத்தலுமாம். விதி உடன்பாடு எதிர் விளம்பார்....ஒதுங்கி - இஃது மிக உயர்வாகிய தன்மை நவிற்சியணி; விதி - இறைவரது திருவருள் முறைமை; விதிக்கு என நான்கனுருபு விரிக்க; உடன்பாடு - அதற்குத் தாம் உடன்பட்ட நிலையினை; உடன்பாட்டினை; இரண்டனுருபு தொக்கது; எதிர்விளம்பார் - தமது நாயகராக வரும் நம்பிகளின் எதிரில் வெளிப்படச் சொல்லாதவராகி; விளம்பார் - எதிர்மறை வினை முற்றெச்சம்; சொல்ல மாட்டாதவராய் என்றதும் குறிப்பு. ஒன்றிய...ஒதுங்கி - எதிர் விளம்பாமைக்கும் ஒதுங்குதலுக்கும் காரணம் பெண்மைக்கு குணமாகிய நாணம் என்றதாம்; மடவார் - சேடியர். மடவாருட னொதுங்குதல் - அவர்கள் கூட்டத்தினுடன் ஒதுங்கி மறைந்து கொள்ளுதல். எதிர் விளம்பாமையும் நாணுடன் ஒதுங்குதலும் முதலியன தலைவனைக்கண்ட போது தலைவியர்கள்பால் நிகழ்வன; ஈண்டு மொழிபெற வருந்துதல் - மொழி பெறாதுகூறல் - நாணிக் கண்புதைத்தல் - குறையுற்று நிற்றல் - முதலாக வரும் அகப்பொருட்டுறைகள் நினைவு கூர்தற்பாலன. விதியுடன்பட்டெதிர் விளம்பார் - என்பது பாடமாயின், விதியினை உடன் பட்டாராயினும் அதனை எதிரிற் கூறமாட்டாராய் என்க. இதற்கு இவ்வாறன்றி, விதியாகிய உடன்படுதலும் எதிர்மறுத்தலும் கூறாதவராய் என்று உரைவகுத்தனர் இராமலிங்கத் தம்பிரானார். "விதியுடன்பாட் டெதிர் விளம்பார் - என்பது பாடமாயின் விதிப்படி உடன்பட்டமையால் எதிர் மொழி கொடாராய் என்றுரைக்க" என்பதும் மேற்படி தம்பிரானாருரை. |
|
|