அங்கவர்தம் பின்சென்ற வாரூர "ராயிழையீர்! இங்குநான் பிரியாமை யுமக்கிசையும் படியியம்பத் திங்கண்முடி யார்திருமுன் போதுவீ!" ரெனச்செப்பச் சங்கிலியார் கனவுரைப்பக் கேட்டதா தியர்மொழிவார், | 257 | (இ-ள்.) அங்கு....ஆரூரர் - அவ்விடத்துத் திருக்கோயிலினுள்அவர்கள் பின்னே சென்ற நம்பிகள்; "ஆயிழையீர்!....போதுவீர்!" எனச் செப்ப - "பெண்களே! இவ்வூரினின்றும் நான் பிரிந்து போகாத நிலையினை உங்கள் கருத்துக் கிசையும்படி சூளுரைத்துச் சொல்வதற்குச் சந்திரனைச் சூடிய முடியாரது திருமுன்பு வருவீர்களாக" என்று சொல்ல; சங்கிலியார்....மொழிவார் - சங்கிலியார் கண்ட கனவு வரலாற்றினை அவர்சொல்ல; முன்னமே கேட்டிருந்த சேடிமார்கள் விடை சொல்வார்களாகி, (வி-ரை.) அங்கு - அவர் கோயிலினுள் உட்புகுந்த அவ்விடத்து; அவர் - மடவாருடன் உட்புகுந்த சங்கிலியார் பின். ஆயிழையீர் - சங்கிலியார் மடவாருடன் கூடி ஒதுங்கிச் சென்றாராதலின் அவர் அனைவரையும் உள்ளடக்கிப் பன்மையிற் கூறினார்; முன்னர் நேரிழையார் (சங்கிலியார்) ஒருவர் தம்மருங்கு சென்றணைந்து கூறினார்; அவர் எதிர் விளம்பாமல் சேடியருடன் ஒதுங்கிச் சென்றாராதலின் அனைவரையும் பொதுவாகக் கூட்டி விளித்துப் பன்மையில் வினாவினார். உமக்கு இசையும்படி - சங்கிலியாரையும் உள்ளிட்ட அவர் அனைவரையும் குறித்துக் கேட்பினும் சங்கிலியாரது இசைவினையே அவர்கள் வெளிப்படுப்பாராதலின், உமக்கு - என்றது உம்தலைவியாகிய சங்கிலியாருக்கு என்ற பொருள் குறித்து நின்றது; போதுவீர் - என்றதும் இக்கருத்து. திங்கள் முடியார் திருமுன் - முன்னர் இறைவரிடம் தாம் வேண்டிக் கொண்ட தன் குறிப்பு உள்வைத்துக் கூறியபடி. (3402) கனவுரைப்பக் கேட்ட தாதியர் - இது முன் உரைக்கப்பட்டது. 3407, 3408 பார்க்க. ஆரூரர் - செப்பத் - தாதியர் - மொழி வா(ராய்) - என்ன, வன்றொண்டர் - என்று கூறுதலும் (3412), என - எனத்துணிந்து - என - போய் அணைந்தா(ராய்); காண - வலம்வந்து - என நின்று - (அப்) புரவலனார் விளம்பினார் (3414) என்று இந்நான்கு பாட்டுக்களையும் கூட்டி முடித்துக் கொள்க. இவை குறையுற வுணர்தல் முதலிய அகப்பொருட்(டுறைகளின்) இயல்பின் வருதல் காண்க. |
|
|