"எம்பெருமா! னிதற்காக வெழுந்தருளி, யிமையவர்கள் தம்பெருமான் றிருமுன்பு சாற்றுவது தகா"தென்ன நம்பெருமான் வன்றொண்டர் நாதர்செய லறியாதே "கொம்பனையீர்! யான்செய்வ தெங்?"கென்று கூறுதலும், | 258 | (இ-ள்.) "எம்பெருமான்!....தகாது" என்ன - "எமது பெருமானாவாரே! இதன் பொருட்டுத் தேவரீர் எழுந்தருளிச் சென்று தேவர்களின்தலைவராகிய இறைவரது திருமுன்பு சொல்வது தகுதியன்று" என்று கூற; நம்பெருமான்....அறியாதே; நமது பெருமானாராகிய வன்றொண்டர் இறைவரது செயலினை அறியாதே "கொம்பனையீர்....எங்கு?" என்று கூறுதலும் - "கொம்பு போல்பவர்களே! பின்னை யான் சபதம் செய்வதுதான் எங்கே?" என்று கூறுதலும், (வி-ரை.) எம்பெருமான்! - இது நம்பிகளை நோக்கித் தாதியர் விளித்தது; தமது தலைவிக்கு நாயகராக வருபவர் என அறிந்தாராதலின் தங்களுக்குப் பெருமான் எனக் கூறியது அக்குறிப்பு. இது அண்மைவிளி யாதலின் இயல்பாயிற்று. தலைவியினது கருத்தினைக் குறிப்பாலுணர்த்தியபடி காண்க. இதற்காக இமையவர்கள் தம்பெருமான் - திருமுன்பு - சாற்றுவது தகாது - இது மிகச் சிறிய காரியம்; பெருமான் திருமுன்பு - அது மிகப் பெரிய உயர்ந்த இடம்; இச்சிறிய மொழிகளை அப்பெரிய திருமுன்பு சொல்வது தகுதியன்று - ஏற்றதன்று என்பவை குறிப்பு. இறைவர் "அங்கு நமக் கெதிர்செய்யும் அதற்கு நீ இசையாதே" என்று முன் கட்டளை யிட்டதனைக் (3405) கேட்டு அறிந்துள்ளாராதலின் அவ்விடத்தினை மாற்றுதற்குத் தாதியர் கைக்கொண்ட உபாயம் இது; சபதம் செய்யும் இடம் எங்காயினும் அது செய்யும் செயலுக்கு உடன்பட்ட குறிப்பினாலும் பின்னர் "மகிழ்க்கீழே அமையு" மெனக் கூறலானும் தலைவியாரது உடன்பாடு குறிப்பா லுணர்த்தப்பட்டது காண்க. இவ்வாறுணர்த்துதலும், தலைவி தாமே கூறாது தோழியர் மூலம் உணர்த்துதலும் தமிழிலக்கணத்துள் அகப்பொருளி னியலென்க. நாதர்செய லறியாதே - உயர்ந்த தூய இடமாகிய இறைவர் திருமுன்பில் இது சாற்றத் தகாதென்றமையால் இதில் வேறுமொரு கருத்து இருத்தல் கூடுமென்பதுய்த்துணரத் தக்கது. என்னை? யாவரும் தத்தங் காரியத்தின் நலங் கருதி மிக உயர்வாகிய பொருளினையே நாடுவது இயல்பாதலான்; அன்றியும் எவ்விடமேயாயினும் இறைவர் எங்கும் நிறைந்துள்ளவராதலின் எவ்விடமும் அவர் திருமுன்பேயாதலும் உண்மை; இங்ஙனம் உய்த்துணரத் தக்கதாயினும், நம்பிகள் இவர் மொழியினுள் நாதர் செயலினை அறியாது, மேல் "செய்வது யானெங்கு?" என்று வினவியது மேல் விளைவு கருதி இறைவரது திரோதான சத்தியின் செயலாலென்க. எங்கு - வேறு எங்கு? வேறு என்பது (இசையெச்சம்.) கொம்பு அனையீர் - கொம்பு - பூங்கொம்பு. |
|
|