மாதரவர் "மகிழ்க்கீழே யமையு"மென, மனமருள்வார் "ஈதலரா கிலுமாகு மிவர்சொன்ன படிமறுக்கில்; ஆதலினா லுடன்படவே யமையு"மெனத் துணிந்"தாகிற் போதுவீ"ரெனமகிழ்க்கீ ழவர்போதப் போயணைந்தார். | 259 | (இ-ள்.) மாதரவர்....மருள்வார் - அதற்கு அப்பெண்கள் திருமகிழின் கீழே செய்தலே பொருந்தும் என்று சொல்ல, அது கேட்டு மனமருட்சியடைவாராய்; ஈதலராகிலும்....அமையும் எனத் துணிந்து - இவர் சொன்னபடி செய்யமறுத்தால் ஈது பழிச்சொல் லாகிலுமாம்; ஆகையினால் அவ்வாறே செய்வதற்கு உடன்படுதலே பொருத்தம் என்று துணிவுகொண்டு; ஆகில்...போய் அணைந்தார் - அஃது உமது கருத்தாகில் அவ்வாறு நான் சபதம் செய்வதற்கு உடன் வருவீராக என்று கூறி அவர்கள் மகிழின் கீழே செல்லத் தாமும் போய் அணைந்தாராகி, (வி-ரை.) மாதரவர் - முன்கூறியவாறு மொழிந்த தாதியர்; அவர் - முன்னறி சுட்டு. மகிழ்க்கீழே அமையும் - அமையும் - செய்தல் அமையும். அமையும் - சாலும் - போதும்; முன் இதற்காக -(3412) என்று இதனைச் சிறியகாரியம் என்ற குறிப்புப்படக் கூறியதனைத் தொடர்ந்து அதற் கிதுபோதும் என்ற பொருள்படக் கூறியதும் காண்க. மகிழ் - மகிழமரம். (3402) மருள்வார் - தாம் இறைவரை வேண்டிய நிலை இவர்கள் திருவருளால் அறியவந்து தமக்கே இடர்ப்பாடாக நேர்ந்ததனைக் குறித்து மனமருட்சி விளைந்தது; மருட்சி - மேற் செயல் துணியமாட்டாது மனமயங்கும் உள்ள நிகழ்ச்சி. "ஈது...அமையும்" எனத்துணிந்து - இது நம்பிகள் மனமருட்சியில் இருவழியும் எண்ணமிட்டு ஆய்ந்து ஒருவழி துணிபு கொண்ட நிலை; அலர் - பழிச்சொல்; பலரறிந்து புறங்கூறுதல், ஈது - இந்நிகழ்ச்சி; மறுக்கில் - ஈது அலராகிலுமாகும் என்க. மறுத்தலாவது - அவர் குறித்தபடி மகிழ்கீழ்ச் சபதம் செய்யாமை; மணம் நிறைவேறாமையுடன் அலரும் ஆகும். அலர் - பெண்களை வஞ்சிக்க முயன்றார் என்ற பழிச் சொல். குறித்தபடி செய்யின் பதிதோறும் கும்பிடும் கடமைக்கு விலக்காதல் ஒன்றுமே நிகழும்; ஆனாலும் அதுபற்றி இறைவரருளை எவ்வாற்றானும் பெறலாம்; பழிச்சொல்லை மாற்றலரிது; ஆதலின் உடன்படவே அமையும் என்றிவ்வாறெல்லாம் எண்ணி அவர் கூறிய அவ்வாறே செய்யத் துணிந்தனர் என்க. ஆகில் - உமது கருத்து இதுவேயாகில்; அவர்போத - அவர்களும் உடன் செல்ல. அணைந்தார் - அணைந்தாராய்; முற்றெச்சம். அணைந்தார் - விளம்பினார் என்று மேற்கூட்டுக. முற்றாகக் கொள்ளினும் இழுக்கில்லை. |
|
|