பாடல் எண் :3414

தாவாத பெருந்தவத்துச் சங்கிலியா ருங்காண
மூவாத திருமகிழை முக்காலும் வலம்வந்து
"மேவாதிங் கியானகலே" னெனநின்று விளம்பினார்
மூவார்தண் புனற்பொய்கை முனைப்பாடிப் புரவலனார்.
260

(இ-ள்.) தாவாத....காண - கெடாத பெருந் தவமுடையாராகிய சங்கிலியாரும் காணும்படி; மூவாத...வலம் வந்து - என்றும் அழியாத திருமகிழினை மூன்று தரமும் வலமாகச் சுற்றி வந்து; மேவாதிங்கு....விளம்பினார் - இங்குப் பொருந்தியிராது நான் நீங்கமாட்டேன் என்று நின்று திருந்தச் சபதமாக எடுத்துச் சொன்னார்; பூவார்..புரவலனார் - பூக்கள் நிறைந்த குளிர்ந்த நீர்த்தடங்களையுடைய திருமுனைப்பாடி நாட்டின் தலைவராகிய நம்பிகள்.
(வி-ரை.) தாவாத பெருந்தவத்துச் சங்கிலியார் - முன்பு, "சாருந்தவத்துச் சங்கிலி" (3393) என்றதும் அவ்விடத்துரைத்தவையும் பார்க்க.
தாவாத - கெடாத - அழியாத; இத்தன்மை பற்றி முன்னர்க் குறித்ததனோடு ஈண்டும் குறித்தமை அங்குத் தொடக்கம்பெற்ற நிகழ்ச்சி இங்கு இப்பாட்டின் நிகழ்ச்சியுடன் முடிகின்றமையின் அது குறித்தற்கு. "தாவே வலியும் வருத்தமும் கேடும்";
சங்கிலியாரும் காண - சேடியர் மட்டுமன்றிச் சங்கிலியாரும் என்று உம்மை இறந்தது தழுவிய எச்ச உம்மை. நம்பிகள் தம்பொருட்டு இது செய்யத் தாம் கண்ணாற் கண்டிருப்பதும் பாவமாம் என்று பின்னர் எண்ணி வருந்தும் சங்கிலியாரும் என்று உம்மை உயர்வு சிறப்பின்கண் வந்த தென்றலுமாம்.
மூவாத - மூத்தலில்லாத; அழியாத; பழையதாய் முற்றிஅழியாது எந்நாளும் இருக்கின்ற. முக்காலும் வலம் வருதல்- சபதம் செய்தற்குரிய முன்னங்கமாகிய சடங்கு; நின்று விளம்புதல் - என்பதும் சடங்கு.
"மேவாது இங்கு....அகலேன்" என்றது சபதம்; வாயினாற் கூறும்பகுதி; மூன்று முறை வலம் வருதலும் நின்று கையுயர்த்திச் சூளுரைத்தலும் மெய்ச்சடங்கு; மெய்ச்சபதவினை - என மேற்கூறும் குறிப்பும் காண்க. யான் இங்கு மேவாது அகலேன் என்க.
பூவார் தண்....புரவலனார் - இச்சபத வினை முடித்தலின், நம்பிகள்பால், உள்தடுமாற்றம் புறத் தடுமாற்றத்தை விளைக்க, அது கருவிகளின் தடுமாற்றத்தை விளைக்க, அது செயல் முறை மெய்ம்முயற்சியினை விரைந்து நிகழாது தடுக்கச் செயலில் தாமதம் நிகழ்ந்தமை குறிக்க, இப்பகுதி விரைந்துபடிக்க இயலாதவாறுயாப்பும் சொல்லும் பொருளும் அமைதிபெற நிற்கின்றது ஆசிரியரது தெய்வக் கவிநலம்.1
விளம்பினார் - திருத்தமாக உரத்துக் கூறுதல் குறிப்பு.