பாடல் எண் :3415

மேவியசீ ராரூரர் மெய்ச்சபத வினைமுடிக்கக்
காவியினேர் கண்ணாருங் கண்டுமிக மனங்கலங்கிப்
_________________________________________________
1. இதுபற்றி எனது சேக்கிழார் பார்க்க.
"பாவியே னிதுகண்டேன் றம்பிரான் பணியாலெ"ன்
றாவிசோர்ந் தழிவாரங் கொருமருங்கு மறைந்தயர்ந்தார்.
261

(இ-ள்.) மேவியசீர்....முடிக்க - பொருந்திய சிறப்பினையுடைய நம்பியாரூரர் மெய்ச்சபதமாகிய வினையினை இவ்வாறு நிறைவேற்ற; காவியினேர்...கலங்கி - நீலமலர்போன்ற கண்ணினையுடைய சங்கிலியாரும் அதனைக் கண்டு மனம் மிகவும் கலங்கி; பரவியேன்...என்று - தம்பிரானருளிச் செய்தமையினாலே பரவியேன் இதனைக்கண்டேன் என்று நினைந்து; ஆவி....அயர்ந்தார் - உயிர் சோர மனம் அழிவுறுவாராகி அங்கு ஒருபுறம் மறைந்து அயர்ந்தனர்.
(வி-ரை.) மேவியசீர் - மேவிய - சிறப்புக்கள் இவரை நாடியடைந்து தாம் சிறப்புப் பெற்றன என்பது.
மெய்ச் சபத வினை முடிக்க - மெய் - உடம்பு என்ற குறிப்புத் தந்து நின்றது, கால்கள் வலம்வரக், கைதூக்க, வாய் சூளுறவு கூற என்றிவ்வாறு உடம்பின் புறக்கருவிகள் தம்மளவிலே தொழிற்பட, மனம் மருண்டு தடுமாறி ஒருவாறு தேறித் துணிந்தும் நிலைபெறாது அலையச், செயல் முற்றிய நிலைக்குறிப்பு. மெய் -
உண்மை. நம்பிகள் வேண்டியவாறே இறைவர் அங்கு மகிழின் கீழ் வெளிப்பட வீற்றிருந்தமையின் இஃது அவர் திருமுன்பு செய்த உண்மைச் சபதமாய் முடிந்தது. இவ்வாறன்றி நம்பிகள் முன் எண்ணியருளியவாறு திருக்கோயிலில் இறைவரது திருமுன்பு செய்திருக்கக் கூடுமாயின் அதன் நிலை வேறாம் என்பது தொனி.
காவியினேர் கண்ணார் சங்கிலியார்; இன் - சாரியை. நேர் - உவம வுருபு. "காவியிருங் கருங்குவளை கருநெய்தல் கண்காட்டும்" (தேவா); கண்ணின்தன்மைகளாகிய அன்பு - மென்மை - இனிமை முதலியவை முற்றும் கொண்ட நோக்க முடைமை குறிக்க இங்கு இவ்வுவமை கூறி ஓதினார்; "பைங்குவளைக் கார்மலரால்...எங்கள் பிராட்டியு மெங்கோனும் போன்றிசைந்த" (திருவா. திருவெம் பாவை - 13). என்னை? நம்பிகள்பால் வைத்த அன்பின் பெருக்கினாலே அவர் தம்மைப் பிரியாதிருக்க இச்சபத வினை முடியக் காண்டலான் என்பது.
கண்டு - வெறும் பார்வையளவானன்றி மனமுள்ளூறக் கண்டு என்பதாம். இஃது அனுபவம் கலந்தது; "கண்களா னந்தக் கலுழிநீர் பொழிதரக் கண்டார்" (3243); "சங்கிலியாருங் காண" (3414) என்றதும், பின்னர் "இது கண்டேன்" என்பதும் காண்க; காட்சி என்னும் அகத்துறையே அகப்பொருள் நிகழ்ச்சிப் பகுதிகளுக்கெல்லாம் தோற்றுவாயாகி முதலில் நிற்பதும் கருதுக.
மிகமனங்கலங்கி....அயர்ந்தார் - இறைவர் திருமுன்பு சபதவினை முடித்தல் என்பது இயல்புக்கு மாறாகியதொரு வலிந்த செய்கை; இதனைத் தமது நாயகர் தம் பொருட்டுச் செய்வதற்குத் தாம் காரணமாயிருந்தது கொடுமை என்று எண்ணிச் சங்கிலியார் வருந்தி மனம் அழிந்து அயர்ந்தனர். ஒருமருங்கு மறைதல் இத்தகைய தகாத செயலுக்குக் காரணமாயிருந்த தம்மை மறைத்துக்கொள்ளுதல் ஒரு குற்றம் செய்தார்பால் நிகழும் மெய்ப்பாடு. அழிதல் - மனமுடைதல்; இது - சபதவினை காணுதல்.
பாவியேன் - பாவம் செய்தேனாதலின் என்று தம்மைத்தாம் நொந்து கொண்டது. "பாவியேன்கண்டவண்ணம்" (818) என்று கண்ணப்பர் இரங்கியது காண்க.
தம்பிரான் பணியால் - "அவர் தாம் திருவாரூரின்கண் மிகவு மகிழ்ந்துறைவது" (3396) என்றது மட்டில் சங்கிலியார் கூறினாரன்றி, அதற்குப் பரிகாரம் ஒன்றும் கூறினாரலர்; "பிரியாமைக்கு ஒரு சபதம் செய்வான்" என்றதும், "நமக்கெதிர் செய்வதற்கு இசையாதே மகிழ்க்கீழே கொள்க" என்றதும் இறைவர் தாமே பணித்தவை. ஆதலின் அவர் பணியால் என்றார். இறைவர் பணித்திராவிடின் சங்கிலியாரது அன்பு கனிந்த திருவுள்ளம் இதில் தாழாது என்பதாம். ஆயின், இறைவர் இவ்வாறு கொடிய செயலினை நம்பிகள் செய்யவும், அதனைச் சங்கிலியார் காணவும் பணித்தது அருளுடைய பரமாகிய இறைவர்பா லருளின்மையோ? எனின், அற்றன்று; இருவர்பாலும் வைத்த பேரருளின் றிறத்தாலே இவ்வாறு பணித்தருளினர் என்க; நோயின்றன்மைக் கேற்ப வலிந்த முறை செய்தும் தீர்க்கும் மருத்துவன் போல என்று கண்டுகொள்க; இம்மாபுராணத்தினுள் வருவனவாய் உலகர்க்கு மிகக் கொடியனவாகக் காண்பனவாகிய எத்துணையோ செயல்கள் எல்லாம் இறைவர் பணித்த வழியாகிய அருட்செய்கைகளே யாமாறும் இங்கு நினைவுகூர்க. இக்கருத்தினை மேற்பாட்டில் நம்பிகள் மகிழ்ந்து துதிக்குமாற்றாலும் கண்டுகொள்க.
அயர்தல் அறிவழிதல். தம்பிரான் பணியென்று கண்டுவைத்தும் அயர்ந்தது பெண்மையின் இயல்பென்க. "மேற்றானீ செய்வனகள் செய்யக் கண்டு வேதனைக்கே யிடங்கொடுத்து நாளு நாளு மாற்றேன்" (தாண் - ஆவடுதுறை).