திருநாவ லூராளி தம்முடைய செயன்முற்றிப் பொருநாகத் துரிபுனைந்தார் கோயிலினுட் புகுந்திறைஞ்சி "அருணாளுந் தரவிருந்தீர் செய்தவா றழகி!"தெனப் பெருநாம மெடுத்தேத்திப் பெருமகிழ்ச்சி யுடன்போந்தார். | 262 | (இ-ள்.) திருநாவலூராளி....முற்றி - திருநாவலூர்த் தலைவராம் நம்பிகள் தமது செயலாகிய சபதவினையினை முடித்து; பொருநாகத்துரி புனைந்தார்....இறைஞ்சி - பொருகின்ற யானையின்தோலை அணிந்த இறைவரது திருக்கோயிலினுள்ளே புகுந்து வணங்கி; "அருள்நாளும்...அழகிது" என - நாளும் அருளேதர இருந்த இறைவரே! தேவரீர் செய்த ஆறு இது அழகாயிருந்தது என்று; பெருநாமம்......போந்தார் அவரது உயர்ந்த நாமமாகிய திருவைந் தெழுத்தினை எடுத்து மிகத் துதித்துப் பெருமகிழ்ச்சியுடனே புறம் போந்தனர். (வி-ரை.) தம்முடைய செயல் - தமக்கு இறைவர் பணித்த சபதவினை. "ஒருசபதம் அவள் முன்பு சென்று கிடைத் திவ்விரவே செய்க" என்ற செயல்; (3399). கோயிலினுள் புக்கு - கோயிலினுள்புக நின்ற நம்பிகள், அங்குப் போகாமல் சேடியர் கூறியபடி மகிழின் கீழ்ச் சபதம் செய்ய வந்தணைந்தனராதலின் அச்செயல் முற்றியபின் கோயிலினுள்ளே புகுந்தனர். நாளும் அருள் தர இருந்தீர் இது செய்தவாறு - அழகு! என்க. நாளும் - நாணாளும்; அனுதினமும்; எந்நாளும் என்றதனால் இனி, இச்சங்கட நிலைமையினின்றும் நீங்கப் பெறுதற்கும் என்றது குறிப்பு. தர என்றது மக்குறிப்பு; இது செய்தவாறு அழகு - இவ்வாறு மகிழ்க்கீழே கொள்ளும்படி அவர்களுக்குப் பணித்தது. இதனைக் கருதலளவையால் நம்பிகள் துணிந்து கொண்டனர் என்க. நம்பிகளுக்கும் இறைவர்க்கும் மட்டில் அமைந்த இச்செய்தியினை (மகிழின்கீழ் இறைவர் விளங்க வீற்றிருப்பதும் அங்குச் சபத முடிப்பதுமாகிய செய்தியினைச்) சங்கிலியாரும் தோழியருமறியச் செய்தல். அவர் பெருநாமம் மிகஏத்தி - இறைவரது பெருந் திருநாமமாகிய திருவைந் தெழுத்தினால் துதித்து; "ஆலைப் படுகரும்பின் சாறு போல, அண்ணிக்கு மஞ்செழுத்தி னாமத் தான்காண்" (தாண்). திருவருள் வெளிப்பாடு கண்ட போதெல்லாம் இவ்வாறு சீபஞ்சாக்கரத்தைப் பலமுறை செபித்தல் வேண்டுமென்பது விதியும் மரபுமாம். அழகு - இகழ்ச்சிக்குறிப்பு உட்கொண்ட புகழ்ச்சிமொழி. தோழமையாற் கூறியது. பெருமகிழ்ச்சியுடன் போந்தார் - இப்போது இது நிகழ்ந்தது அருள்; இது போல இனித் தொடர்ந்து வரும் நிகழ்ச்சிகளிலும் காக்க நிற்பதும் அருளே;என்ற துணிபு உணர்ந்தமையால் மகிழ்ந்தனர். குறித்த சபத முடிந்தமையால் திருமணமும் நிறைவாகப் பெறும் மகிழ்ச்சியுமாம். இவ்வாறன்றிச் சங்கிலியாரும் திருவருட்பணி என்றுணர்ந்திருந்தும் மனமழிந்தயர்ந்தது மென்மையாகிய பெண்மையன்பினியல்பு; ஈண்டு நம்பிகளின் நிலை திருவருட்டுணிபுடையஆண்மையினியல்பு. போந்தார் - தமது திருமாளிகையிற் சென்றனர். அழகிதென எடுத்தேத்தி - "பொன்னவலுங் கொன்றையினாய்; ‘போய் மகிழ்க் கீழீரு' வென்று, சொன்னவெனைக் காணாமே சூளுறவு மகிழ்க்கீழே, என்ன வல்ல பெருமானே" (திருவெண்பாக்கம் - 9) என்பது தேவார அகச்சான்று. |
|
|