பாடல் எண் :3417

வார்புனையும் வனமுலையார் வன்றொண்டர் போனதற்பின்
தார்புனையு மண்டபத்துத் தம்முடைய பணிசெய்து
கார்புனையு மணிகண்டர் செயல்கருத்திற் கொண்டிறைஞ்சி
ஏர்புனையுங் கன்னிமா டம்புகுந்தா ரிருள்புலர.
263

(இ-ள்.) வார்புனையும் வனமுலையார் - கச்சணிந்த அழகிய முலையினையுடைய சங்கிலியம்மையார்; வன்றொண்டர்...பணி செய்து - வன்றொண்டராகிய நம்பிகள் அவ்விடம் விட்டுச் சென்றபின்னர், மாலைகள் கட்டும் திருப்பூமண்டபத்திலே அணைந்து தமது திருப்பணியினைச் செய்து முடித்து; கார்புனையும்...இறைஞ்சி - மேகத்தை ஒத்த அழகிய கண்டத்தினையுடைய இறைவரது அருளிச் செயல்களைத் தமது கருத்தினுட் கொண்டு பணிந்து; ஏர்புனையும்....இருள்புலர - அழகு பொருந்திய கன்னிமாடத்தினுள்ளே இருள் நீங்கி விடியும் பொழுது புகுந்தனர்.
(வி-ரை.) இப்பாட்டு நம்பிகள் சபதம் முடித்தபின் நங்கை சங்கிலியாரது செயலைக் கூறிற்று; முன்பாட்டில் நம்பிகள் செயலைக் கூறியதுபோல. அது முன்னர் நிகழ்ந்ததனால் அந் நிகழ்ச்சி முறைபற்றி முன்னர் உரைத்தார்.
போனதற்பின் - என்றது காண்க; மகிழின் கீழிருந்து முதலில் நீங்கியவர் நம்பிகள்.
வார்புனையும்....பணிசெய்து - சபதவினை முற்றியபின் நம்பிகள் திருக்கோயிலுட்சென்று விண்ணப்பித்துச் சென்றாராகச், சங்கிலியார் திருப்பூமண்டபத்தினுட்சென்று தமது நியதியாகிய பணிசெய்து முடித்துப் பின் இறைஞ்சிப் போந்தனர்.
தம்முடைய பணி - தாம் நியதியாய் அன்று வரை செய்து வந்த பூமாலைப் பணி; (3376 - 3377). தமக்கு உலகியலில் இன்பத்துன்பங்கள் நேரும் போதுதாந்தாம் மேற்கொண்டுள்ள சிவப்பணி அடியார் பணிகளைக் கைந்நழுவ விடுவார் பலர்; சங்கிலியாரது இந்தச் சிவவாழ்க்கை யொழுக்கம் உலகர் கண்டு பின்பற்றின் நலந்தரும்.
கார்புனையும் மணிகண்டர் புனையும் - உவமஉருபு. கார் - மேகம்; கார் - கருமை நிறம் என்று கொண்டு கருநிறத்தைப் புனைந்து கொண்ட என்றலுமாம்; இப்பொருளில் புனையும் - என்பதற்கு வைத்த என்று பொருள்கொள்க.
செயல் - இருபாலும் இறைவர் செய்த அருளிப்பாடுகள்.
கருத்திற் கொள்ளுதல் - மறவாது மனத்தில் வைத்து எண்ணுதல்.
இருள்புலரப் - புகுந்தார் - என்று கூட்டுக; இருள்புலர்தல் - இருள் நீங்கிப் பொழுது விடிதல்; இருள் - புலரியிருள்; திருப்பள்ளி எழுச்சிக்கு மலர்தொடுக்கும் பொழுதாகிய வைகறையாமத்திற் சென்ற அம்மையார் தம் செயல் முற்றிப் புலரும்பொழுது மீண்டனர் என்க.
இனி, இருள் என்பது திருக்கயிலை நிகழ்ச்சி காரணமாக வந்த இவ்வுலக வாழ்வினைக் குறிப்பாலுணர்த்தியதாகக் கொண்டு, அவ்வினைப் பயன் அன்று முற்றி நீங்கச் சென்று புகுந்தார் என்றலும் குறிப்பு. அன்றே திருமண நிகழுநாளாதலின், முன்னாட்களில் நாடோறும் பணிமுற்றி மீண்டு வந்து புகுந்தது போலன்றி அன்று இருள் புலரப்புகுந்தார் என்றதும் அக்குறிப்பு; இனிப், புலர - புலரும் பொருட்டு என்று கொண்டு, உலகத்தார் திருவருளின் உண்மை கண்டு அறியாமை நீங்க என்ற குறிப்புப்பட நின்றமையும் காண்க,
புனையும் - இப்பாட்டில் நான்கடிகளினும் புனையும் என்பது சொற்பின் வருநிலை; அன்று கலியாணத்தின் பொருட்டுச் சங்கிலியாரைப் பூண்புனைந்து அலங்கரிக்கும் பொருள் நிகழ்ச்சிக்கேற்ப நின்ற சொல்லமைதி.