பாடல் எண் :3418

அன்றிரவே யாதிபுரி யொற்றிகொண்டா ராட்கொண்ட
பொன்றிகழ்பூண் வன்றொண்டர் புரிந்தவினை முடித்தருள
நின்றபுகழ்த் திருவொற்றி யூர்நிலவு தொண்டர்க்கு
மன்றல்வினை செய்வதற்கு மனங்கொள்ள வுணர்த்துவார்,
264

(இ-ள்.) அன்றிரவே - அன்றைய இரவிலே; ஆதிபுரி...முடித்தருள - ஆதிபுரியாகிய ஒற்றியூரை உடையவராகிய இறைவர் தாம் ஆட்கொண்ட பொன்விளங்கும் அணிகளை அணிந்த வன்றொண்டர் நினைந்த மணச் செயலை முடித்துக் கொடுக்கும் பொருட்டு; நின்ற புகழ்....உணர்த்துவார் - நிலைபெற்ற புகழினையுடைய திருவொற்றியூரில் நிலவும் தொண்டர்களுக்கு அக்கலியாணத்தினைச் செய்து முடிக்கும்படி மனங்கொள்ளும்படி உணர்த்துவாராய்,
(வி-ரை.) அன்றிரவே - சபதவினை முற்றிய அன்றிரவிலேயே.
இரவு - வைகறையில் சபதவினை முற்றிய பின்னும் புலருமுன்னும் எஞ்சியிருந்த இராப்பொழுது.
வினைமுடித்தருள - ஒற்றிகொண்டார் - தொண்டர்க்கு - மன்றல் வினை செய்வதற்கு மனங்கொள்ள அன்றிரவே - உணர்த்துவார் - என்று கூட்டி உரைத்துக் கொள்க.
ஆதிபுரி - திருவொற்றியூரின் முதற்பெயர்; ஒற்றிகொண்டார் - ஆதிபுரியாயிருந்தும் அதனை ஒற்றியாக உகந்து கொண்டவர் என்றது கவிநயம்.
ஒற்றிகொண்டார் - ஆதிபுரியாகிய ஒற்றியூரை உகந்திடங் கொண்டவர் என்க. ஆதிபுரியை ஒற்றிகொண்ட சிவபிரானால் ஆட்கொள்ளப்பட்டவராகிய வன்றொண்டர்; ஆதிபுரி - திருவொற்றியூர் என்பது முன்னுங் குறித்தது காண்க. "எண்ணில் பெருமை ஆதிபுரி" (3354).
ஆட்கொண்ட - வன்றொண்டர் - புரிந்தவினை - முடித்தருள - தம்மால் வலிந்து ஆளாகக்கொள்ளப்பட்ட வன்றொண்டராயின காரணத்தால் அவர் எண்ணிய வினையை முடித்துக் கொடுத்தருள வேண்டிய கடமைப்பாடுபற்றி என்பது குறிப்பு.
தொண்டர்க்கு - மன்றல் வினை செய்வதற்கு - மனங்கொள்ள உணர்த்துவார் - முடித்தருளக்கொண்ட தமது அருளின் நினைவினை (சங்கற்பத்தை) நிறைவேற்று வதற்காக அந்த மணவினையைச் செய்வதற்குத் தமது திருவொற்றியூர்த் தொண்டர்க்கு அறிய உணர்த்துவாராகி; மன்றல்வினை - கல்யாணச் சடங்குகள்; மனங்கொள்ள - தெளிவுபட; உணர்த்துவார் - கனாவில் பலர்க்கும் ஒருங்கே தோன்றி ஆணையிடுதல்; 1068; 2094 - 2097 - என்ற இவை முதலியவை பார்க்க.
உணர்த்துவார் - உணர்த்துவாராகி; முற்றெச்சம்.
உணர்த்துவார் - உணர்த்துதலும் - தொண்டர் - எழுவார் - (3419) - பதியோருடன் ஈண்டிச் - செய்தளித்தார் - (3420) என்று இம்மூன்று பாட்டுக்களையும் தொடர்ந்து முடித்துக்கொள்க.