"நம்பியா ரூரனுக்கு நங்கைகங் கிலிதன்னை இம்பர்ஞா லத்திடைநம் மேவலினான் மணவினைசெய் தும்பர்வா ழுலகறிய வளிப்பீ"ரென் றுணர்த்துதலுந் தம்பிரான் றிருத்தொண்ட ரருடலைமேற் கொண்டெழுவார், | 265 | (இ-ள்.) "நம்பியாரூரனுக்கு...அளிப்பீர்" என்று உணர்த்துதலும் - நம்பியாரூரனுக்கு நங்கையாகிய சங்கிலியை இவ்வுலகத்திலே நமது கட்டளையினாலே சடங்குகளுடன் கல்யாணஞ் செய்து தேவருலகத்துள்ளோரும் அறியும்படி கொடுப்பீர்களாக என்று உணர்த்தியருளுதலும்; தம்பிரான்....மேற்கொண்டெழுவார் - தம்பெருமானது திருத்தொண்டர்கள் அவ்வருளிப் பாட்டினைத் தலை மேலே தாங்கி எழுவார்களாகி, (வி-ரை) "நம்பி...அளிப்பீர்!" - இது இறைவர் திருவொற்றியூர்த் திருத்தொண்டர்களுக்குக் கனவில் உணர்த்தி யருளிய ஆணை; நம்பி - ஆடவரிற் சிறந்தோன்; இம்பர் ஞாலத்திடை - மணவினை செய்து - அளிப்பீர் - திருக்கயிலையில் நம்பிகள் "அவர் மேன்மனம் போக்கிடக், காதன் மாதருங் காட்சியிற் கண்ணினார்" (35) என்ற வரலாற்றின்படி பெறநின்ற செயலாய் இவ்வுலகில் மணவினை நிகழச் செய்து என்றபடி. நம் ஏவலினால் அளிப்பீர் - என்றது, "திருவொற்றியூர் அணைந்து சிவனாரருளிற் செல்வன்" (3367), "செல்கதியும் கண்ணார் நுதலார் திருவருளாலாக" (3372) என்று நம்பால் தம்மை ஒப்புவித்தனராதலின் சங்கிலியாரை மணஞ் செய்தளிப்பது நமது கடன்; ஆதலின், நம் ஏவலினால் நீர் அளிப்பீர் என்றபடியாம். மணவினை செய்து - கற்பியலின் விதித்தபடி நூல் விதிச் சடங்குகள் எல்லாம் செய்து. உம்பர் வாழ் உலகறிய - மணவிதியின்படி உள்ள சடங்குகளில் தீக்கடவுள் முன்னர் உரிய அவ்வத் தேவர்களை அவ்வவர்க்கும் உரிய மந்திரங்களால் விளித்து அவிகொடுத்து வேள்வி நிகழ்த்துதலால் உம்பர் அறிய என்றார். உம்பரும் வாழ் உலகும் அறிய என்றுபிரித்து தேவர்களும் இங்கு வாழும் நிலவுலகத்தவரும் அறியும்படி என்றுரைக்கவும் நின்றது. உணர்த்துதல் - துயிலினிடையே உணரச் செய்து கட்டளை யிடுதல். தலைமேற் கொண்டு எழுவார் - தலைமேற் கொள்ளுதல் - முதற் பெருங்கடமையாகத் தாங்குதல்; எழுதல் - முயலுதல்; "உடனெழுந்தார்," |
|
|