பாடல் எண் :3420

மண்ணிறைந்த பெருஞ்செல்வத் திருவொற்றி யூர்மன்னும்
எண்ணிறந்த திருத்தொண்ட ரெழிற்பதியோ ருடனீண்டி
உண்ணிறைந்த மகிழ்ச்சியுட னும்பர்பூ மழைபொழியக்
கண்ணிறைந்த பெருஞ்சிறப்பிற் கலியாணஞ் செய்தளித்தார்.
266

(இ-ள்.) மண்ணிறைந்த...திருத்தொண்டர் - உலகில் நிறைந்த பெருஞ் செல்வத்தினை உடைய திருவொற்றியூரில் நிலைபெற்று வாழும் எண்ணிறைந்த திருத்தொண்டர்கள்; எழில் பதியோருடன் ஈண்டி - அழகிய அந்தத் திருப்பதியில் உள்ளவர்களுடனே கூடிவந்து; உள்நிறைந்த...செய்தளித்தார் - மனநிறைந்த மகிழ்ச்சியுடனே தேவர்கள் கற்பக முதலிய தேவதருக்களின் மலர்களை மழைபோலப் பொழயக் கண் களிகொள்ள நிறைந்த பெரிய சிறப்புக்களுடன் கல்யாணத்தைச் செய்து முடித்தனர்.
இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
(வி-ரை.) மண்ணிறைந்த பெருஞ் செல்வம் - உலகிற் சிறந்த செல்வங்களை உடைய நகரச் சிறப்பு. "சுற்றிவண டியாழ்செயுஞ் சோலையுங் காவுந்துதைந்திலங்கு, பெற்றிகண் டால்மற்றி யாவருங் கொள்வர் பிறரிடை நீ, ஒற்றி கொண்டாயொற்றி யூரையுங் கைவிட் டுறுமென்றெண்ணி, விற்றிகண் டாய்மற் றிதுவொப்ப தில்லிடம் வேதியனே" (திருவிருத்தம்) என்று அரசுகள் சுவைபட அருளுதல் காண்க.
எண்ணிறைந்த - இறைவரது திருவருள் தம் எண்ணத்தில் நிறைவித்த
தொண்டர் எழிற்பதியோருடன் ஈண்டி - தொண்டர்கள் ஏனைய அந்நகர மாந்தருடன் பெருகக் கூடி. தொண்டர் வேறு; பதியோர் வேறு; தொண்டர் - இறைவரால் உணர்த்தப்பட்டோர். (3418) பதியோர் - மணவினைக் குடனிருந்து காரியம் செய்யும் ஊரவர்.
உம்பர் பூமழை பொழிய - "உம்பர்வா ழுலகறிய" (3419) மணவினைகள் செய்யப்படுதலின் அவர்கள் ஏற்றுப் பூமழை பொழிந்தனர்.
கண்ணிறைந்த பெருஞ்சிறப்பு - மணவினை செய்யும் அணிகள் முதலிய சிறப்புக்கள்.
கலியாணம் - சுபங்களிற் சிறந்தது என்பது பெயர்ப் பொருள்; கல்யாண குணங்கள் என்புழிப் போல; அது மணத்திற்காகி வந்தது; இவ்வாறே பரவையார் திருமணமும் இறைவரது ஆணையினால் அடியார்கள் கூடிச் செய்தமை முன்உரைக்கப்பட்டது ஈண்டு நினைவு கூர்தற்பாலது (324 - 326)
எயிற்பதியோர் - செய்தமைத்தார் - என்பனவும் பாடங்கள்.