பாடல் எண் :3421

பண்டுநிகழ் பான்மையினாற் பசுபதிதன் னருளாலே
வண்டமர்பூங் குழலாரை மணம்புணர்ந்த வன்றொண்டர்
புண்டரிகத் தவள்வனப்பைப் புறங்கொண்ட தூநலத்தைக்
கண்டுகேட் டுண்டுயிர்த்துற் றமர்ந்திருந்தார் காதலினால்.
267

(இ-ள்.) பண்டுநிகழ் பான்மையினால் - முன்னை நாளில் நிகழ்ந்த நியதியினாலே; பசுபதிதன்...வன்றொண்டர் - பசுக்களுக் கெல்லாம் பதியாகிய சிவபெருமானது திருவருளினாலே, வண்டுகள் மொய்க்கும் மலர்களைச் சூடிய கூந்தலையுடைய சங்கிலியம்மையாரைத் திருமணம் செய்து கூடிய வன்றொண்டர்; புண்டரிகத்தவள்...தூநலத்தினை - திருமகளின் அழகமைப்பினை வென்ற அவரது தூயபெண் நலத்தினை; கண்டு...காதலினால் - பெருவிருப்பதினாலேயே கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் அனுபவித்து விரும்பியிருந்தனர்.
(வி-ரை.) பண்டு நிகழ் பான்மை - முன்னர்த் திருக்கயிலையின் நிகழ்ச்சியின் விளைந்த, நியதி; ஊழ்; "நற்பெரும் பான்மை கூட்ட" (258); "பண்டைவிதி கடைகூட்ட" (288) என முன்னர்ப் பரவையார் திறத்துக் கூறிய கருத்தினைத் தொடர்ந்து கூறியவாறு; இரண்டற்கும் நிகழ்ச்சி ஒன்றாதலின்; இது செய்யின் இது விளையும் என்று பண்டு தொட்டு நிகழும் விதியின்படி இதுவும் நிகழ்ந்தது எனப் பொது விதியினைக் குறித்த தென்றலுமாம். பான்மை ஊழ் - "பான்முளைதின்று" (நீதி நெறி விளக்கம் 50).
பசுபதி - பசு - உயிர்கள்; பசுபதி - உயிர்களுக்குத் தலைவர் என்ற இத்தன்மையாற்கூறியது, ஈண்டுச் சுந்தரரையும், அநிந்திதை கமலினி என்ற இருவரையும் இங்குச் செலுத்தி நுகர்வித்தும், மேல்வினைகள் ஏறாமற் காத்தும், தம்பாற் செலுத்தி யாட்கொண்ட நாயகராகிய நிலைபற்றி.
வண்டமர் பூங்குழல் - புதிய பூக்களைச் சூடிய கூந்தல்; புதிய பூக்களாதலின் தேனுண்ண வண்டுகள் மொய்த்தன. இனி, உத்தம வியலுடையாராகலின் அவரது கூந்தலின் இயல்பாகிய நறு நாற்றங் கண்டு வண்டுகள் விரும்பி வரும்படி அழகிய கூந்தல் என்றலுமாம். "அஞ்சிறைத் தும்பி!...மொழிமோ...கூந்தலின் நறியவு முளவோ நீ யறியும் பூவே" என்ற இறையனார் திருவாக்குக் காண்க. திருமணத்திலும், பின்னரும் பூக்கள் சூடி அலங்கரிக்கப்பெற்றவர் என்பதும் குறிப்பு.
மணம் - ஈண்டு விதிமணம் குறித்தது; "தக்க விதிமணத்தால்" (3395).
புண்டரிகத்தவள் வனப்பை - புண்டரிகத்தவள் - ஈண்டுச் செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகளைக் குறித்தது; அவள் அழகிற் சிறந்தவள் என்பது மரபாதலின்; வனப்பை என்ற குறிப்புமது; அழகினைப் பற்றிய அளவில் ஒப்புமை கொள்க என்றபடி; வனப்பு மேனியைப் பற்றிய பெண்மை நலங்களாகிய அமைப்பு முற்றுங்கொள்க. "கன்னிதன் வனப்பு"; (2993) என்று தொடங்கிப் பூம்பாவையாரது வனப்பின் தன்மைகளை ஆசிரியர் (2994 - 3007) விரித்தருளிய வகை எல்லாம் ஈண்டு வைத்துக் கொள்ளத்தக்கன.
புறங்கண்ட - வெற்றி கொண்ட; அதனினும் மேம்பட்ட.
தூநலம் - தூய்மையாகிய பெண்மை நலங்களெல்லாவற்றின் றொகுதி; தாம் வீழ்வார் மென்றொட் டுயிலி னினிதுகொல், தாமரைக் கண்ணா னுலகு" என்ற குறளின் கருத்து ஈண்டுணர்த்தப்படுதல் காண்க.
கண்டு....காதலினால் - காதல் - பெருவிருப்பம்; பெண்ணின்பாற் பெறும் இன்பம் ஐம்புலவின்பங்க ளாதலின் காணுதல் முதலிய ஐம்பொறிகளின் விடய நுகர்ச்சிகளும் கூறினார்; "கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும், ஒண்டொடி கண்ணே யுள" என்ற திருக்குறளின் சொல்லும் பொருளும் போற்றப்பட்ட திறம் காண்க. இது தமிழ் அகப்பொருணயம் கூறியபடி. அமர்ந்திருத்தல் - விரும்பி யிருத்தல்; "பன்னாளும் பயில்யோகம் பரம்பரையின் விரும்பினார்" (327)என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க; காதலினால் - முன்னை நாட் கண்ட காதல் காரணமாக; "வேறு வேறு காலங்களில் வேறுவேறு பொருள்களா ளனுபவிக்கப்படுவன ஒருகாலத்து இவள் கண்ணே யனுபவிக்கப்பட்டன என்பதாம்" என்பது பரிமேலழகருரை. "மண்ணின்மேற், கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு, மொண்டொடி கண்ணே யுளவென்று - பண்டையோர், கட்டுரையை மேம்படுத்தாள்" என்பது நம்பிகளின் தோழமை கொண்ட கழறிற்றறிவார் நாயனார் திருவாக்கு. (உலா)
அமர்ந்திருந்தார் - இதன் தன்மையினை மேல் 3423ல் விரிக்கின்றார்.